PUBLISHED ON : டிச 30, 2018
* வெகுநாட்களாக நான் தலைமுடிக்கு ஹேர்டை உபயோகித்து வருகிறேன். இதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?
தலை முடிக்கு ஹேர்டை உபயோகித்த பின் கைகளை நன்றாக கழுவ வேண்டும். ஏனென்றால் கை விரல்கள் மற்றும் நகங்களுக்கு இடையே உணவு அருந்தும் பொழுது உள்ளே செல்லும் ஹேர்டையினால் இரைப்பை, உணவுக்குழாய், மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
* எனக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு குரல்வளை புற்றுநோய்க்கான குரல்வளை அகற்றப்பட்டது. அதனால் என்னால் சரிவர பேச முடியவில்லை. நான் நன்றாக பேச வாய்ப்புள்ளதா? அதற்கு என்ன செய்ய வேண்டும்.
குரல்வளை புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது செயற்கை குரல்வளைகள் உள்ளன. அவற்றை பொருத்தி கொள்வதன் மூலம் நன்றாக பேச முடியும். சில பேரினால் நன்றாக பாடக்கூட முடியும்.
* நான் 60 வயது நிரம்பிய ஓய்வு பெற்ற ஆண் அதிகாரி. எனக்கு இரண்டு மார்பகங்களும் சில மாதங்களாக வீங்கி வருகின்றன. இது எதனால் ஏற்படுகிறது? அதற்கு என்ன செய்யலாம்?
ஆண்களுக்கு 60 வயதிற்கு மேல் சில ஹார்மோன் மாற்றங்களினால் மார்பகங்கள் சிறிது வீங்கும். இது ஒன்றும் பெரிய நோய் அல்ல. சில மருந்து மாத்திரைகளில் அதை குணப்படுத்தி விடலாம். அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.
* எனக்கு சில மாதங்களுக்கு முன்பு ஹெர்னியா (குடல் இறக்கம்) அறுவை சிகிச்சை செய்து வலை பொருத்தப்பட்டுள்ளது. அதனால் ஏதேனும் பாதிப்பு வருமா?
ஹெர்னியாவிற்கு அறுவை சிகிச்சை செய்தவர்கள் மலச்சிக்கல் மற்றும் சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏதும் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும். அப்படி பாதிப்பு ஏற்படாமல் பார்த்து கொண்டால் பாதிப்பு ஒன்றும் ஏற்படாது.
- டாக்டர். மோகன் பிரசாத்
புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர், மதுரை.
98430 50822
