
நார்ச்சத்து மிகுந்த குதிரைவாலி அரிசியில், நம் அன்றாட தேவைக்கான அவசிய ஊட்டச்சத்துகள் உள்ளன. அது, இதயத்துக்கு வலு சேர்க்கும். அதில், சுவையாக செய்யப்படுவதுதான் குதிரைவாலி பணியாரம்.
குதிரைவாலி பணியாரம் செய்வது எப்படி?
குதிரைவாலி அரிசி 1/2 கிண்ணம்
தினை 1/2 கிண்ணம்
உளுந்தம் பருப்பு 1/4 கிண்ணம்
வெங்காயம் 1 சிறியது
காய்ந்த மிளகாய் 4
உப்பு, எண்ணெய் தேவையான அளவு
கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், சுக்கு, பெருங்காயம்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
குதிரைவாலி அரிசி, தினை மற்றும் உளுந்தம் பருப்பு இவற்றை நான்கு மணிநேரம் ஊற வைத்த பின், இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொண்டு, அதை நான்கு மணிநேரம் புளிக்க விட வேண்டும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், சுக்கு இவற்றை போட்டு தாளிக்க வேண்டும். வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும் அதோடு கேரட்டையும் துருவி போட்டு வதக்கி, இவற்றை அரைத்து வைத்துள்ள மாவில் கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, பணியாரச் சட்டியில் மாவை ஊற்றி, வேக வைத்து இறக்கினால், சூடான சுவையான குதிரைவாலி பணியாரம் தயார்.
பயன்கள் : நமது உடலுக்குக் கனிமச்சத்தும் பாஸ்பரசும் முக்கியம். நமது
உடல் கட்டமைப்பை உருவாக்குவதில் கனிமங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. தினையில் புரதம், கொழுப்பு சத்து, நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் போன்றவை உள்ளன. குதிரைவாலியிலும் நிறைய கனிமச்சத்து உள்ளது. புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் பெற்றது. உடல் எடையை குறைக்கவும் இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கவும் ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகவும் வேலை செய்கிறது.
- லீலாவதி சீனிவாசன்,
சமையற்கலை நிபுணர் மற்றும் ஆராய்ச்சியாளர்.

