நீரிழிவு நோயாளிகள் அவதி - "பயோக்லிட்டசோன்' வகை மாத்திரைகளுக்கு தடை
நீரிழிவு நோயாளிகள் அவதி - "பயோக்லிட்டசோன்' வகை மாத்திரைகளுக்கு தடை
PUBLISHED ON : ஜூலை 21, 2013

'பயோக்லிட்டசோன்' வகை மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளும் நீரிழிவு நோயாளிகளுக்கு, சிறுநீர்ப்பை புற்றுநோய் ஏற்படுவதாக சில மருத்துவர்கள் கூறி வருகின்றனர். அதே சமயம், குறைந்த செலவில் கிடைத்த இம்மாத்திரைகள், நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை, கட்டுப்படுத்தி வந்தன
'பயோக்லிட்டசோன்' (Pioglitazone) வகை மாத்திரைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், தங்களுக்கான மாத்திரைகள் கிடைக்காமல், நீரிழிவு நோயாளிகள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
நடுத்தர வயது மற்றும் வயோதிகர்களை வாட்டி வதைக்கும் நீரிழிவு நோய்க்கு, பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனங்களின், நூற்றுக்கணக்கான மாத்திரைகள், சந்தையில் உள்ளன. இவற்றில், 'பயோக்லிட்டசோன்' வகை மாத்திரைகள், மருத்துவர்களால் அதிகம் பரிந்துரைக்கப்பட்டு வந்தன.
சிறுநீர்ப்பை புற்றுநோய்: இந்நிலையில், 'இவ்வகை மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்வதால், நோயாளிகளுக்கு, சிறுநீர்ப்பை புற்றுநோய் ஏற்படுகிறது' என, சில மருத்துவர்கள் கூறி வந்தனர். இதையடுத்து, சந்தையில் விற்கப்பட்டு வந்த, 30க்கும் மேற்பட்ட, 'பயோக்லிட்டசோன்' வகை மாத்திரைகள் விற்பனைக்கு, மத்திய அரசு, கடந்த மாதம், 18ம் தேதி, தடை விதித்தது.
இந்த தடை உத்தரவை உடனடியாக அமல்படுத்த கோரி, மாநில மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்ககம், மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம், தமிழ்நாடு மருந்து வினியோகஸ்தர்கள் சங்கம், தமிழ்நாடு மொத்த மருந்து விற்பனையாளர் சங்கம் உள்ளிட்டோருக்கு, கடந்த வாரம், 'நோட்டீஸ்' அனுப்பியது. இதையடுத்து, தங்களுக்கான மாத்திரைகள் கிடைக்காமல், நீரிழிவு நோயாளிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
மாற்று வகை மாத்திரைகள்: இதுகுறித்து, மருந்து உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: நீரிழிவு நோய்க்கு, சந்தையில், நூற்றுக்கணக்கான மாத்திரைகள் உள்ளன. தற்போது, தடை விதிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட வகை மாத்திரையை, உட்கொண்டு வந்த நோயாளிகள், மருத்துவரின் பரிந்துரைப்படி, மாற்று வகை மாத்திரைகளை உட்கொள்ளலாம்.
'பயோக்லிட்டசோன்' வகை மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளும் நீரிழிவு நோயாளிகளுக்கு, சிறுநீர்ப்பை புற்றுநோய் ஏற்படுவதாக சில மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.
அதே சமயம், 'குறைந்த செலவில் கிடைத்து வந்த இம்மாத்திரைகள், நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை, சிறப்பாக கட்டுப்படுத்தி வந்தன' என்ற கருத்தும், மருத்துவர்கள் மத்தியில் நிலவுகிறது.
'பயோக்லிட்டசோன்' வகை மாத்திரைகளின் பக்க விளைவுகள் குறித்து, மருத்துவர்கள் மத்தியில் இருவேறு கருத்துக்கள் நிலவி வருவதால், இம்மாத்திரைகள் மீதான தடை விரைவில் நீக்கப்படும் என, எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
டாக்டர்கள் பதில் என்ன?
இம்மாத்திரையின் தன்மை குறித்து, பல மருத்துவர்கள் அறிந்திருக்கவில்லை. பெரும்பான்மையான நீரிழிவு நோயாளிகளின் பயன்பாட்டில் இம்மாத்திரை உள்ளதால், இது குறித்து வாய் திறக்கவும், சில டாக்டர்கள் தயங்குகின்றனர். எனவே, அனுபவம் வாய்ந்தவர்கள் ஒன்றிணைந்து, இம்மாத்திரை குறித்து, முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்துள்ளது.
ஆண்டுக்கணக்கில் சாப்பிட்டால்?
நோய்க்கான மருந்து, மாத்திரைகளும், பலகட்ட பரிசோதனைகளுக்கு பின் தான், விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில், 10 ஆண்டுகளாக விற்பனையில் இருந்த, 'பயோக்லிட்டசோன்' வகை மாத்திரைகளால், நோயாளிகளுக்கு சிறுநீர்ப்பை புற்றுநோய்
வருவதாக கூறி, இதன் விற்பனைக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆண்டுக்கணக்கில் இம்மாத்திரைகளை உட்கொண்ட நீரிழிவு நோயாளிகள் மத்தியில், புற்றுநோய் அச்சம் ஏற்பட்டுள்ளது.