PUBLISHED ON : டிச 16, 2012

ராதாகிருஷ்ணன், போடி: 40 வயதான எனக்கு மூச்சுத் திணறல் உள்ளதால், 'இன்ஹேலர்' பயன்படுத்துகிறேன். மூச்சுத் திணறல் உள்ளதால், மாத்திரை மட்டுமே எடுத்து வரும் எனது தங்கை, மூச்சுத் திணறல் அதிகரித்தால்தான் இன்ஹேலர் பயன்படுத்த வேண்டும் என்கிறார். இது சரியா?
நம்மிடையே இன்ஹேலர் பற்றிய விழிப்புணர்வு குறைவாக உள்ளது. ஒரு மாத்திரையைவிட நூறு மடங்கு குறைவான மருந்தையே, நாம் இன்ஹேலரில் பயன்படுத்துகிறோம். அதனால் பக்கவிளைவு முற்றிலும் கிடையாது. பொதுவாக நம் கண்ணில் வலி இருந்தால், சொட்டு மருந்து போடுவது போல, நம் சுவாச குழிக்கு நேராக மருந்தை செலுத்த இன்ஹேலர் பயன்படுகிறது. மூச்சுத் திணறல் குறைவாக உள்ளபோது, இன்ஹேலர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிகமாகும் நிலையில்தான் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் மூச்சுத் திணறல் அதிகமாக இருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது, 'நெபுலைசர்' என்ற கருவியின் மூலம் மருந்தை உட்செலுத்தலாம். மேலும் மாத்திரைகளும் கொடுக்க வேண்டும். எனவே உங்கள் தங்கை நுரையீரல் மருத்துவரை அணுகி மாத்திரைகள் மற்றும் மருந்துகளை நிறுத்திவிட்டு அவருக்கு ஏற்ற இன்ஹேலரை பயன்படுத்துவது நல்லது.
மீனாட்சி, மதுரை: எனது வயது 30. நான்கு மாத கர்ப்பிணி. ஒரு மாதமாக எனக்கு தொடர் இருமல் இருந்தது. பரிசோதித்த டாக்டர், எனக்கு காசநோய் இருப்பதாகவும், இதற்கு 6 மாதம் இடைவிடாமல் மருந்து எடுக்க வேண்டும் என்றார். இதனால் கருவில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுமா?
காசநோய் உள்ளவர்கள் கண்டிப்பாக 6 மாதம் மருந்து எடுப்பது அவசியம். நான்குமாத கர்ப்பிணியான உங்களுக்கும், உங்கள் குழந்தைக்கும் இதனால் கண்டிப்பாக, எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாது. நீங்கள் மருந்து எடுக்காவிட்டால், 'மல்டி டிரக் ரெசிஸ்டென்ஸ்-டி.பி.,' எனப்படும் நிலை வரும். இதற்கு 2 ஆண்டுகள் தொடர்ந்து மருந்து எடுக்க வேண்டியதாகிவிடும். அதேசமயம் காசநோய் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படும், 'ஸ்ட்ரெப்டோமைசின்' ஊசியை தவிர்க்க வேண்டும். மேலும் கர்ப்பிணி பெண்கள் எக்ஸ்ரே எடுப்பதை தவிர்க்க வேண்டும். எக்ஸ்ரேவின் கதிர்வீச்சு உங்கள் குழந்தையை பாதிக்கக் கூடும். எனவே ஆறுமாத காலம் தவறாமல் மருந்து எடுத்துக் கொள்ளுங்கள். பிறக்கப் போகும் உங்கள் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும்.
கந்தசாமி, திருச்சி: எனது வயது 35. எனது வலது பக்க நுரையீரல் அதிக சளியால் முற்றிலும் சேதமாகியுள்ளது. அதை ஆப்பரேஷன் மூலம் அகற்றிவிடலாம் என டாக்டர் கூறுகிறார். அவ்வாறு செய்யலாமா?
நம் அனைவருக்கும் இருநுரையீரல்கள் உள்ளன. உடற்பயிற்சி மற்றும் கடுமையான வேலைகளில் ஈடுபடும் நேரத்தில் அதிக ஆக்சிஜன் தேவைப்படுகிறது. அப்போது இரண்டு நுரையீரல்கள் தேவைப்படுகிறது. ஆனால் நாம் உயிர்வாழ ஒரு நுரையீரல் போதுமானது. அதிக சளியுள்ள உங்கள் வலதுபக்க நுரையீரலை ஆப்பரேஷன் மூலம் அகற்றுவதில் தவறில்லை. இதனால் ஆரோக்கியமாக உள்ள இடது பக்க நுரையீரலை சேதமடையாமல் பாதுகாக்க முடியும். அதேசமயம் உங்கள் இடது பக்க நுரையீரலின் செயல்திறன் செம்மையாக உள்ளதா என்பதை மருத்துவ பரிசோதனை மற்றும் ஸ்பைரோமெட்ரி பரிசோதனை மூலம் உறுதி செய்து கொள்வது நல்லது.
- டாக்டர் எம்.பழனியப்பன்,
மதுரை. 94425 24147