PUBLISHED ON : டிச 08, 2024

''நாம் விரும்பி உண்ணும் பீட்ஸா, பர்கர், ப்ரைடு ரைஸ், சாக்லேட், கேக், பிரட் அனைத்திலும் பிரதானமாக இருப்பது மாவு சத்து. இவற்றை சாப்பிட்டு பல நேரம் கழித்து பற்களின் மேல் ஒரு படலம் போன்று ஒட்டிக்கொள்ளும். நேரம் செல்ல செல்ல இவை அமிலத்தன்மை கொண்டதாக மாறும். பற்களின் மேல் பாதுகாப்பாக இருக்கும் எனாமல் பாகத்தை அரித்து விடும். இந்த படலம் நீண்ட நேரம் பற்களில் இருப்பதால் கிருமிகளை ஈர்த்து பற்கள், ஈறுகளில் பாதிப்பு ஏற்படுத்த வழிவகை செய்து கொடுக்கிறது.
பல் சொத்தை ஏற்பட பதப்படுத்தப்பட்ட சர்க்கரை சார்ந்த உணவுகள் தான் காரணம். இவை பல் சொத்தை, ஈறுகளில் ரத்தக் கசிவு, பற்களில் கரை, வாய் துர்நாற்றம் என வாயின் ஆரோக்கியத்தை பாதிக்கும். குழந்தைகளின் பற்களை அதிகமாக பாதிக்கும். பிஞ்சு பற்களை வளரும் நிலையிலேயே அரித்து விடும்.
உணவே மருந்து
நாம் உண்ணும் உணவு தான் நம் உடலின் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கிறது. அதை சரியாக தேர்வு செய்யும் பொறுப்பு நமக்கு உள்ளது. பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. சுலபமாக கிடைக்கிறது. சுவையாக இருக்கிறது எனக்கூறி துரித உணவு, பதப்படுத்தப்பட்ட இனிப்புகளை உண்ணும் பழக்கத்தை உதறி தள்ள வேண்டும். ஒரு நாள் ஆசைக்காக சாப்பிடுவது தவறில்லை. நம் உணவு பழக்கம் சீரானதாக இருக்க வேண்டும். அதில் பச்சை காய்கறிகள், புரதச்சத்து, நார்ச்சத்து நிறைந்த உணவுகள் இருக்க வேண்டும். இன்று நாம் சாப்பிடும் உணவு நாளை நம் ஆரோக்கியத்திற்கு அஸ்திவாரம்.
ஆரோக்கியமான உணவுகளில் சுவை இல்லை என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும். நம் பாரம்பரிய உணவுகளில் சுவையும் உள்ளது; மருத்துவ குணங்களும் உள்ளன. உணவருந்திய பின் வாயை சுத்தம் செய்ய வேண்டும். தினமும் இரு முறை பல் துலக்கி பற்கள், ஈறுகளை சுத்தமாக வைக்க வேண்டும். சமச்சீர் உணவுமுறையும் நல்ல பழக்கங்களும் ஆரோக்கிய வாழ்வை தரும்'' என்கிறார் டாக்டர் ஜெ.கண்ணபெருமான்.
மேலும் அறிய 94441 54551ல் தொடர்பு கொள்ளலாம்.
இந்த அவசர உலகில் நமக்கு பழக்கப்பட்டு விட்ட ஒன்று துரித உணவுகளும், இனிப்புகளும். நேரத்தை மிச்சப்படுத்துகிறது; சுவையாக உள்ளது; உடனடியாக கிடைக்கிறது என்று பல காரணங்கள் கூறினாலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பட்டியலில் முதலில் இருப்பது பாஸ்ட்புட் எனப்படும் துரித உணவுகள் தான். இவை பற்களையும் ஈறுகளையும் பல வகையில் சேதப்படுத்துகின்றன என்கிறார் மதுரை பல் மருத்துவர் டாக்டர் ஜெ.கண்ணபெருமான்.