PUBLISHED ON : டிச 28, 2016

டிச., 15, 2016: குழந்தையின் பெயர், ஆரோஹி. 2006ல் பிறந்தாள். இன்றைக்கு, 10 வயது குழந்தை. பிறந்து நான்கு மாதங்களிலேயே தெரிந்து விட்டது, ஆரோஹி ஒரு புளூ பேபி (Blue Baby) என்று. அதாவது, இதயக் கோளாறுடன் தான் ஆரோஹி பிறந்தாள். குழந்தை அழுதால், உடல் முழுவதும் நீல நிறமாகி விடும். இரு ரத்தக் குழாய்கள் பிரதானமாக, நம் இதயத்திற்கு ரத்தத்தை செலுத்துகிறது. பொதுவாக, சுத்தம் செய்யப்படாத ரத்தம் (de oxygenated blood), வலது பக்க இதய அறையில் இருந்து ரத்தக் குழாய்கள் மூலம் நுரையீரலுக்கு, 'பம்ப்' செய்யப்படும். அங்கு சுத்திகரிக்கப்பட்டு, இடது இதய அறைக்கு வந்து, அங்கிருந்து உடல் முழுவதும், 'பம்ப்' செய்யப்படும். ஊதா நிற குழந்தைகளுக்கு, பல்மினரி ரத்தக் குழாய் குறுகியதாக இருப்பதால், போதுமான ரத்தம் நுரையீரலுக்குச் செல்வதில்லை. இதனால், சுத்திகரிக்கப்படாத ரத்தத்துடன், சுத்திகரிக்கப்பட்ட ரத்தமும் சேர்ந்து, உடல் முழுவதும், 'பம்ப்' செய்யப்படுகிறது.போதுமான அளவு ஆக்சிஜன் இதயத்திற்கு கிடைக்கவில்லை என்றால், இதயம் செயலிழக்கும் நிலை ஏற்படலாம்.
பழுதடைந்த ரத்தக் குழாய்களை சரி செய்ய, அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இதற்கு ரத்தக் குழாய்களை மட்டுமே சரி செய்தால் போதாது. இதயத்தின் பழுதடைந்த இடத்தில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்பட வேண்டும். அங்கு தான், ஆரோஹிக்கு ஸ்டெம் செல் சிகிச்சை செய்யப்பட்டது. குழந்தையின் பெற்றோரின் ரத்த வகை கண்டறியப்பட்டு, அவளின் அப்பாவின் எலும்பு மஜ்ஜையிலிருந்து, 20 சிசி அதாவது, 20 மி.லி., ஸ்டெம் செல் எடுக்கப்பட்டு ஆரோஹிக்கு செலுத்தினோம். 4 மாத குழந்தையாக இருந்த போது, இந்த சிகிச்சை செய்யப்பட்டு, தற்போது, 10 வயதான ஆரோஹி நலமாக வளர்கிறாள்.பொதுவாக, இதய செல்கள் பழுதடைந்தால், மீண்டும் அதை புதுப்பிக்க முடியாது. மீதி இருக்கும் செல்களை காப்பாற்றுவது தான், பிரதான சவாலாக இருந்தது.பழுதடைந்த இதயத்தை சரி செய்யும் போது, தழும்புள்ள இடத்தில் ஸ்டெம் செல்களை செலுத்தினால், அந்த இடத்தில் புதிய செல்கள் வளர ஆரம்பிக்கின்றன. இதுவரையிலும், 100க்கும் மேற்பட்டோருக்கு, இது போல ஸ்டெம் செல் சிசிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.
சர்வதேச அளவில், இது போன்ற ஆராய்ச்சிகள் புகழ்பெற்ற இதழான, 'கார்டியன்' இரு கட்டுரைகளை, 2015 ஜூலை, 24 மற்றும் இந்த ஆண்டு அக்டோபரில் வெளியிட்டு உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக, எங்கள் மையத்தில், ஸ்டெம் செல் ஆராய்ச்சி செய்கிறோம். எங்களுடைய மையத்திற்கு, 2018 வரை, ஸ்டெம் செல் ஆராய்ச்சிக்கான அனுமதியை, 'டிரக் கன்ட்ரோல் ஆப் இந்தியா அமைப்பு வழங்கியுள்ளது.
கே.எம்.செரியன்
பிராண்டியர் லைப் லைன் ஹாஸ்பிட்டல்,
044 - 4201 7575, 2656 4224
