உட்கார்ந்தே இருப்பதால் ஏற்படும் ரத்த குழாய் அடைப்பு
உட்கார்ந்தே இருப்பதால் ஏற்படும் ரத்த குழாய் அடைப்பு
PUBLISHED ON : செப் 10, 2023

இதயத்தில் இரண்டு விதங்களில் ரத்த ஓட்டம் செல்கிறது. ஒன்று ஆக்சிஜன் நிறைந்த ரத்தத்தை, நுண்ணுாட்டச் சத்துக்களுடன், உடல் முழுதும் எடுத்துச் செல்லும் சிஸ்டமிக் ரத்த ஓட்டம். அடுத்து, கார்பன் டை ஆக்சைடு சேர்ந்த ரத்தத்தை நுரையீரலுக்கு எடுத்துச் சென்று, ஆக்சிஜன் நிறைந்த ரத்தமாக மீண்டும் இதயத்திற்கு கொண்டு வரும் பல்மினரி ரத்த ஓட்டம்.
உடல் முழுதும் இருந்து வரும் மாசடைந்த ரத்தத்தை, நுரையீரலுக்கு கொண்டு செல்வது இதன் பிரதான வேலை என்பதால், மற்ற ரத்தக் குழாயை போன்று இல்லாமல், குறைவான அழுத்தத்துடனேயே பல்மினரி ரத்தக் குழாய் செயல்படும். காரணம், இதயத்தில் இருந்து நுரையீரலுக்கு குறைந்த துாரமே உள்ளது.
மூளை, கல்லீரல், சிறுநீரகங்கள், வயிறு என்று உடல் முழுதும் ரத்தத்தை எடுத்துச் செல்லும் சிஸ்டமின் ரத்த ஓட்டத்திற்கு அழுத்தம் அதிகமாக தேவைப்படும்.
பல்மினரி ரத்தக் குழாய் இரண்டாகப் பிரிந்து இரு நுரையீரலுக்கும் செல்கிறது. ஆக்சிஜன் இல்லாமல் உயிர் வாழ முடியாது.
பிராண வாயு சுழற்சிக்கு பிரதானமாக இருப்பது பல்மினரி ரத்தக் குழாய். மூளை, இதயத்தில் உள்ள ரத்தக் குழாயில் ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்படுவது போன்று இதிலும் ரத்தம் உறையலாம்.
எந்த நிலையில்?
நீண்ட நேரத்திற்கு ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பது, தொடை, இடுப்பு, கால்களில் அறுவை சிகிச்சை செய்த பின், சில வாரங்கள் படுக்கையில் இருந்தால், சிறுநீரக பாதிப்பு, உடல் பருமன், கர்ப்ப காலம்... இது போன்ற நேரங்களில் உடலின் கீழ் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இருக்காது.
இதனால், ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படலாம். இது, காலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அசுத்த ரத்தத்தை எடுத்து வரும் பல்மினரி ரத்தக் குழாய் வழியே நகர்ந்து, நுரையீரலுக்கு செல்லும் ரத்த நாளத்தில் அடைப்பை ஏற்படுத்தும். உடனடியாக ஆக்சிஜன் கிடைக்காமல், ரத்த ஓட்டம் தடைபடும். இதனால், மூச்சு வாங்குவது, தலை சுற்றல், மயக்கம், வாந்தி ஏற்படும்.
'ஈசிஜி' பரிசோதனையில் தெரிந்து விடும். மேலும் உறுதி செய்ய 'எக்கோ' பரிசோதனை செய்யலாம். பல்மினரி ஆஞ்சியோகிராம் செய்தால், அடைப்பை சுலபமாக கண்டுபிடித்து விடலாம். ஹார்ட் அட்டாக் ஏற்பட்டவுடன் தேவைப்படும் அவசர சிகிச்சை போல அவசர மருத்துவ சிகிச்சை தேவையில்லை. 48 - 72 மணி நேரம் வரையிலும் அவகாசம் உள்ளது. அதற்காக அலட்சியம் செய்வது கூடாது.
தடுப்பது எப்படி?
தன் உணவிற்காக எல்லா விலங்குகளும் ஓடணும்; நடக்கணும். நமக்கு மட்டும் உணவு மேஜைக்கே வந்து விடுகிறது. அத்துடன் சேர்த்து நிறைய நோய்களும் வருகின்றன. நடக்காமல் நீண்ட நேரம் ஒரே நிலையில் இருந்தால், காலில் ரத்த ஓட்டம் தடைபடும். ஓடும் போது மட்டுமே ரத்தம் திரவ நிலையில் இருக்கும். ஓடாமல் நின்றால் உறைவை ஏற்படுத்தும்.
இதனால் தான் பிரசவத்திற்கு பின் வலி இருப்பது தெரிந்தாலும், பிரசவம் ஆன சில மணி நேரத்திலேயே எழுந்து நடக்கச் சொல்கிறோம். கர்ப்ப காலத்தில் வயிற்றுப் பகுதிக்கு ரத்த ஓட்டம் தடைபடுவதால் உறைய வாய்ப்பு உள்ளது.
இதயத்திற்கு வரும் ரத்தத்தை சுருக்கும் தன்மை விரிவடைந்த கர்ப்பப்பைக்கு உண்டு. கர்ப்ப காலத்திலும் முடிந்தவரை நடக்க வேண்டும்.
நீண்ட துார பயணங்களின் போது, குறிப்பாக விமானப் பயணங்களின் போது, 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே இருக்கையில் அமர்ந்து உட்கார்ந்தே இருப்பது ஆபத்து. அலுவலக வேலையிலும் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து சிறிது நடக்க வேண்டியது அவசியம்.
டாக்டர் வி.மகாதேவன்,இதய, சர்க்கரை கோளாறு சிறப்பு மருத்துவர், சென்னை. 044 -- 2377 2366, 99402 14110
