sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

சைக்கிள் மிதித்தால் சீராகும் ரத்த ஓட்டம்!

/

சைக்கிள் மிதித்தால் சீராகும் ரத்த ஓட்டம்!

சைக்கிள் மிதித்தால் சீராகும் ரத்த ஓட்டம்!

சைக்கிள் மிதித்தால் சீராகும் ரத்த ஓட்டம்!


PUBLISHED ON : ஆக 06, 2017

Google News

PUBLISHED ON : ஆக 06, 2017


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடற்பயிற்சி செய்ய, ஜிம்முக்கு செல்ல நேரமில்லை என்று கூறுபவர்களும், இதற்கெல்லாம் பணம் செலவழிப்பதா என்று நினைப்பவர்களும், பணம் செலவின்றி, நேரம் விரயம் இன்றி செய்ய முடிந்த ஒரே பயிற்சி, சைக்கிள் மிதிப்பதுதான். ஸ்காட்லாந்தை சேர்ந்த மேக்மிலன், 1839ல் சைக்கிள் போன்ற வடிவத்தை உருவாக்கி, ஓட்டிக்காண்பித்தார். அதுவே, பிற்காலத்தில் சைக்கிள் என மாறியது.

வேறு சிலரும், இதேபோன்ற வடிவத்தை உருவாக்கி, இயக்கினர். இந்த வடிவத்துக்கு ஏற்ற டயர் சக்கரங்களை, 1888ல், டன்லப் உருவாக்கி, ஓட்டுவதற்கு இன்னும் வசதி செய்தார். இப்படி உருவான சைக்கிள்தான், கால மாற்றத்தில், உருவத்திலும், வடிவத்திலும் வெவ்வேறு மாறுதல்களை பெற்றது. உலகம் முழுவதும், மிகச்சிறந்த உடற்பயிற்சியாக கருதப்படும் சைக்கிள் மிதித்தல், எரிபொருள் சேமிப்புக்கு ஏற்றது; கரியமில வாயு வெளியேற்றத்தை தடுத்தல், அதன் மூலம் உலகம் வெப்ப மயமாதலை தவிர்த்தல் என, மனித குலத்துக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது.

ஐரோப்பிய நாடுகளிலும், சீனா, ஜப்பானிலும், சைக்கிள் மிதித்தலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குழந்தைகள், இளம் வயதினர், முதியோர் என அனைவரும் சைக்கிள் மிதிக்கலாம். மூட்டு வலி இருப்பவர்களும், உடல் பருமன் இருப்பவர்களும் உடற்பயிற்சி செய்வதற்கு சிரமப்படுவர். ஆனால், அவர்களுக்கும் ஏற்ற எளிய உடற்பயிற்சியாக இருப்பது, சைக்கிள் ஓட்டுதல்தான்.

சைக்கிளிங் பயிற்சிக்கு முன், அதிகப்படியான உணவு உண்பது தவறு; மிதமான உணவு உண்ணலாம் அல்லது குறைந்த அளவு தண்ணீர் குடிக்கலாம். உணவு உண்ணாமல் சைக்கிள் ஓட்டக்கூடாது. சைக்கிள் ஓட்டும் பயிற்சி மேற்கொள்வோர், இயற்கை சூழலில் அமைந்த சாலைகள் அல்லது அதிகமான வாகனங்கள் செல்லாத சாலைகளை தேர்ந்தெடுப்பது நல்லது. அதிகமான வாகன போக்குவரத்து இல்லாத சாலைகளை தேர்ந்தெடுப்பதன் மூலம், அதிகமான மாசு இல்லாமல் பயிற்சி மேற்கொள்ள முடியும்.

சைக்கிள் ஓட்டத் துவங்கும்போது மெதுவாகவும், பயிற்சி அதிகரித்தபின், மிக வேகத்திலும் பயிற்சி மேற்கொள்வது நல்லது. அதேபோல, துவக்க காலத்தில் குறைந்த தொலைவும், நாட்கள் செல்லச்செல்ல, அதிகப்படியான தொலைவும் சைக்கிள் மிதிக்கலாம். தினமும் சைக்கிள் ஓட்டுவதால், ரத்த ஓட்டம் சீராக செல்கிறது; ரத்த அழுத்தமும் சீராக பராமரிக்கப்படுகிறது; உடல் தசைகள் உறுதியாகின்றன; இதயநோய் ஆபத்து தவிர்க்கப்படுகிறது.

உடல் வெப்பம் தணிவதுடன், வியர்வையும் வெளியேற்றப்படுகிறது. உடல் பருமன் பிரச்னை இருப்பவர்கள், தொடர்ந்து சைக்கிள் ஓட்டும் பயிற்சி மேற்கொண்டால், உறுதியான மற்றும் பருமன் இல்லா உடலை பெறலாம். சைக்கிள் பயிற்சியின் மூலம் கிடைக்கக்கூடிய முக்கிய பயன்களில் ஒன்று, அது, நீரிழிவு நோயின் தாக்கத்தை குறைக்கிறது என்பதுதான்.

ஒவ்வொருவரும், தினமும், சில கிலோமீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டுவதன் மூலம், தேவையற்ற பொருளாதார செலவுகளை தவிர்க்க முடியும். பயிற்சி செய்வோரின் உடல் நலம், மன நலத்துக்கு மட்டுமின்றி, நாட்டுக்கும், உலகுக்கும் பாதுகாப்பை அளிப்பது சைக்கிள் மிதிக்கும் பயிற்சி என்றால், அது மிகையல்ல; பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களை மீதப்படுத்துவதால், நாட்டு பொருளாதாரத்துக்கும் பாதுகாப்பு கிடைப்பதை சைக்கிளிங் உறுதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us