
உணவே மருந்தாக இருந்தால், ஆரோக்கிய வாழ்விற்கு தடையில்லை. மாறாக, உணவு நோயை உருவாக்குவதாக இருந்தால், பிரச்னை தான். உணவே மருந்தாக பயன்படும் உணவுதான், வரகு அரிசி காளான் பிரியாணி.
வரகு அரிசி காளான் பிரியாணி செய்வது எப்படி?
தேவையானவை
வரகு அரிசி 1/4 கிலோ
காளான் 50 கிராம்
வெங்காயம் 1 பெரியது
தக்காளி 1 பெரியது
எண்ணெய் தேவையான அளவு
நெய் சிறிதளவு
தயிர் 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் 2
ஏலக்காய் 3
மிளகாய்பொடி 1 தேக்கரண்
மல்லிபொடி 1 தேக்கரண்டி
கரம் மசாலா பொடி
இஞ்சி, பூண்டு, பட்டை, சோம்பு, இலவங்கம், புதினா, கொத்தமல்லி, மஞ்சள் - சிறிதளவு
செய்முறை:
வரகு அரிசி மற்றும் காளானை கழுவி வைத்துக்கொள்ள வேண்டும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி கொள்ள வேண்டும். தக்காளி, புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், சோம்பு. இலவங்கம்
போட்டு தாளிக்க வேண்டும். பின், வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி சேர்க்க வேண்டும்.அதோடு, காளான் மற்றும் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, கரம் மசாலா பொடி, தயிர் சேர்த்து வதக்க வேண்டும். பின், கழுவி வைத்துள்ள, வரகு அரிசியுடன் சமஅளவு தண்ணீர் சேர்த்து, குக்கரில், இரண்டு விசில் வரும் வரை, வைத்து இறக்கினால், கமகமக்கும் வரகு அரிசி காளான் பிரியாணி தயார்.
பயன்கள்:
அரிசி, கோதுமையை விட, வரகு அரிசியில் நார்ச்சத்து அதிகம். மாவுச்சத்து குறைவாக காணப்படுவதால், உடலுக்கு நல்லது. இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின் 'பி' கொண்டதாகவும் உள்ளது. தாதுப்பொருட்களும் நிரம்ப உள்ளன.
- லீலாவதி சீனிவாசன்,
சமையற்கலை நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளர்.

