PUBLISHED ON : ஜூலை 14, 2013
* எனக்கு 'இம்ப்ளான்ட்' வைத்து பல் கட்ட வேண்டும் என பல் டாக்டர் கூறுகிறார். எனது வேலையில் அடிக்கடி விடுப்பு எடுக்க முடியாது. ஒரே நாளில் இம்ப்ளான்ட் வைத்து பல்கட்ட முடியுமா?
பல் எடுத்த இடத்தில் முடிந்த அளவு சீக்கிரமாக பல்கட்டுவது நல்லது. இன்றைய காலச்சூழலில் வேலைக்குச் செல்பவர்களுக்கு பல் சிகிச்சை செய்து கொள்ள நேரம் கிடைப்பது மிகவும் கடினமான விஷயம். இதுபோன்றவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது இந்த டென்டல் இம்ப்ளான்ட் சிகிச்சை. ஒரு பல் இல்லாத இடத்தில் நிலையான பல் கட்டுவதற்கு இரு வழிகள் உள்ளன. அருகில் உள்ள பற்களோடு சேர்த்து இல்லாத பல்லை கட்டுவது; மற்றொன்று பல் இல்லாத இடத்தில் இம்ப்ளான்டை வைத்து அதன்மீது பற்களை பொருத்துவது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை, இம்ப்ளான்ட் வைத்தபின் 4 முதல் 6 மாதங்கள் கழித்துதான் பல் கட்ட முடியும். அதுவரை பல் இல்லாமல் இருக்கும் சூழ்நிலைதான் இருந்தது. ஆனால் இன்றைய புதிய வகை இம்ப்ளான்ட்டுகள், நவீன சிகிச்சை முறைகள் மற்றும் பல் கட்ட உபயோகப்படுத்தும் சாதனங்கள் ஆகியவற்றால், இம்ப்ளான்ட் வைத்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள்ளாகவே பல் கட்டிவிடலாம். தாடை எலும்பின் பலம், மற்ற பற்களின் அமைப்பு ஆகியவற்றை பொறுத்து சிகிச்சை முறையில் ஒரு சில மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கும். இந்தச் சிகிச்சை முறையால் வீக்கமோ, வலியோ அதிகம் வராது. இம்ப்ளான்ட் வைத்தபின், மருத்துவர் கூறும் வழிமுறைகளை சரியாக பின்பற்றினால் அடுத்த நாளேகூட தாராளமாக அவரவர் தினசரி பணிகளை மேற்கொள்ளலாம்.
* எனது மகனுக்கு பல்வரிசை சீராவதற்கு கம்பிபோடும் சிகிச்சை செய்ய சில பற்களை அகற்ற வேண்டும் என்கின்றனர். பற்களில் கம்பி போடுவதற்காக நல்ல பற்களை எடுக்கலாமா?
பல்வரிசை சீராக இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணமே தாடை எலும்பின் அளவிற்கு ஏற்றார்போல, பல்லின் அளவு இல்லாமல் இருப்பதே. எனவே பற்களை சீரமைப்பதற்காக முதலில் தாடை எலும்பில் இடம் வேண்டும். இதற்காகத்தான் ஒருசில பற்களை அகற்ற நேரிடும். கம்பிபோடும் அனைவருக்கும் பற்களை எடுக்கத் தேவையில்லை. பற்களையும் தாடை எலும்பையும் எக்ஸ்ரே எடுத்து, வாய் முழுவதையும் முறையாக பரிசோதனை செய்து, பின்னர் பற்களை எடுக்க வேண்டுமா இல்லையா என தீர்மானிக்க வேண்டும். சிலருக்கு பற்கள் ஒன்றின்மேல் ஒன்றாக முன்னும் பின்னுமாக முளைத்து இருக்கும். ஒருசிலருக்கு முன்பற்கள் உதட்டுக்கு வெளியே வரை தள்ளி இருக்கும். இதுபோன்றவர்களுக்கு சில பற்களை அகற்றினால்தான் மற்ற பற்களை வரிசைப்படுத்த இடம் கிடைக்கும். பொதுவாக பின்பற்களைத்தான் இந்தச் சிகிச்சைக்காக அகற்றுவர். இதற்காக பல் எடுப்பதால் மற்ற பற்களுக்கோ, எலும்புகளுக்கோ எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. பற்களை எடுத்த இடம் இடைவெளிபோல தெரிந்தாலும் சீரமைப்பு சிகிச்சை முடியும்போது பல் எடுத்த இடமே தெரியாது. மற்ற பற்கள் வரிசையாக அமைந்து இந்த இடைவெளியை நிரப்பிவிடும். உதடுகள் தூக்கியபடி இருப்பவர்களுக்கு இயற்கையாக மூடும் அளவிற்கு வந்துவிடும். முகஅமைப்பும் சீராக மாறும்.
டாக்டர் ஜெ.கண்ணபெருமான்,
மதுரை.94441-54551