PUBLISHED ON : ஜூலை 23, 2023

'அனஸ்தீசியா' எனப்படும் மயக்கவியல் துறையில் சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவரான நான், கடந்த ஐந்து ஆண்டுகளாக, 'கிரிட்டிக்கல் கேர்' எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவில் சிறப்பு பயிற்சி பெற்ற டாக்டராக பணி செய்கிறேன்.
'சூப்பர் ஸ்பெஷாலிட்டி'
மருத்துவ சிகிச்சை, ஆலோசனை என்பதே இன்று சிறப்பு மருத்துவம் அதாவது 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' என்று ஆகிவிட்டது. என்ன பிரச்னை வருகிறதோ, அதற்கேற்ப அந்தந்த துறையில் சிறப்பு டாக்டரிடம் ஆலோசனை பெறுவதையே மக்கள் விரும்புகின்றனர். அப்படியான நிலையில் மாரடைப்பு, மூச்சுத் திணறல் என்று எதிர்பாராமல் வரும் அவசர சூழலில் மருத்துவமனையை அணுகும் போது, ஐ.சி.யு.,வில் தான் நோயாளியை முதலில் அனுமதிப்பர்.
உயிர் காக்கும் கருவிகளை பொருத்தி முதலுதவி செய்துவிட்டு, சம்பந்தப்பட்ட சிறப்பு மருத்துவர் வரும் வரை காத்திருக்கும் நிலை தான், பெரும்பாலான மருத்துவமனைகளில் இன்றும் இருக்கிறது.
இந்த நிலைமையை மாற்றி, ஐ.சி.யு.,வில் பொறுப்பில் உள்ள டாக்டர்களே, அனைத்து சிக்கலான பிரச்னைகளையும் கையாளும் விதமாக, சிறப்பு பயிற்சி பெறுவது தான் இன்றைய சூழலில் அடிப்படையான தேவை. இதைத்தான் எங்கள் மையத்தில் செய்துள்ளோம்.
உதாரணமாக, மாரடைப்பு ஏற்பட்டு அவசரமாக ஒருவர் வருகிறார் என்றால், தீவிர சிகிச்சை பிரிவில் படுக்க வைத்துவிட்டு, இதய நோய் மருத்துவர் வரும் வரை காத்திருக்காமல், சம்பந்தப்பட்ட டாக்டருக்கு தகவல் தந்துவிட்டு, அவர் வருவதற்கு முன்பே, எதனால் பிரச்னை ஏற்பட்டது என்பதை பரிசோதித்து, உடனடியாக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து விடுவோம்.
அதே போன்று, 'செப்டிசீமியா' எனப்படும் ரத்தத்தில் வேதிப் பொருட்கள் வெளிப்படுவதால் ஏற்படும் அழற்சி, சிறுநீரக செயலிழப்புகளுக்கு உடனடியாக 'டயாலிசிஸ்' செய்ய வேண்டிய அவசியம் இருக்கும். சிறுநீரகவியல் சிறப்பு டாக்டருக்கு தகவல் தந்துவிட்டு, அவர் வருவதற்கு முன்னரே நாங்கள் சிகிச்சையை ஆரம்பித்து விடுவோம். விஷ ஜந்துக்களிடம் கடிபட்டு வருபவர்கள் துவங்கி, என்னவிதமான நஞ்சுகளால் பாதிக்கப்பட்டாலும், அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சமாளிக்கிறோம்.
காலில் தொற்றுடன் வரும் நபருக்கு எவ்வளவு விரைவாக ஆன்டி-பயாடிக் மருந்துகளை தருகிறோமோ, அவ்வளவு விரைவாக அவர் பிரச்னையில் இருந்து வெளியில் வருவார். தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறையும். வெறுமனே மாத்திரை, மருந்துகளை கொடுக்காமல், என்ன காரணத்தால் அவருக்கு தொற்று ஏற்பட்டது என்பதையும் கண்டறிந்து, தேவையான மேல்சிகிச்சையை தந்தால் மட்டுமே குணம் பெற முடியும்.
ஐ.சி.யு., அனஸ்தீசியா இரண்டு பிரிவிலும் சிறப்பு பயிற்சி பெற்றிருக்கும் டாக்டர்களால் மட்டுமே இதை எளிதாக சமாளிக்க முடியும்.
டாக்டர் அருண் குமார்,
தீவிர சிகிச்சை பிரிவு
சிறப்பு மருத்துவ ஆலோசகர், புதுச்சேரி.

