இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் வெந்தயம்!
இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் வெந்தயம்!
PUBLISHED ON : மே 03, 2015

வெந்தயத்தை, அஞ்சறைப் பெட்டியின் அதிசயம் என்று சொல்லலாம். அந்தளவுக்கு நமது கைக்கெட்டிய தூரத்தில், எப்போதும் உதவ காத்திருக்கிற அற்புத மருந்து வெந்தயம். வெந்தயம் நீரிழிவுக்காரர்களுக்கு மிக நல்லது என்பது தெரியும். ஏன் நல்லது எனத் தெரியுமா? சாதாரணமாக நமது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, 80 - 110 வரை இருக்கலாம். நாம் எடுத்துக் கொள்கிற உணவு, அதன் கலோரி போன்றவற்றைப் பொறுத்து, இந்த சர்க்கரையின் அளவு வேறுபடும். அதிக கலோரியுள்ள உணவு உட்கொள்கிற போது, சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவதுதான் இன்சுலினின் வேலை. நீரிழிவுக்காரர்களுக்கு இந்த இன்சுலின் சுரப்பு சரியாக இருக்காது.
அந்த இன்சுலின் சுரப்பை ஊக்கப்படுத்தி, கிரியா ஊக்கியாக செயல்படுகிற, வேலையைத் தான் வெந்தயம் செய்கிறது. தினமும் இரவில் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த தண்ணீரோடு, வெந்தயத்தையும் சேர்த்து சாப்பிட்டால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும்.
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதிலும், வெந்தயத்துக்கு மிகப்பெரிய பங்குண்டு. அதே போல புற்றுநோய் பாதிப்பையும் குறைக்கும். வெந்தயத்தில் உள்ள பிசின், குடலுக்குள் போய், தண்ணீரை எடுத்துக் கொண்டு, ஒரு ஸ்பான்ஜ் போல விரிவடையும்.
அது உணவுக்குழாயில் உள்ள நச்சுப்பொருள்களை எல்லாம் வெளியேற்றிவிடும். எனவே, குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. வெந்தயத்தை பச்சையாகவும் சாப்பிடலாம். அது அசிடிட்டி எனப்படும் அமிலச் சுரப்பைக் கட்டுப்படுத்தும். உணவின் மூலம் உடலுக்குள் சேரும், அமில,- காரத் தன்மைகளை பேலன்ஸ் செய்து, சரியான அளவில் வைக்கக்கூடியது வெந்தயம். வெந்தயம் கலந்த மோர் குடித்தால், அமிலத் தன்மை சரியாகி, செரிமானம் சீராகும்.
வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி இருந்தால், 10 கிராம் வெந்தயத்தை, மோரில் கலந்து சாப்பிட்டால், உடனே குணம் தெரியும். வெந்தயம் வயிற்றுக்குள் போய் ஊறி, கெட்ட கிருமிகளை உறிஞ்சி, இன்பெக்ஷனை சரியாக்கும். உடல் சூட்டினால் உண்டாகும் வலியையும் விரட்டும். வயிற்றில் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் இருந்தாலும், வெந்தயம் வெளியேற்றி விடும். அமீபியாசிஸ் போன்ற நோய்களுக்கு வெந்தயம் பிரமாதமான மருந்து. தொடர்ந்து வெந்தயம் சாப்பிட்டு வந்தால், பித்தம் குறையும். சிறுநீரகங்கள் சீராக இயங்கும்.
வாயுத் தொந்தரவு நீங்கும். எலும்புகள் பலமாகும், சருமம் அழகு பெறும். வெந்தயத்தை வறுத்துப் பொடித்து தண்ணீரில் கொதிக்க வைத்து, பனங்கற்கண்டு சேர்த்துக் குடித்தால், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு, பால் சுரப்பு அதிகமாகும். மாதவிலக்கு நாட்களில் உண்டாகும் கோளாறுகளுக்கும் வெந்தயம் நல்ல மருந்து. உடல் சூட்டைத் தணித்து கர்ப்பப்பையைப் பலப்படுத்தும், மூலநோய்க்கும் நிவாரணம் தரும்.