PUBLISHED ON : செப் 09, 2012

சுந்தரம், மதுரை: எனக்கு மூச்சுவாங்குதலும், நெஞ்சில் அடைப்பது போலவும் இருந்தது. இதற்கு எக்கோ பரிசோதனை செய்ததில், Moderate M.R., மற்றும் Mild A.R., எனவும் வந்துள்ளது. இது என்ன பிரச்னை?
இருதயத்தின் இடதுபுறத்தில் 2 வால்வுகள் உள்ளன. Mitral Valve, Aortic Valve என்பவை அவை. உங்களுக்கு 2 வால்வுகளிலும் ரத்தக்கசிவுகள் உள்ளன. 'அயோட்டிக் வால்வில்' சிறிதளவும், 'மைட்ரல்' வால்வில் அதைவிட சற்று அதிகமாகவும் ரத்தக்கசிவு உள்ளது. இதற்கு, நீங்கள் உணவில் உப்பை குறைத்து, கடின வேலையை தவிர்த்து, மருந்துகளை எடுத்தாலே போதுமானது.
சில ஆண்டுகளில், இந்த வால்வுகளில் உள்ள ரத்தக்கசிவு கூடுதலாகவும் வாய்ப்புள்ளது. எனவே, 6 மாதங்களுக்கு ஒருமுறை, எக்கோ பரிசோதனை செய்தாக வேண்டும். இதில், இந்த ரத்தக்கசிவின் தீவிரத்தையும், முன்னேற்றத்தையும் எளிதில் கண்டறியலாம். பிற்காலத்தில் ரத்தக்கசிவு தீவிரமானால், அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
ஆர். ஜெயகுமார், பெரியகுளம்: எனது 19 வயது மகளுக்கு எக்கோ பரிசோதனை செய்ததில், அ.கு.ஈ., என வந்துள்ளது. இதை பலூன் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியாது, என டாக்டர் கூறுகிறார். அறுவை சிகிச்சைதான் அவசியம் என்கிறார். இது சரிதானா?
இருதயத்தை 4 பாகங்களாக பிரிக்கலாம். மேலிரண்டு பாகங்கள், Atrium என்றும், கீழிரண்டு பாகங்கள் Ventricle என்றும் குறிப்பிடப்படுகிறது. மேல் உள்ள 2 'ஆட்ரியத்தின் நடுவே உள்ள தடுப்புச் சுவரை, 'Inter Atrial Septum' என குறிப்பிடுவர். இத்தடுப்புச் சுவரில் ஓட்டை இருந்தால், Atrial Septal Defect (A.S.D.,) என குறிப்பிடுவர்.
பெரும்பாலான ஓட்டைகளை எளிதில் பலூன் சிகிச்சை (Device Closure) மூலம் எளிதில் மூடிவிடலாம். ஆனால் சில இடங்களில் இருக்கும் ஓட்டையை இம்முறையில் மூடமுடியாது. ஓட்டையின் இடமும், வடிவமைப்பும் சரியாக இருந்தால் எளிதில்
மூடிவிட முடியும். இல்லையெனில் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய வேண்டும்.
ஆர். சந்திரபோஸ், திண்டுக்கல்: எனது வயது 41. இரு ஆண்டுகளாக ரத்தக்கொதிப்பு உள்ளது. நான் கிணற்றில் நீந்தி விளையாடி குளிக்கலாமா?
ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் முதலில் தங்கள் ரத்தஅழுத்தத்தை எந்த வயதிலும், எந்த தருணத்திலும், 140/ 90க்கு கீழ், 120/80 என்ற அளவில் வைத்திருப்பது அவசியம். ரத்தக்கொதிப்பு உள்ள அனைவரும், ரத்தப் பரிசோதனை, மார்பக எக்ஸ்ரே, எக்கோ பரிசோதனை, டிரெட்மில் பரிசோதனையை அவசியம் செய்ய வேண்டும்.இவை அனைத்தும் நார்மலாக இருந்து, ரத்தகொதிப்பும் கட்டுப்பாட்டில் இருந்தால், நீச்சல் அடிப்பது மிகச்சிறந்த உடற்பயிற்சிதான். எனவே மேற்கண்ட பரிசோதனைகளை செய்து, கிணற்றில் ஆனந்தமாய் நீந்துங்கள்.
எம். முத்துச்சாமி, சிவகங்கை:எனது இருதய நோய்க்கு, 'TRAIMETAZIDINE' என்ற மருந்தை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்படி டாக்டர் கூறினார். நான் தொடர்ந்து எடுக்கலாமா?
'TRAIMETAZIDINE' என்பது இருதய மருத்துவத்தில் பல ஆண்டுகளாக பயன்படும் மருந்து ஆகும். இது இருயத்துக்கு பலவகைகளில் நன்மை அளிக்கிறது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு, இம்மருந்தால் நல்ல பலன் உள்ளது. இம்மருந்து, ரத்தநாளங்களில் இருக்கும் அடைப்புக்காகவும், இருதய பம்பிங் திறன் குறைந்த வருக்கும் தரப்படுகிறது. இம்மருந்தால் எவ்வித பக்கவிளைவும் இல்லை. எனவே தாராளமாக தொடர்ந்து எடுக்கலாம்.
- டாக்டர் சி.விவேக் போஸ்,
மதுரை.