PUBLISHED ON : அக் 26, 2014
உலக வலி தணிப்பு தினம், அக்., 12ம் தேதி அனுசரிக்கப்பட்டது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, காப்பாற்ற முடியாது என, கைவிடப்பட்டோருக்கு, அன்பும், ஆதரவும் தந்து, அவர்களுக்கு நோயின் தாக்கத்தை குறைப்பதே, வலி தணிப்பு சிகிச்சை (பாலியேடிவ் கேர்) எனப்படுகிறது.
இது, மரணத்தின் பிடியில் நாட்களை எண்ணிக்கொண்டு இருப்போரின் துயரங்களுக்கு பெரும் ஆறுதலாக அமைவதால், இந்த மையங்கள் அவசியம் என்ற நிலைக்கு நிபுணர்கள் வந்துள்ளனர். இந்தியாவில், மேல் மட்ட அளவில் இதுகுறித்த புரிதல் உள்ளதே தவிர, நடுத்தர, பாமர மக்களிடம் பெரிய அளவில் இல்லை.
இதுதொடர்பாக, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னையில், 'மாதா கேன்சர் கேர்' என்ற மையத்தை நடத்தி வரும், விஜயஸ்ரீமகாதேவன், 'இனி ஒரு வலியில்லா பயணம்' என்ற, புத்தகத்தை எழுதியுள்ளார். வலி தணிப்பு தொடர்பான சந்தேகங்களுக்கும் அவர்
அளித்துள்ள விளக்கம் இதோ...
1. 'பாலியேட்டிவ் கேர்' என்றால் என்ன?
'பாலியேட்டிவ் கேர்' என்பது மருத்துவத்துறையின் சிறப்பு துணை சிகிச்சை. இந்த சிகிச்சை நோயாளியின் வலியினை குறைத்து, அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்துகிறது. வயது வரம்பின்றி, நோய் தன்மை எப்படி இருப்பினும், இச்சிகிச்சை தரப்படுகிறது.
2. மருத்துவமனை சிகிச்சைக்கும்,
வலி தணிக்கை சிகிச்சைக்கும்
வேறுபாடு என்ன?
மருத்துவமனை சிகிச்சை
என்பது, நோயைக் கண்டுபிடித்து குணப்படுத்த போராடும் சிகிச்சை. வலி தணிப்பு சிகிச்சை என்பது நோயாளியின் முழு கவனிப்பை கொண்டது. நோயை குணப்படுத்த முடியுமோ, முடியாதோ, அதன் தன்மையை குறைப்பதே வலி தணிப்பு சிகிச்சை. 'ஹாஸ்பைஸ்' என்பது இறக்கும் தருவாயில்
இருப்பவர்களுக்கு வழங்கக் கூடியது.
3. வலி தணிப்பு சிகிச்சையை யார் தருவர்? பொது டாக்டர்களுக்கும், வலி தணிப்பு சிகிச்சை டாக்டர்களுக்கும் என்ன வேறுபாடு?
டாக்டர், செவிலியர், சமூக ஆர்வலர்கள், உணவு ஆராய்ச்சியாளர்கள், மனோதத்துவ நிபுணர் என்று பலர் அடங்கிய, திறமை மிக்க குழுவால் வழங்கப்படுகிறது. டாக்டர்கள் நோயையும், ஆரோக்கியத்தையும் மீண்டும் நிலை நாட்டுவதில் கவனம் செலுத்துவர். வலி தணிப்பு டாக்டர்கள், நோயாளியின் உடல் துன்பங்களை குறைத்து, அவர்
சுற்றத்தாரின் மன வேதனையை களைவதில் கவனம் செலுத்துவர்.
4. எல்லா டாக்டர்களும் இதை செய்ய முடியாதது ஏன்?
வலி தணிப்பு சிகிச்சை தருவோர், சிறப்பு பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். பொதுவாக டாக்டர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு நோயாளியிடமும், மன உறவை ஏற்படுத்திக் கொள்வது ஒரு முடியாத செயல். வலி தணிப்பு மருத்துவர், பொதுவான மருத்துவர் என, இருவரிடமும் ஒரே சயமத்தில் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்; இரு வகையான மருத்துவர்களும் சேர்ந்தே சிகிச்சை தரலாம்.
5. இறக்கும் வரை தங்கலாமா? வலி தணிப்பு சிகிச்சை மரணத்தை முன்பே தரும் என்பது உண்மையா?
நோய் முற்றிய நிலையில் உள்ள நோயாளிகள், இத்தகைய காப்பகங்களில் தங்களது கடைசி மூச்சு வரை இருக்கலாம். இத்தகைய உடல் நிலையில்தான், வலி தணிப்பு சிகிச்சை மையத்திற்கு, நோயாளிகளை பரிந்துரைக்கப் படுகின்றனர். வலி தணிப்பு சிகிச்சை மரணத்தை முன்கூட்டியே தரும் என்பது தவறான கருத்து. வலி குறைப்பு ஒன்றே இத்தகைய
சிகிச்சையின் குறிக்கோள்.
இப்படி தெளிவுபடுத்தி உள்ளார், விஜயஸ்ரீமகாதேவன்.

