PUBLISHED ON : மே 04, 2014

சீமைக்கருவேல மரங்களை வெட்டி, எரித்து கிடைக்கும் கரியை விற்பனை செய்கிறேன். மரத்தை எரிக்கும் போது, வரும் புகையால் எனக்கு இருமல், இளைப்பு ஏற்படுகிறது. இதை தடுப்பது எப்படி?
மரம் எரிப்பது, அடுப்பில் இருந்து வரும் புகை போன்றவையும், சிகரெட் புகை போன்றதுதான். இது நேரடியாக காது, மூக்கு, தொண்டை, நுரையீரல் மற்றும் வயிறு பகுதிகளை பாதிக்கும். இதில் இருந்து வரும் வேதிப்பொருட்களால், நுரையீரலில் ஏற்படும் தொந்தரவு நிரந்தரமானது. அதாவது சி.ஓ.பி.டி., எனப்படும், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயாக மாறக்கூடியது. இதை முற்றிலும் குணப்படுத்துவது கடினம்.
முதலில் புகையில் இருந்து தள்ளி இருப்பது நல்லது. முடியாத போது அடர்த்தியான முகமூடியை பயன்படுத்துங்கள். நுரையீரலில் பிரச்னை உள்ளதா என சிறப்பு மருத்துவரிடம் பரிசோதனை செய்ய வேண்டும். சரியான இன்ஹேலர் மற்றும் மருந்துகள் எடுப்பது நல்லது.
கிரானைட் தொழிற்சாலை, வேதிப்பொருட்கள் உற்பத்தி செய்யும் இடங்கள் போன்றவற்றிலும், நுரையீரல் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். பொதுவாக இதை 'ஆக்குப்பேஷனல் டிசீஸ்' என்பர்.
டி.பி., பாதிப்பில் உள்ள நான், இரு மாதங்களாக மாத்திரை எடுக்கிறேன். டாக்டர், இரு மாதங்களுக்கு ஒரு முறை ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் என்கிறார். இது அவசியமா? இதை ஏன் செய்ய வேண்டும்?
நீங்கள் டி.பி.,க்கு எடுக்கும் மருந்துகளில் முக்கியமாக மூன்று மருந்துகள் கல்லீரலில் தான் கரையும். அதனால்தான் இரு மாதங்களுக்கு ஒரு முறை ரத்தப்பரிசோதனை செய்து, கல்லீரல் எப்படி இருக்கிறது என பார்க்க வேண்டும். கல்லீரலில் சுரக்கும் சுரப்பியின் அளவு இந்த மாத்திரைகள் எடுக்கும் போது, அதிகரிக்கலாம். அத்துடன் மஞ்சள் காமாலை போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.
இதில் ஏதேனும் நடந்தால், மருந்துகளை மாற்றி கொடுப்பது அவசியம். எனவேதான் டாக்டர் இரு மாதங்களுக்கு ஒரு முறை ரத்தப்பரிசோதனை அவசியம் என்கிறார். அவர் கூறுவதை கேளுங்கள்.
மே மாதம் முதல் செவ்வாய் ஆஸ்துமா தினம் கொண்டாடப்படுகிறது. அந்தளவு இந்நோய் முக்கியமானதா?
இன்று உலகளவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோயாக ஆஸ்துமா உள்ளது. 15 சதவீத குழந்தைகள் இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆஸ்துமா என்பது மருந்துகள் எடுத்தவுடன் சரியாவதற்கு, காய்ச்சல், வயிற்றுவலி போல கிடையாது. நீண்டநாள் மருத்துவம் தேவைப்படும். அத்துடன் இத்தினத்திற்கான முக்கியமான நோக்கம், இந்நோயை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான்.
ஏனெனில், இதற்கு தப்பான மருத்துவ முறைகள் நிறைய கடைபிடிக்கப்படுகிறது. அதை தவிர்த்து சரியான பரிசோதனை, சரியான மருந்தை, சரியான அளவில் தேவைப்படும் நாள்வரை எடுக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் இளவயதினருக்கு வரும் ஆஸ்துமாவை கண்டுபிடித்து, சரியான மருந்துகள் கொடுத்தால், நோயற்ற, ஆரோக்கியமான இளம் தலைமுறையினரை உருவாக்க இயலும். எனவே இத்தினம் ஆஸ்துமா தினமாக கொண்டாடப்படுகிறது.
- டாக்டர் எம்.பழனியப்பன்,
மதுரை. 94425 24147

