PUBLISHED ON : செப் 15, 2013

ஒயின் அருந்தினால் இருதயத்துக்கு நல்லது என்கிறார்களே, அது உண்மையா? சி.முத்துராமன், திருமங்கலம்.
முந்தைய காலத்தில் பிரான்ஸ் நாட்டில் உள்ளவர்கள், நிறைய கொழுப்புச் சத்து உணவை உண்டாலும், அவர்களுக்கு மாரடைப்பு வரும் தன்மை, பிற ஐரோப்பியர்களைக் காட்டிலும் குறைவாகவே இருந்துள்ளது. இதனை 'French Paradox' என்பர். இது எதனால் என்று ஆய்வு மேற்கொண்டதில், பிரான்ஸ் நாட்டில் 'ரெட் ஒயின்' தினமும் அருந்துவதால் மாரடைப்பு வரும் தன்மை குறைவாக இருந்ததென தெரிய வந்தது. ரெட் ஒயினில் பாலிபினால்ஸ் (Ploy phenols) அதிகமாக இருப்பதாலும், 'Resveratrol' என்னும் 'ஆன்டி ஆக்சிடென்டும்' இருப்பதாலும், மாரடைப்பு வரும் தன்மை குறைவாக உள்ளதாக கண்டறிந்தனர். அதேபோல, ஆல்கஹால் இல்லாத ரெட் ஒயின் அருந்தினால் ரத்தஅழுத்தமும் குறைகிறது எனவும் ஆய்வில் தெரிய வந்தது. எனவே ஆல்கஹால் இல்லாத ரெட்ஒயினை எடுத்துக் கொள்வது நல்லது தான்.
எனக்கு எப்போதும் 'டிரைகிளிசரைட்' (DGL) அளவு 450 மி.கி., என்ற அளவில் உள்ளது. நான் என்ன செய்வது? கே. சந்தானம், தேனி.
'டிரைகிளிசரைட்' என்பது நம் ரத்தத்தில் உள்ள ஒருவகை கெட்டக் கொழுப்பு ஆகும். இதன் அளவு நார்மலாக 150 மி.கி.,க்கு கீழ் இருக்க வேண்டும். இதன் அளவு இந்தியர்களுக்கு, குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகம் உள்ளது. இதற்கு உணவில் எண்ணெய், கொழுப்பு மற்றும் பால் சார்ந்த உணவை குறைப்பது நல்லது. தினமும் நடைப்பயிற்சி மேற் கொள்வதும் அவசியம். Fibrate வகை மருந்துகள் ரத்தத்தில் 'டிரைகிளிசரைட்' அளவை நன்கு குறைக்கிறது. ஸ்டேட்டின் வகை மாத்திரையை பொறுத்தவரை, Rosuva Statin மருந்தும் இதனை நன்கு குறைக்கிறது. இது தவிர மீன் எண்ணெய் மாத்திரைகளும் டி.ஜி.எல்., அளவை குறைக்கும் தன்மை கொண்டவை.
எனக்கு பல ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. ஆறு மாதங்களுக்கு முன்பு மாரடைப்பும் ஏற்பட்டது. தற்போது என் டாக்டர், சர்க்கரை நோய் மருந்துகளை மாற்றி அமைத்துள்ளார். அதன்பின் அடிக்கடி 'லோ சுகர்' ஆகிறது. சமீபத்தில் ரத்தத்தில் சர்க்கரை 56 மி.கி., அளவிற்கு குறைந்தது. இது நல்லதா?
இருதய நோய் உள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் குறைந்தால் அது நல்லதல்ல. ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் குறைந்தால் அது இருதயத்தை பலவகைகளிலும் பாதிக்கக் கூடும். இருதய நோய் உள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு வெறும் வயிற்றில் ரத்தத்தில் சர்க்கரை அளவு 130 மி.கி., என்ற அளவிலும், சாப்பிட்டு 2 மணி நேரத்திற்குப் பின் 180 மி.கி., என்ற அளவிலும் இருப்பது தான் நல்லது. hbA1c அளவும் 7.0 அளவில் இருந்தால் போதும். நீங்கள் உடனடியாக உங்கள் டாக்டரிடம் சென்று, உங்கள் சர்க்கரை மாத்திரைகளை மாற்றி அமைத்தாக வேண்டும்.
எனது வயது 52. 2 ஆண்டுகளாக ரத்தக்கொதிப்பு உள்ளது. சமீபகாலகமாக எனக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது. காரமான, மசாலா உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது இவ்வாறு ஏற்படுகிறது. நான் என்ன செய்ய வேண்டும்? மு.முருகன், திருச்சுழி.
உங்கள் வயதில் ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் எவ்வித நெஞ்சு எரிச்சலையும் அலட்சியப்படுத்தக் கூடாது. இருதய டாக்டரை சந்தித்து, ரத்தம், சிறுநீர், எக்கோ மற்றும் டிரெட் மில் பரிசோதனைகளை செய்தாக வேண்டும். பரிசோதனையின் முடிவுகள் நார்மலாக இருந்தால், அது 'அல்சர்' பாதிப்பாக இருக்கக் கூடும். அதன்பின், அந்தப் பாதிப்புக்கு ஏற்ப மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். சிலருக்கு வயிற்று அல்ட்ரா சவுண்ட் மற்றும் எண்டாஸ்கோபி பரிசோதனைகள் தேவைப்படலாம்.
- டாக்டர் சி.விவேக்போஸ்,
மதுரை. 0452- 233 7344
