PUBLISHED ON : ஜூன் 01, 2016

என் நண்பர் மகேஷ், என்னை தொலைபேசியில் அழைத்து செபாஸ்டின் பற்றி கூறினார். அவனுக்கு வயது, 10. சொந்த ஊர், தேனிக்கு அருகில் ஒரு கிராமம். செபாஸ்டினின் தாய், தந்தை இருவருக்கும் திருமணமாகி பல ஆண்டுகளாக பிள்ளை இல்லாமல் இருந்து பிறந்தவன் என்று கூறினார். ஆனால், அவன் பிறந்த ஆறு மாதத்தில் அத்தனை மகிழ்ச்சியும் வடிய ஆரம்பித்து விட்டது. காரணம், செபாஸ்டினுக்கு பிறப்புறுப்புக்கு கீழே இருக்கும் விதைகள் இரண்டு இல்லாதது மட்டுமல்லாது, அவனின் பிறப்புறுப்பும் அளவில் மிகவும் சிறியதாக இருந்ததே. தனக்கு பிறந்த பிள்ளை உடல் குறைபாடுடையதா அல்லது ஏதாவது வியாதியின் பாதிப்பா என்று தெரியாமல் தவித்தனர், கிரேஸ் தம்பதி. செபாஸ்டினின் பிரச்னையை அறிந்த உறவினர்களும், கிராமத்தினரும் உங்களுக்கு பிறந்த குழந்தை பெண் குழந்தை தான் என்று மனம் புண்படும்படி எள்ளி நகையாடினர். எனவே மகேஷ், செபாஸ்டினின் பெற்றோரிடம் என்னை சந்திக்கும் படி கூற, தேனியிலிருந்து சென்னை வந்து என்னை சந்தித்தனர். பிரச்னை என்ன என்றே தெரியாமல், அச்சிறுவன் குழம்பியிருப்பது அவன் முகத்தை பார்த்த போது தெரிந்தது. கேரியோடைப்பிங் எனும் டி.என்.ஏ., பரிசோதனையின் மூலம் அவன் ஆண் குழந்தை தான் என்பதை உறுதி செய்து கொண்டேன். ஆனால், விதைகள் விதைப்பையில் இல்லை. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்த போது வயிற்றிலும் விதைகள் இல்லை. பின், பிரச்னையை துல்லியமாக அறிந்து கொள்ள வேண்டி எம்.ஆர்.ஐ., ஸ்கேன் பரிசோதனையும் செய்யப்பட்டது.அதிலும் விதைகள் இருக்கும் இடம் தெரியவில்லை. லேப்ராஸ்கோப்பி முறையில் செபாஸ்டினின் வயிற்றில் விதைகளை தேட ஆரம்பித்தேன். கடைசியில் இரண்டு விதைகளும் அடிவயிற்றில் ஒளிந்து கொண்டிருந்தன. அவற்றை லேப்ராஸ்கோப்பி மூலமே வெளியில் எடுத்து விதைப்பையில் பொருத்தினேன். விதைகள் உடலுக்கு வெளியே இருக்க காரணமே உடல் உஷ்ணமான, 98.6 டிகிரி பாரன்ஹீட்டுக்கு, 1 டிகிரி குறைவாக இருப்பது தான். அதுமட்டுமல்ல; விதைகள் உருவாகும் இடம் வயிறு தான். ஹார்மோன்களின் துணையுடன் இவை வயிற்றிலிருந்து விதைப்பைக்கு பயணப்பட்டு வந்துவிடுகிறது. ஆங்கிலத்தில் இதை, கிரிப்ட் ஆர்கிடிசிம் என்பார்கள். விதைகள் இல்லாதது, ஆண் பிறப்புறுப்பு சிறியதாக இருப்பது போன்ற பிரச்னையுள்ள குழந்தைகளை பெண் குழந்தைகள் என்றே நினைப்பார்கள். செபாஸ்டின் பிரச்னை தீர்க்கப்பட்டுவிட்டது; பிறப்புறுப்பும் வளர்ச்சியடைய ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொரு நோயாளியின் பிரச்னையை தீர்க்கும் போதும் நினைப்பேன் இவர்களின் கண்ணீருக்கு இறைவன் செவி சாய்த்து மருத்துவனான என்னை ஒரு கருவியாக பயன்படுத்தி கொண்டிருக்கிறான் என்பதே உண்மை என்று...!
மா.வெங்கடேசன்
குழந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணர்.
சென் மருத்துவமனை, சென்னை
98402 43833

