நீரிழிவு நோய் இருந்தால் தொப்பை விழுமா? சில சந்தேகங்கள்... சில பதில்கள்!
நீரிழிவு நோய் இருந்தால் தொப்பை விழுமா? சில சந்தேகங்கள்... சில பதில்கள்!
PUBLISHED ON : ஜூன் 27, 2010

ஏ.கமலா, மன்னார்குடி:
என் வயது 74; உயரம் 178 செ.மீ., எடை 95 கிலோ. ஐந்தாண்டாக ரத்த அழுத்தத்தாலும், இரண்டாண்டாக நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளேன். கடுமையான நடைபயிற்சி மற்றும் கட்டுப்பாடான உணவு முறையால், இரண்டும் இப்போது கட்டுக்குள் உள்ளன. எனினும், பாதத்தில் நமநமப்பு ஏற்படுகிறது. இதற்கு என்ன காரணம்?
உங்கள் உடல் எடை குறியீடு (பி.எம்.ஐ.,) எண் 29.8 என்பதை 25 என்ற கணக்கு வரும் வகையில், உடல் எடையைக் குறைக்க வேண்டும். உடலில் சர்க்கரை அளவு எவ்வளவு உள்ளது என்பதையும், அதற்கான மருந்து சாப்பிடுகிறீர்களா என்பதையும் நீங்கள் குறிப்பிடவில்லை. பாதத்தில் நமநமப்பு இருப்பது, நரம்பு பிரச்னையால் ஏற்படலாம். உடலில் சர்க்கரை அளவு மாறி மாறி இருப்பதால் இது போன்று ஏற்படலாம். எச்.பி.ஏ.1சி என்ற ரத்தப் பரிசோதனையை கண்டிப்பாக செய்ய வேண்டும். கடந்த மூன்று மாதங்களில் உங்கள் உடலில் சர்க்கரை அளவு எவ்வளவு இருந்ததென்பதை இதன் மூலம் அறிந்து விடலாம். மிக அதிக சர்க்கரை அளவு இருந்தாலும், இது போன்று பிரச்னை ஏற்படும். மேலும் வயது மூப்பு, அதிக உடல் எடை ஆகியவை காரணமாக, முதுகு எலும்பு தேய்தல், தண்டுவடத்தில் பிரச்னை, எலும்பு தேய்மானம் ஆகியவை ஏற்பட்டிருக்கலாம். இதனால் காலுக்குச் செல்லும் நரம்புகள் அழுத்தப்பட்டு விரல், பாதத்தில் வலி ஏற்படலாம். நீரிழிவு நோய் உள்ளதால், காலில் காயம் ஏதும் ஏற்படாமல் பார்த்து கொள்ளுங்கள். பிரச்னை எதனால் ஏற்பட்டுள்ளதென்பது குறித்து, தகுந்த மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.
எஸ்.ராஜேந்திரன், காட்டுமன்னார் கோவில்:
நீரிழிவு நோயாளிகளின் உடலில் முதலில் பாதிக்கப்படும் உறுப்பு கால் தான். ஏன் இப்படி? இதன் அறிகுறிகள் என்ன?
கண்கள், இதயம், சிறுநீரகங்கள், தசைகள், நரம்புகள் ஆகிய அனைத்துமே, சர்க்கரை அளவு சரியாக இல்லாமல் போகும்போது பாதிப்படையும். பாதத்தில் உள்ள தோல் மென்மையாகி உலர்ந்து போகும். நரம்புகள் உணரும் தன்மையை இழந்து, வலி தெரியாமல் போகும். காலில் ரத்த ஓட்டம் குறையும். உணர்வு குறைவதால், காலில் காயம் ஏற்பட்டால் தெரியாமல் போகும். ரத்த ஓட்டம் குறைவதால் புண் ஆறாது. அதிகளவில் பயன்படுத்துவதால், கால் பாதிப்படைகிறது. கையில் நரம்புகளும், ரத்த ஓட்டமும் அதிகமிருப்பதாலும், காயம் ஏற்பட்டால் கண்ணுக்குத் தெரிவதாலும், பாதிப்பு அதிகம் தெரிவதில்லை.
ஆர்.கார்மேகம், விழுப்புரம்:
எனக்கு 70 வயதாகிறது. 20 ஆண்டுகளாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். 10 ஆண்டுகளாக இன்சுலின் ஊசி போட்டுக் கொள்கிறேன். இப்போது சர்க்கரை அளவு 165 மி.கி., ஆக உள்ளது. ஊசி தொடர்ந்து போட வேண்டுமா?
போதுமான அளவு இன்சுலின் சுரக்கும் அளவு, கணையத்தைத் தூண்டுவதே மாத்திரைகளின் பணி. மாத்திரை போட்டும், இன்சுலின் சுரப்பது குறைந்தால், சர்க்கரை அளவு தாறுமாறாக ஏறி விடும். உங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம். இதனால் தான் இன்சுலின் ஊசி போடுவது அவசியமாகி உள்ளது. உங்கள் உடல் செய்ய வேண்டிய பணியை, ஊசி மூலம் உள் செலுத்தப்படும் இன்சுலின் செய்கிறது. உங்கள் உடலில் உள்ள சர்க்கரை அளவைப் பொறுத்தும், நீங்கள் உட்கொள்ளும் உணவைப் பொறுத்தும், உள் செலுத்தப்படும் இன்சுலின் அளவை மாற்றிக் கொள்ளலாம். எச்.பி.ஏ.1சி ரத்தப் பரிசோதனை செய்தால், உங்கள் உடலில் சமீபத்திய மூன்று மாதத்தில் இருந்த சர்க்கரை அளவு தெரிந்து விடும். எனவே, 165 மி.கி., என்ற அளவை, சரியான அளவாக எடுத்துக் கொள்ள வேண்டாம். வயிற்றில் தசை தளர்ந்து போவதால், தொப்பை வெளியில் நீட்டிக் கொண்டிருக்கலாம். "பிசியோதெரபிஸ்ட்' ஆலோசனை பெற்று உடற்பயிற்சி செய்தால், தொப்பையை குறைத்து விடலாம்.
உங்கள் உடல் நலம் குறித்த சந்தேகம் தீர, எழுதுங்கள் எங்களுக்கு:
சில சந்தேகங்கள்... சில பதில்கள்!
ஹலோ டாக்டர். தினமலர், 219, அண்ணா சாலை, சென்னை - 2.

