PUBLISHED ON : ஆக 04, 2024

பிறந்த குழந்தைக்கு ஆறு மாதம் வரை வழங்கப்படும் தாய்ப்பால், நோய் எதிர்ப்பு சக்தி, மூளை வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும். குழந்தை பிறந்த முதல் மூன்று நாள் வழங்கப்படும் தாய்ப்பால், தடுப்பூசியை விடவும் சிறந்த மருந்து.
தாய்ப்பாலின் மகத்துவம் குறித்து, குழந்தை பெற்ற ஒவ்வொரு தாய்மார்களும் அறிந்து கொள்வதுடன், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை ஊக்கப்படுத்த, விழிப்புணர்வு ஏற்படுத்த ஆக., 1 முதல் 7ம் தேதி வரை தாய்ப்பால் வார விழா கொண்டாடப்படுகிறது.
அழகு, ஆரோக்கியம் கூடும்
திருப்பூர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, குழந்தைகள் நலத்துறை பேராசிரியர் டாக்டர் உமாசங்கர் கூறியதாவது:
தாய்ப்பால் கொடுப்பதால், தங்கள் ஆரோக்கியம், அழகு குறைவதாக பெண்கள் எண்ண வேண்டியதில்லை. காரணம், தாய்ப்பால் தொடர்ந்து சுரப்பதன் மூலம் அழகும், ஆரோக்கியமும் கூடுமே தவிர, குறையாது. குழந்தை பெற்ற சில நாட்களுக்கு உடல் எடை கூடியதாக அல்லது குறைந்ததாக தோன்றலாம். ஆனால், அதற்கும் தாய்ப்பாலுக்கும் சம்பந்தம் இல்லை.
குழந்தை பெற்ற சில மணி நேரங்களில் இயற்கையாகவே அனைத்து தாய்மார்களுக்கும் கட்டாயம் தாய்ப்பால் ஊறும். குழந்தை பிறந்த ஆறு மாதத்துக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதால், பிரசவத்துக்கு பின் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
தாய் ஆரோக்கியமாக இருக்க ஓய்வு, துாக்கம் மிக அவசியம். புரோட்டீன், காய்கறிகள், பழங்கள், அசைவ உணவுகளும் சாப்பிட வேண்டும். தாய் ஆரோக்கியமாக இருந்தால், குழந்தை நலமாக இருக்கும். தாய்ப்பாலும் ஊறும்.
தாய்ப்பால் குறைந்தால், மகப்பேறு டாக்டர் ஆலோசனையை பெறலாம்.
ஆறு மாதம் கட்டாயம்
துவக்கம் முதலே புட்டியில் 'நிப்பில்' மூலம் பால் கொடுப்பதை தவிருங்கள். தாய்மார்கள் அமர்ந்த நிலையில் பால் புகட்டுவது சிறந்தது. படுத்துக் கொண்டு பால் கொடுத்தால் குழந்தைகள் குடிக்க சிரமப்படும்; புரையேறி விடும் வாய்ப்பும் உள்ளது.
எதிர்காலத்தில் நல்ல ஆரோக்கியத்துடன் குழந்தைகள் வளர, பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக தாய்ப்பால் இருக்கும். எனவே, குழந்தை பெற்ற தாய்மார்கள் தவறாமல் ஆறு மாதத்துக்கு தாய்ப்பால் தர வேண்டும். இரண்டு ஆண்டு வரை தாய்ப்பாலுடன், திட உணவுகளையும் சேர்த்து வழங்க வேண்டும்.
முக்கியமாக, குழந்தை பிறந்த அரைமணி நேரத்தில் கொடுக்கப்படும் தாய்ப்பால் மிக முக்கியம். குழந்தை பெற்ற முதல் மூன்று நாட்கள் தரப்படும் தாய்ப்பால், தடுப்பூசியை விடவும் வலிமை வாய்ந்தது; அது, குழந்தையின் எதிர்ப்பு சக்திக்கு பேருதவியாக இருக்கும்.
தடுப்பூசியை விட தாய்பாலே சிறப்பு
தாய்ப்பால் கொடுப்பதால் மார்பக புற்று நோய், பாதிப்பு பெண்களுக்கு வராது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரும் மகத்துவத்தை வேறு எந்த மருந்தும், தடுப்பூசியும் தந்து விட முடியாது. எதிர்ப்பு சக்திக்கும், மூளை வளர்ச்சிக்கும் பேருதவியாக இருப்பது தாய்ப்பால் மட்டுமே.
இவ்வாறு, குழந்தைகள் நல பேராசிரியர் டாக்டர் உமாசங்கர் கூறினார்.