PUBLISHED ON : டிச 08, 2013

என் தம்பிக்கு, நுரையீரலைச் சுற்றி, நீர் உள்ளது. பரிசோதனைக்குப் பின், மருந்துகள் கொடுக்க வேண்டும் என, டாக்டர் கூறினார். பரிசோதனையை கட்டாயம் செய்ய வேண்டுமா?
நுரையீரலைச் சுற்றி நீர் சேர்வதற்கு, பல காரணங்கள் உள்ளன. காசநோய் முதல் புற்றுநோய் வரை, பல பிரச்னைகளாலும் இது ஏற்படலாம். நீரை எடுத்து பரிசோதனை செய்தால் மட்டுமே, அது எந்த மாதிரியான தொந்தரவால் ஏற்பட்டுள்ளது என்பதை, கண்டறிய முடியும். முதலில், நுரையீரலைச் சுற்றியுள்ள நீரை எடுக்க வேண்டும். இல்லையெனில் அது, நுரையீரலில் தழும்புகளை உருவாக்கி விடும்.
பிரச்னையை பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து, அதற்கு ஏற்றாற்போல, மருந்துகள் கொடுப்பது அவசியம். அப்போது தான், நோய் முற்றிலும் குணமடையும். எனவே, டாக்டர் கூறும் பரிசோதனைகளை, அவசியம் செய்து கொள்ளுங்கள்.
சளியை பரிசோதனை செய்வதன் மூலம், நுரையீரலில் இருக்கும் புற்றுநோயை கண்டறிய முடியுமா?
பொதுவாக புற்றுநோயை கண்டறிய, 'பயாப்சி' எனப்படும், பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். ஆனால், நுரையீரலை பொறுத்தவரை, நுரையீரலின் நடுப் பகுதியிலோ அல்லது மேல் பகுதியிலோ, பெரிய புற்றுநோய் கட்டிகள் இருந்தால், சளியை நன்கு இருமி எடுத்து பரிசோதனை செய்யும்போது, புற்றுநோயை கண்டறிய முடியும். காசநோய்க்கு, மூன்று பரிசோதனைகள் இருப்பதுபோல, புற்றுநோய்க்கு ஆறு பரிசோதனைகள் செய்ய வேண்டும்.
சளியின் மூலம் தெரிந்து கொள்ள முடியவில்லை என்றால், 'பிராங்கோஸ்கோபி' எனப்படும், நுரையீரலினுள் குழாயை செலுத்தி, கண்டறியும் முறையைப் பின்பற்றலாம்.
டாக்டர் எம்.பழனியப்பன்,
மதுரை

