PUBLISHED ON : செப் 23, 2014
இன்று சர்க்கரை நோய் குறிப்பிட்ட வயதினருக்குதான் வருகிறது என்றில்லாமல், சிறு குழந்தைகளுக்கும் வருகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு இன்சுலின் ஊசி மட்டுமே தீர்வு.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை திடீரென அடிக்கடி அதிகமாக சிறுநீர் கழிக்கும். அதிக தண்ணீர் குடிக்கும். தாகம் அதிகமிருக்கும் பசி அதிகம் இருக்கும். உடல் எடை வேகமாக குறையும். இவற்றை அலட்சியப்படுத்தினால் 48 மணி நேரத்திற்குள் குழந்தை நினைவிழந்த நிலைக்குச் சென்றுவிடும்.
நினைவிழந்த நிலையில் உள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது குறைந்தது ஒரு முறையாவது சர்க்கரையின் அளவை ரத்தத்திலும், சிறுநீரிலும் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகம் இருந்தால், இன்சுலின் ஊசியைப் போட்டு கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்து, நினைவிழந்த நிலையில் உள்ள குழந்தையை உடனடியாக குணமாக்க முடியும்.
தக்க சமயத்தில் மருத்துவம் செய்தால் இது சாத்தியமாகும். மீண்டும் குழந்தையை நினைவிழந்த நிலைக்கு விட்டு விடக்கூடாது. இன்சுலின் ஊசியை தொடர்ந்து போட்டுவர வேண்டும். சிறு குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஊசி போட கற்றுக் கொடுப்பது நல்லது. சிறுவர்களுக்கு இன்சுலின் சுரக்கும் பீட்டாசெல்கள் முற்றிலும் அல்லது பெருமளவு செயலிழந்துவிடுகின்றன.
ஆகவே உடலில் இவர்களுக்கு இன்சுலின் உற்பத்தியே இருக்காது. அல்லது போதுமானதாக இருக்காது. இவர்கள் இன்சுலின் ஊசியை தொடர்ந்து போட்டு வந்தால், பிற குழந்தைகளைப் போலவே இவர்களும் இயல்பாக வாழலாம்.
உணவில் கட்டுப்பாடுகள் அவசியம். பெற்றோர்கள் மருத்துவரின் அறிவுரைப்படி பக்குவமாக குழந்தைக்கு எடுத்துச் சொல்லி, மற்ற குழந்தைகளுடன் சாப்பிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மற்ற நோய்களுக்காக சிகிச்சைக்குச் செல்லும் போது சர்க்கரை நோய் சிகிச்சை பற்றிய தகவல்களை, மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும்.
குழந்தை தாழ் சர்க்கரை நிலைக்கு சென்றுவிடக் கூடாது. சர்க்கரையின் அளவு 60 மி.கி., குறைவினால் அதிக பசி, ஜில் என வியர்த்தல், படபடப்பு, கைகால் நடுக்கம், மயக்கம், தெளிவு இன்மை, உளறல், நினைவிழத்தல், வலிப்பு முதலியன ஏற்படும். நினைவு இழப்பதற்கு முன் ஏதாவது ஓர் இனிப்பான திரவத்தை உடனே கொடுத்துவிட வேண்டும். நினைவிழந்து இருந்தால் உடனே மருத்துவரிடமோ (அ) மருத்துவமனைக்கோ அழைத்துச் செல்ல வேண்டும். அப்போது வாய் வழியாக எதையும் கொடுக்கக் கூடாது.
அடையாள அட்டை: அனைத்து நீரிழிவு நோயாளிகளும் தங்களிடத்தில் ஓர் அடையாள அட்டை வைத்துக் கொள்ள வேண்டும். அதில் போன் எண், இன்சுலின் ஊசி அளவு, விவரம் முதலியன குறிக்கப்பட்டிருக்க வேண்டும். இது திடீரென சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கும் உபயோகமாக இருக்கும்.

