PUBLISHED ON : அக் 03, 2010

தண்டபாணி, மதுரை: வாலிபப் பருவத்தை அடைந்துள்ள என் மகன், கீழ்படிய மறுக்கிறான். சமீப காலமாக, பள்ளிக்கே செல்வதில்லை. எனவே, அவனை வெளியேற்ற, பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அவனுடைய நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமானவையாக உள்ளன. தாயை தகாத வார்த்தைகளால் நிந்திக்கிறான். நான் அவனை பலமுறை கடிந்து கொண்டேன்; இரண்டு முறை அடித்தும் இருக்கிறேன். அப்போதெல்லாம் என்னையே அவன், பிரம்பால் திருப்பித் தாக்கினான். யாராவது மந்திரம் வைத்து அவனை மாற்றியிருக்கலாமோ?
மந்திரம், தந்திரம் ஆகியவற்றை நம்புவதை விட, அவருடைய நடவடிக்கைக்கான காரணத்தை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அவர், பெரியவர்கள் பேச்சை மீறி நடக்கும் தன்மை கொண்டவராக இருக்கலாம் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம். அவர் நடவடிக்கை குறித்து சீரான ஆய்வு, பாதிப்புக்கான மருந்து, அறிவுரை ஆகியவை தான் தற்போதைய அவசியம். நவீன சிகிச்சை முறைகள் மூலம், அவருடைய எத்தகைய பிரச்னையையும் தீர்த்து விடலாம். சிகிச்சை மேற்கொண்டால், அவர் நல்ல மனிதராக மாறி, சமூகத்தோடு ஒன்றி விடுவார்.
மைதிலி, திருப்பூர்: எனக்கு 21 வயதாகிறது. 40 - 50 நாட்களில் தான் மாத விடாய் ஏற்படுகிறது. இது ஆபத்தா? மாத விலக்கு சீராக வழி ஏதும் உண்டா?
மாத விடாய் ஏற்படும் காலம், ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும். 45 முதல் 60 நாட்களுக்கு ஒரு முறை ஏற்படுவது கூட, இயற்கையே. உங்கள் மாதவிடாய் நாட்கள் குறித்து, மாதா மாதம் குறிப்பு எடுங்கள். திடீரென 33 நாட்களிலோ, 52 நாட்கள் இடைவெளியிலோ ஏற்படுகிறதா என்பதை கவனியுங்கள். அது கூட, இயற்கையானதே. சினைப் பையில் முட்டை முதிர்வடைந்து வெளியேறுவது, அடுத்த மாத விடாய் ஏற்படுவதற்கு 14 நாட்களுக்கு முன் நிகழும். எனவே, உங்களைப் பொறுத்தவரை, முட்டை வெளியேறும் நாளுக்கு முந்தைய காலம் தான் நீடித்தபடி இருக்கிறது. ஆறு மாதத்திற்கு குறிப்பெழுதி, மகப்பேறு மருத்துவரிடம் காண்பியுங்கள். அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் மற்றும் சில ரத்தப் பரிசோதனைகள் மூலம், உங்கள் உடலில் ஹார்மோன் அளவு எவ்வளவு உள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அது சரியானதாக இருந்தால், உங்கள் உடலில் எந்த கோளாறும் இல்லை எனக் கொள்ளலாம். பிரச்னை இருந்தாலும், நீங்கள் இள வயதுடையவராக இருப்பதால், மருந்து மாத்திரைகளால் குணப்படுத்தி விடலாம்.
கண்மணி, கோயம்புத்தூர்: பிறந்து ஆறே மாதம் ஆன என் குழந்தை, இரவு நேரத்தில் எட்டு மணி நேரம் தூங்குகிறது. அதை எழுப்பி பால் கொடுக்க வேண்டுமா என எனக்குத் தெரியவில்லை. தாய்ப்பால் தான் கொடுக்கிறேன்...
இரவுக்கும், பகலுக்குமாக தன் தூக்கத்தை உங்கள் குழந்தை அமைத்துக் கொண்டு விட்டதால், நீங்கள் அதிர்ஷ்டம் அடைந்துள்ளீர்கள் என்று தான் கூற வேண்டும். இரவு முழுதும் தூங்கிக் கொண்டிருந்தால், தொந்தரவு செய்யாதீர்கள். அப்படியே விட்டு விடுங்கள். எனினும், எப்போதும் பால் குடிக்க மறுத்து, மந்த அசைவுடன் இருந்தால் குழந்தை நல மருத்துவரிடம் காண்பியுங்கள்.
என் வயது 15. உயரம் 5.4 அடி. ஜிம்மில் உடற்பயிற்சி செய்கிறேன். '6 பேக்ஸ்' கொண்ட வயிறும், முஷ்டி கொண்ட மேல் கையும் கொண்டுள்ளேன். ஆனால், என் உயரம் அதிகரிக்காமல் போய்விடுமோ என கவலை ஏற்படுகிறது...
வாலிப வயதினரிடையே காணப்படும் எடை அதிகரிப்பு பிரச்னை உங்களிடம் இல்லை என்பதைக் காணும்போது, உங்கள் வாழ்க்கை முறை நல்லதாக அமைந்துள்ளது எனக் கூற வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன் வரை, இது போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ள குழந்தைகளும், வாலிப வயதினரும் அனுமதிக்கப்படவில்லை. காரணம், வளரும் எலும்புகள் முதிர்ச்சி பெறாத நிலை இருந்தது. காயம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சப்பட்டது. வாலிப வயதினருக்கேற்ற வகையில் ஜிம் பார்லர்களும் தயாராக இல்லாமல் இருந்தன. குறைந்த பளு தூக்கிகள் கிடையாது. தகுதி வாய்ந்த பயிற்சியாளர் இல்லை என்ற நிலை நீடித்தது. தற்போது, முன்னேறிய நாடுகளில் இந்த நிலை மாறி வருகிறது. ஓட்டப் பயிற்சி, நடைபயிற்சி, நீச்சல் ஆகியவற்றோடு எடை தூக்குதலும் பரிந்துரைக்கப்படுகிறது. எனினும், போட்டியில் பங்கு பெறுவது, அதிக எடை தூக்குவது, 'பைசெப்ஸ், 6 பேக்' போடுவது ஆகியவற்றுக்கு, எலும்பு முதிர்ச்சி அடையும் வரை தடை செய்யப்பட்டுள்ளது. பொதுவாக 21 வயதுக்கு மேல் தான், இவற்றை மேற்கொள்ளலாம். உடல் பலம் கூட்ட பொதுவான பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

