PUBLISHED ON : மார் 09, 2016

'டாக்டர், என் மகனை தயவு செய்து காப்பாத்துங்க. தவமிருந்து பெற்ற மகன். நானும், என் கணவரும் விவசாய நிலத்தில் பாடுபட்டு, என் மகன் கதிரை பொறியியல் படிக்க வைத்திருக்கிறோம்' என்று, அழுதப்படியே ஒரு தாய் ஓடி வந்து, என் கால்களை கட்டிக் கொண்டார். 'திருமணமாகி, பல ஆண்டுகளுக்குப் பின் பிறந்த மகன் என்பதால், எங்கள் உயிரையே அவன் மீது வைத்திருந்தோம்; அவன் காதலித்த பெண் ஏமாற்றி விட்டதால், எலி பாஷாணத்தை சாப்பிட்டு விட்டான்' என்றார். அந்த தாயை பார்க்கவே பரிதாபமாக
இருந்தது. இரண்டு ஆண்டுகளில், இதுபோல் எலி பாஷாணத்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்து, நான் சிகிச்சை செய்ய போகும், 40வது நபர், கதிர். இதயம் கனக்கத்தான் செய்தது. விவசாய குடும்பம் என்பதால், பயிரை நாசம் செய்ய வரும் எலிக்காக வைத்த எலி மருந்தை, இவன் சாப்பிட்டு விட்டான். விஷம், கதிரின் கல்லீரலை பாதிக்கும் முன், உடனே தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, விஷ முறிவு மருந்தை, விஷம் குடித்தவரின் எடைக்கேற்ப, 1 கிலோவுக்கு, 140 மி.லி., கிராம் கொடுக்க வேண்டும். விஷ முறிவு மருந்து ஒரு யூனிட், 400 மி.கி., இருக்கும். விஷம் அருந்திய நபர், 70 கிலோ எடை இருந்தால், 24 யூனிட் மருந்தை முதற்கட்டமாக, உடலில் ஏற்ற வேண்டும். கதிருக்கு, துணை மருந்துகளும் கொடுக்கப்பட்டன.
நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை, 1 கிலோவிற்கு, 70 மி.லி., கிராம் என நிர்ணயித்து எடைக்கேற்ப, மூன்று நாட்களுக்கு கொடுக்க வேண்டும். பின் கல்லீரலுக்கான
பரிசோதனை செய்ய வேண்டும். அதில் மாற்றம் இருந்தால், சிகிச்சையை தொடர வேண்டும். இல்லையென்றால், கொடுக்கும் மருந்தை, மாத்திரை வடிவில் மாற்றிக் கொள்ளலாம். கல்லீரலில் தொற்று ஏற்பட்டு இருந்தால், ஐந்தாவது நாளும் கல்லீரலுக்கான பரிசோதனை செய்ய வேண்டும். இதில் கல்லீரல் பாதிப்பு குறைந்துள்ளது என்றால், வீட்டிற்கு செல்லலாம். கதிர் போன்று தற்கொலைக்கு முயற்சிக்கும் நபர்களில், மூன்றில் ஒரு பகுதியினர், வளர் இளம் பருவத்தினர் என்பது நாம் கவனிக்க வேண்டிய விஷயம். காதல் தோல்வி, பெற்றோர் திட்டினர், தேர்வில் தோல்வி போன்ற காரணங்களால், சிலர் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். இதனால் உடனடியாக பாதிக்கப்படுவது கல்லீரல். எலி பாஷாணம், கேக் போன்றும், பேஸ்ட் வடிவிலும் கிடைக்கிறது. எலி பேஸ்ட் தயாரிக்க, 3 சதவீதம் எல்லோ பாஸ்பரஸ் சேர்க்கப்படுகிறது. இந்த ரசாயனம், வெடி மருந்துகள் தயாரிக்கவே பயன்படுத்தப்படுகிறது. கல்லீரலிலிருந்து சுரக்கும் ரசாயனம், ரத்தம் உறையும் காரணியை கட்டுப்படுத்தும். எலி பாஷாணத்தை சாப்பிடுவதால் கல்லீரல் பாதிக்கப்பட்டு ரத்தம் உறையும் தன்மையை இழந்து, ஆசனவாய், வாய், மூக்கு, காது போன்ற உறுப்புகளில் ரத்தக் கசிவு ஏற்பட்டு, உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. இதோடு
செரிமான மண்டலமும் பாதிக்கப்படுகிறது.
டாக்டர் என்.கணேஷ்
அவசரம் மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர்,புதுக்கோட்டை.
ganesh_mbbs@yahoo.com