PUBLISHED ON : மே 05, 2013

என். முருகேசமூர்த்தி, கம்பம்: எனக்கு மூன்று வாரங்களுக்கு முன், ஒரு ஞாயிற்றுக் கிழமை, இடது நெஞ்சில் ஒரு மணி நேரம் வலி ஏற்பட்டது. டாக்டரிடம் செல்லவில்லை. அதன்பின் எந்த ஒரு வலியோ, தொந்தரவோ இல்லை. நான் என்ன செய்வது?
இடது நெஞ்சில் ஏற்படும் வலியை அலட்சியப் படுத்தவே கூடாது. நெஞ்சில் வலி ஏற்பட்டால் அது, எதனால் என கண்டறிவது மிக முக்கியம். அதற்கு சில பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து அது இருதய தசையில் ஏற்படும் வலியா, 'அல்சர்' சார்ந்த வலியா என கண்டறிவது அவசியம். ஏனெனில் அது இருதய வலியாக இருந்து, அதை அலட்சியப்படுத்தினால், மிக கொடூர விளைவுகளை சந்திக்க நேரிடும். அதேநேரம் சாதாரண வலியாக இருந்தால், அதைக் கண்டு அஞ்சாமல் பணிகளை தொடரலாம். உடனே உங்கள் டாக்டரை சந்தித்து இ.சி.ஜி., எக்கோ, டிரெட்மில் பரிசோதனைகளை உடன் செய்ய வேண்டும். அவற்றின் முடிவுகளுக்கு ஏற்ப சிகிச்சை முறை அமையும்.
வி.விஜயகுமார், திருமங்கலம்: என் வயது 36. இரு ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. தற்போது ரத்தக்கொதிப்பும் வந்து விட்டது. இதற்காக என் டாக்டர் 'மெட்டபுரோலால்-50 மி.கி.,' என்ற மாத்திரையை தந்துள்ளார். தற்போது மிகவும் அசதியாக உள்ளது. இம்மருந்தை தொடர்ந்து எடுக்கலாமா?
உங்கள் வயதில் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தக்கொதிப்பு வந்தால் மெட்டபுரோலால் சரியான மருந்து அல்ல. மெட்டபுரோலால் என்பது 'Beta Blocker' வகை சேர்ந்த ரத்த அழுத்த மாத்திரையாகும். பொதுவாக இருதய நோய் உள்ளவர்கள், இருதய துடிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு இம்மருந்து கொடுக்கப்படுகிறது. உங்கள் வயதில் இம்மருந்தை எடுத்தால், பக்கவிளைவுகள் ஏற்படலாம்.
சர்க்கரை நோய் உள்ள ரத்தக்கொதிப்பு நோயாளிகளுக்கு தற்போது சிறந்த மருந்துகள் உள்ளன. அதாவது A.R.B., A.C.E., மற்றும் Calcium Blocker வகையைச் சார்ந்த மாத்திரைகளே சிறந்ததாக கருதப்படுகிறது. இதில் பக்கவிளைவுகள் மிகக்குறைவு. இதனால் உடல் உள்ளுறுப்பு பாகங்கள் பாதுகாக்கப்படுகின்றன. உங்கள் டாக்டரிடம் அசதி பற்றிக் கூறி, மெட்டபுரோலால் மாத்திரைக்குப் பதில், வேறு வகை மாத்திரைகளை எடுப்பது நல்லது.
எஸ்.செய்யதுஅலி, ராஜபாளையம்: எனக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன் பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டது. தற்போது சிறிது தூரம் நடந்தாலே நெஞ்சில் வேதனை ஏற்படுகிறது. நான் என்ன செய்வது?
பைபாஸ் சர்ஜரி என்பது இருதய ரத்தநாள அடைப்பை சரிசெய்ய, நெஞ்சில் இருந்தோ, கால் அல்லது கையில் இருந்தோ ரத்தநாளத்தை எடுத்து, சரிசெய்யும் அறுவை சிகிச்சை. உங்களுக்கு மறுபடியும் நெஞ்சில் வலி ஏற்படுகிறது என்றால், உங்கள் ரத்தநாளத்தில் அடைப்பு கூடி இருக்கலாம் அல்லது பைபாஸ் சர்ஜரி செய்த, புதிய ரத்தநாளத்தில் அடைப்பு ஏற்பட்டு இருக்கலாம். இதை அலட்சியப்படுத்தவே கூடாது. ஆகையால், உடனே உங்கள் டாக்டரிடம் சென்று, மறுபடியும், 'ஆஞ்சியோகிராம்' பரிசோதனை செய்து, எந்த இடத்தில் அடைப்பு உள்ளது என கண்டறிவது முக்கியம்.
எந்த இடத்தில் அடைப்பு உள்ளதோ, அதற்கு அறுவை சிகிச்சை இன்றி ஸ்டென்ட் சிகிச்சை மூலம் உங்கள் ரத்தநாளத்திலோ, புதிய ரத்தநாளத்திலோ இருக்கும் அடைப்பை சரிசெய்ய முடியும்.
- டாக்டர் சி.விவேக்போஸ்,
மதுரை. 0452- 233 7344