PUBLISHED ON : ஜூலை 23, 2017

மனித உடலின் வளர்ச்சி, இயக்கத்துக்கு ஏற்ப எலும்புகளிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. உடல் இயக்கமற்ற நிலையில் இருந்தால், ரத்த செல்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு எலும்புகளில் தாதுப் பற்றாக்குறை ஏற்படும். எலும்பு தேய்வதற்கும், வலி ஏற்படுவதற்கும் இதுவே முக்கிய காரணம்.
உணவு, உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தால், எலும்பு தேய்வு பிரச்னைக்கு தீர்வு காண முடியும். எலும்புகளின் அடிக்கட்டமைப்பை வலுவாக வைத்திருப்பவை புரதங்களே. கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள், எலும்புக்கு வலு சேர்க்கின்றன. எனவே, உடல் நல்ல இயக்கம் கொண்ட ஒருவருக்கு, கால்சியம் சத்து அதிகம் தேவைப்படுகிறது. கீரை, பச்சைக்காய்கறிகள், பால் ஆகியவற்றை தொடர்ந்து உண்டு வருவதன் மூலம், இந்த சத்துக்களை பெற முடியும்.
வயது, உழைக்கும் தன்மை இரண்டையும் கருத்தில் கொண்டு சரியான உணவு முறையை கடைபிடித்தால், எலும்பு தேய்மானத்தை தவிர்க்கலாம். எலும்பு தேய்மானம் ஏற்பட்டால், முழங்கால், இடுப்பு, கழுத்து, தோள், மணிக்கட்டு, முதுகில் திடீரென வலி ஏற்படும். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
கால்சியம் குறைபாடு, உடற்பயிற்சி இன்றி இருத்தல், எடை அதிகம் இருத்தல், மதுப்பழக்கம், புகைபிடித்தல், மெனோபாஸ், பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் கருப்பை அகற்றுதல் போன்ற காரணங்களால் ஏற்படும் எலும்பு தேய்மானமே, இத்தகைய வலியை உண்டாக்குகிறது.
எனவே, முப்பது வயதை கடந்தவர்கள், வைட்டமின் டி மற்றும் கால்சியம் இருக்கும் உணவு வகைகளை கட்டாயம் உண்ண வேண்டும். பச்சைக் காய்கறி, பால், முட்டை ஆகியவற்றில் வைட்டமின் டி அதிகம் இருக்கிறது. அது தவிர, வாரத்தில் சில நாட்களாவது, குறைந்தபட்சம், 15 நிமிடங்கள் வெயிலில் இருக்க வேண்டும்.
எலும்புகள் உறுதியிழப்பைத் தடுக்க, தினமும் அரை மணி நேரம் வாக்கிங் செல்ல வேண்டியதும் அவசியம். அத்துடன், உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வதும் நல்லது. நீச்சல் பயிற்சியும், ஏரோபிக்ஸ் பயிற்சியும் எலும்புகளை உறுதி செய்யும். எலும்பு தேய்மானம் ஏற்பட்டால், பிசியோதெரபிஸ்ட், மருத்துவர் வழிகாட்டுதலுடன் தசை வலுப்படுத்தும் பயிற்சிகளை செய்ய வேண்டும்.
சிறுவர், சிறுமியருக்கு, சிறு வயது முதலே, உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம், வயது முதிர்ந்த காலத்தில், எலும்புத் தேய்வு பிரச்னையில் சிக்கி அவதிப்படுவதை தவிர்க்க முடியும். சிறு வயது முதலே, கால்சியம் சத்துள்ள உணவுகளை உண்டு வருவதும் நல்ல பலன்களை தரும். கீரை வகைகள், கொள்ளு, உளுத்தம் பருப்பு, ராகி, வாழைப்பழம், ஆப்பிள், ஆரஞ்சு ஆகியவற்றில் கால்சியம் சத்து அதிகம் இருக்கிறது. இவை எலும்பு வலுவடைய உதவும்.
பெண்களின் மெனோபாஸ், 40 வயதுகளில் வருவதால், அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு கால்சியம் பற்றாக்குறை ஏற்படுகிறது. அந்த நேரத்தில் கால்சியம் அதிகம் உள்ள சிக்கன், மட்டன், முட்டை, மீன் போன்ற உணவு வகைகளை உண்பதன் மூலம், எலும்பு தேய்மானம் ஏற்படுவதில் இருந்து தப்பிக்க முடியும்.

