PUBLISHED ON : மே 15, 2022

'வெயில் காலத்தில் தாகம் அதிகம் உள்ளது; திரும்ப திரும்ப நாக்கு வறண்டு போகிறது; பசி இல்லை; அப்படியே பசித்தாலும், சாப்பிட முடிவதில்லை...' என்பது தான் பெரும்பாலானவர்கள் என்னிடம் சொல்லும் பிரச்னைகள். இது, இயற்கை தான்.
அதிக தாகம், பசியின்மை, வயிற்றில் உபாதை, குடல் புழு போன்ற பிரச்னைகள் இருப்பவர்கள், 'தானியஹாதி ஹீமம்' என்ற தனியா விதையை பயன்படுத்தி செய்யும் கஷாயத்தை குடிக்கலாம்.
இந்த பானத்தை மண்பானையில் செய்யும் போது தான், முழு பலன் கிடைக்கும். மண்பானை குளிர்ச்சியை தரும். தனியா விதையின் குணம் உஷ்ணம் தான் என்றாலும், தாகத்தைப் போக்கக்கூடிய தன்மை, அதற்கு உள்ளது.
நான்கு ஸ்பூன் அதாவது, 20 கிராம் தனியா விதைகளை, உரலில் ஒன்றிரண்டாக இடித்து, இத்துடன், 120 மில்லி கொதிக்கும் நீர் ஊற்றி, பானையை மூடி வைத்து விட வேண்டும். மண்பானை இல்லாவிட்டால், எந்தப் பாத்திரத்தில் செய்கிறீர்களோ, அதை சுத்தமான ஈரத் துணியால் கட்டி வைத்து விட வேண்டும்.
காலையில் மத்தால் நன்கு கடைந்து, வடிகட்டி, வெறும் வயிற்றில் இந்த நீரை குடிக்கலாம். பித்தம் அதிகம் இருப்பவர்கள், இத்துடன் சுவைக்கு ஏற்ப பனங்கற்கண்டு சேர்த்து கலந்து குடிக்கலாம். வெயில் காலத்தில் வரும் அஜீரணம், தாகம், குடல் கிருமி, வயிறு உப்புசம், வலி இவற்றை போக்கக் கூடிய சக்தி இதற்கு உண்டு. கோடை காலத்தில், இந்த நீர் நல்ல பலன் தரும்.
டாக்டர் எம்.ஹரி கிருஷ்ணன்
ஆயுர்வேத மருத்துவர், சென்னை
80159 58409
