PUBLISHED ON : ஜன 22, 2012
கே. மணி, மதுரை: எனது வயது 71. ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் உள்ளது. ரத்தக்கொதிப்பிற்காக corbis 5 மி.கி., மாத்திரை எடுத்து வருகிறேன். இதைத் தொடரலாமா?
corbis என்பது Bisaprolol என்ற மருந்து வகையைச் சேர்ந்தது. இது Beta blocker வகை சார்ந்த ரத்தக்கொதிப்பு மாத்திரை ஆகும். இது ரத்தக்கொதிப்பு மட்டுமின்றி இருதய துடிப்பையும் குறைக்கிறது. மேலும் இருதயத்துக்கு பல வழிகளில் நன்மை பயக்கிறது. எனவே இதைத் தொடர்ந்து எடுப்பது நல்லதுதான்.
* ஆர்.சத்தியசீலன், ராமநாதபுரம்: எனக்கு ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் உள்ளது. மதுப்பழக்கமும் உண்டு. இரவு மது அருந்திய பின் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாமா?
நீங்கள் கேட்பது வேடிக்கையாக உள்ளது. உடலுக்கு விஷம்போல தீங்குதரும் பொருளை குடித்துவிட்டு, அதன் பிறகு மாத்திரையை எடுக்கிறேன் என்கிறீர்கள். இது எப்படி சரியானதாகும். முதலில் மதுப்பழக்கத்தை அறவே நிறுத்தியாக வேண்டும். மதுப்பழக்கம் பல வழிகளில் உடலின் உள்உறுப்புகளை மிகக் கொடூரமாக பாதிக்கிறது.
இதுதவிர பல மருந்துகள் பக்கவிளைவாக வயிற்றுக்குள் புண் ஏற்படுத்தும் தன்மை படைத்தவை. மதுவுக்கும் அதே தன்மை உள்ளது. எனவே வயிற்றுப் புண், அதிலிருந்து ரத்தக்கசிவு ஏற்படும் தன்மை பலமடங்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. மதுப்பழக்கத்தை அறவே நிறுத்துவதே சரியானது.
* எஸ். பரமசிவம், ராஜபாளையம்: எனக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்து பார்த்ததில் ரத்தக்குழாயில் 50 சதவீத அடைப்பு உள்ளதாக டாக்டர் தெரிவித்தார். இதற்கு மருந்து மாத்திரை எடுத்தாலே போதும் என்கிறார். அதன்மூலம் அடைப்பை சரிசெய்ய இயலுமா?
இருதயத்திற்கு ரத்தஓட்டம் 3 ரத்தநாளங்கள் வழியாக செல்கிறது. இடது புறம் 2ம், வலதுபுறம் 1 ரத்தக்குழாயும் உள்ளன. இவற்றில் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டால் நெஞ்சுவலி, மாரடைப்பு ஏற்படும். இவற்றை சரிசெய்ய 3 சிகிச்சை முறைகள் உள்ளன. 1) மருந்து மாத்திரை மூலம் சரிசெய்வது, 2) பலூன் மற்றும் ஸ்டென்ட் சிகிச்சை அளிப்பது, 3) பைபாஸ் சர்ஜரி செய்வது.மருந்து மூலம் இருக்கும் அடைப்பின் அளவை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் அதை குறைக்க முடியாது. பலூன் மற்றும் ஸ்டென்ட் சிகிச்சை மூலம் அடைப்பை ஆப்பரேஷன் இன்றி அகற்ற முடியும். பைபாஸ் சர்ஜரி சிகிச்சையில் புதிய ரத்தநாளங்கள் மூலம் அடைப்பைத் தாண்டி, பொருத்தி, ரத்த ஓட்டம் சரிசெய்யப்படுகிறது.
* பி. உமாசங்கர், கோவை: சர்க்கரை நோய் உள்ளவர்கள் பைபாஸ் சர்ஜரி செய்து கொள்ளலாமா?
சர்க்கரை நோய் ஒரு கொடூரமான நோய். இது முடிமுதல் பாதம் வரை உடலின் அனைத்து பாகங்களும் பாதிக்கும் தன்மை படைத்தது. இது இருதயத்தையும் பல வழிகளில் பாதிக்கிறது. பைபாஸ் சர்ஜரி சிகிச்சை, இருதய ரத்தநாளங்களில் ஏற்படும் அடைப்பை, நெஞ்சில் இருந்தோ, கால் அல்லது கையில் இருந்தோ ரத்தநாளத்தை எடுத்து, அதை அடைப்பை தாண்டி பொருத்தி
ரத்தஓட்டம் சரிசெய்யப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் தாராளமாக பைபாஸ் சர்ஜரி செய்து கொள்ளலாம். இன்னும் சொல்லப்போனால் பைபாஸ் சர்ஜரியானது, பெரும்பாலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கே செய்யப்படுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு பைபாஸ் சர்ஜரி செய்தால், அறுவை சிகிச்சை செய்த காயம் குணமாக சிறிது தாமதமாகலாம். இந்த நேரத்தில் ஐணண்தடூடிண ஊசி எடுத்து, ரத்தத்தில் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால், இதைக் கண்டு அஞ்சத் தேவையில்லை.
டாக்டர் சி. விவேக்போஸ்
மதுரை.
