கனவு தவிர்... நிஜமாய் நில்! - உன் வாழ்க்கை உன் விருப்பம்!
கனவு தவிர்... நிஜமாய் நில்! - உன் வாழ்க்கை உன் விருப்பம்!
PUBLISHED ON : அக் 21, 2018

இந்த மாதக் கடைசியில், 'டியூ' தேதி கொடுத்துள்ளனர் டாக்டர்கள். யோகா, உடற்பயிற்சி, சிறிய அசைவுகளில் நடனம் என்று தினமும் செய்கிறேன். குழந்தையின் அசைவுகளை உணரும், ஒவ்வொரு நிமிடமும், அப்படியே வானில் மிதப்பது போல உள்ளது; அந்த மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகளே இல்லை. அதைப் பகிர்ந்து கொள்வதற்காகவே, சமூக வலைதளங்களில், என் படங்களை அவ்வப்போது வெளியிடுகிறேன்.
யானைக் குட்டி படம் போட்ட உடை அணிந்து, நான் யோகா செய்யும் படம் எல்லாருக்கும் பிடித்துள்ளது. பிறக்கப் போகும் என் குழந்தைக்காக, 'நீ சுதந்திரமானவன்(ள்), உனக்கு பிடித்த விஷயங்களை செய்வதற்கும், கனவு காண்பதற்கும், முழு சுதந்திரம் உள்ளது. உனக்கு என்ன பிடிக்கிறதோ அதைச் செய். உன் கனவுகளை துரத்த யாரும் தடையாக இருக்க முடியாது' என்று, நான் பேசி வெளியிட்ட வீடியோவைப் பார்த்து, 'ஏன் இப்படி ஒரு வீடியோ?' என்று கேட்கின்றனர்.
நான் மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த போது, என்னுடைய கர்ப்பத்தை நானும், கணவர், சோயிப் மாலிக்கும் அறிவித்தோம். அப்போது, முதல் கேள்வியே, 'குழந்தை, டென்னிஸ் விளையாடுமா அல்லது கிரிக்கெட்டா?' என்று கேட்டனர்.
கருவில் இருக்கும் போதே குழந்தை இதுவாகத் தான் ஆக வேண்டும் அல்லது இதை மட்டுமே செய்ய முடியும் என, நம் சமூகம் எப்படி ஓர் அளவுகோலை நிர்ணயிக்கிறது? என்று ஆழமாக சிந்தித்த வினாடியில், உண்மையில் எனக்கு அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் இருந்தது.
யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். உனக்கு விருப்பமானதைச் செய்யலாம். நாங்கள் எந்த விதத்திலும், அதற்கு தடையாக இருக்கப் போவதில்லை என, வெளியில் வரும் வினாடியிலேயே, என் குழந்தைக்கு நம்பிக்கை, பாதுகாப்புத் தர விரும்பினேன்.
குழந்தையின் பெற்றோர் எவ்வளவு பெரிய பிரபலங்களாக வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால், குழந்தைக்கு தன்னுடைய விருப்பதை, கனவைத் தேர்வு செய்யும் உரிமை, முழு சுதந்திரம் உண்டு.
நான் பழமையான முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தேன். ஆறு வயதில் டென்னிஸ் விளையாட விரும்பிய போது, என் அப்பா உடனடியாக பயிற்சிக்கு அனுப்பினார்.
அது தெரிந்தவுடன், என் நெருங்கிய உறவினர்கள் எல்லாம், 'பெண் குழந்தையை விளையாட அனுப்புவது சரியில்லை. தோலின் நிறம் மாறி கறுத்து விட்டால் யார் இவளை திருமணம் செய்வார்கள்? ஷார்ட்ஸ், டீ சர்ட் போட்டுக் கொண்டு, பலர் பார்க்க, அவள் விளையாடுவதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை' என்ற, ரீதியில் பலதையும் சொல்லி, என் பெற்றோரை மன அழுத்தத்திற்கு ஆளாக்கினர்.
ஆனால், யார் என்ன சொன்னாலும், என் கனவுகளுக்கு துணையாக இருந்தார் என் அப்பா. நானும் என் குழந்தைக்கு அதைத் தான் செய்வேன்.
சானியா மிர்சா, டென்னிஸ் வீராங்கனை, ஐதராபாத்.
