PUBLISHED ON : பிப் 16, 2025

ஒரு நபருக்கு முதல் முறையாக டெங்கு தொற்று பாதிப்பு ஏற்படும் போது, தட்டணுக்கள், ரத்த அழுத்தம் குறைவது, ஒரே நேரத்தில் பல உள்ளுறுப்புகள் செயலிழப்பது போன்ற தீவிர பாதிப்புகள் ஏற்படாது. முதலில் பாதித்த நபருக்கே இரண்டாவது முறையும் தொற்று பாதிப்பு ஏற்பட்டால் தான், இந்த ஆபத்தான நிலை வரும்.
நம் ஊரில் டெங்குவை உண்டாக்கும் கொசுக்கள் உள்ளன. நம்மில் பலருக்கும் டெங்கு தொற்று ஏற்பட்டு, மிதமான அறிகுறிகளே இல்லாமல் தானாகவே குணமாகி இருக்கலாம்.
நம் உடலுக்குள் நுழைந்த டெங்கு கிருமியை, நோய் எதிர்ப்பு சக்தி நினைவில் வைத்திருக்கும். இதை, 'இம்மியூனோலாஜிக்கல் மெமரி' என்போம். டெங்குவில் நான்கு வகை வைரஸ் உள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள தடுப்பூசி, நான்கு வகை டெங்குவிற்கும் பலன் தரக்கூடியது.
கிருமி தொற்றை தடுப்பதற்கு, அந்தந்த கிருமியை கொண்டே தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. நம் உடம்பை எதிர்த்து சண்டை போட ஆரம்பிக்கும் போது, 'இம்தினோலாஜிக்கல் டிஸ்பங்ஷன்' ஆகிவிடும். நம் நோய் எதிர்ப்பு சக்தி, தட்டணுக்களில் வேலை செய்து குறைய ஆரம்பித்து விடும்.
தடுப்பூசி வாயிலாக டெங்கு வைரசை சிறிய அளவில் கட்டுப்படுத்தும் போது, நம் நோய் எதிர்ப்பு சக்தி, கிருமி மீண்டும் தாக்குவதாக தவறாக நினைத்து அழிக்க ஆரம்பிக்கும்.
இதனால் தட்டணுக்களின் எண்ணிக்கை குறையலாம். மோசமான எதிர்விளைவுகள் ஏற்படலாம். எந்தெந்த நாடுகளில் நீண்ட காலமாக டெங்கு பாதிப்பு உள்ளதோ, அந்நாட்டு மக்கள் அனைவருக்கும் டெங்கு தடுப்பூசி தருவது குறித்து அரசு ஆலோசனை செய்ய வேண்டும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்து உள்ளது.
தடுப்பூசி செலுத்துவதால் ஏகப்பட்ட பின்விளைவுகள் வரலாம் என்பதால் தான், மத்திய அரசு இதை செயல்படுத்தவில்லை.
சிக்குன் குனியா தடுப்பூசி நம் நாட்டிற்கு தற்போது தான் வந்துள்ளது. அமெரிக்காவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
டாக்டர் பி. செந்தூர் நம்பி,
தொற்றுநோய் சிறப்பு மருத்துவ ஆலோசகர்,
அப்பல்லோ மருத்துவமனை, சென்னை044 - 2829 3333isenthurnambi@gmail.com