தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/நலம்/பூஞ்சை தொற்றுக்கு ஊட்டம் தரும் சர்க்கரை!

பூஞ்சை தொற்றுக்கு ஊட்டம் தரும் சர்க்கரை!

பூஞ்சை தொற்றுக்கு ஊட்டம் தரும் சர்க்கரை!


PUBLISHED ON : ஜூன் 19, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 19, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'மியூகோர் மைகோசிஸ்' எனப்படும் பூஞ்சை தொற்று பற்றிய பயம் பரவலாக உள்ளது. முதலில், நாம் புரிந்து கொள்ள வேண்டியது, மியூகோர் மைகோசிஸ் இல்லாத உலகத்தில் நம்மால் வாழவே முடியாது. சுற்றுப்புறத்தில் சாதாரணமாகவே மியூக்கோர் மைகோசிஸ் உள்ளது. வீட்டிற்குள் பதுங்கி இருந்தாலும், வீட்டுக்குள்ளும் பூஞ்சை இருக்கிறது.

யாரை பாதிக்கும்?

வெளிப்புறத்தில் இருக்கும் பூஞ்சை, மூக்கின் வழியே உடலினுள் செல்லும். ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள், சில வினாடிகளில் இவற்றை தாக்கி அழித்து விடும்.

ஆனால், தீவிர வைரஸ் தொற்று இருந்தால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இத்துடன் சேர்த்து, ரத்த சர்க்கரையின் அளவு மிக அதிகமாகும் போது, நோய் எதிர்ப்பு சக்தி இன்னும் குறைந்து விடும்.

இது போன்ற நிலையில் தான், 90 சதவீதம் மியூகோர் பாதிக்கிறது. சர்க்கரை கோளாறு இல்லாதவர்களுக்கு இந்த பிரச்னை வருவது மிகவும் அரிது.

கொரோனா பாதித்து குணமான, 25 வயது நபர், ஒரு பக்க கன்னம், மரத்து இருப்பதாக சொன்னார். ஸ்டிராய்டு மருந்துகளால் எதிர்ப்பு சக்தி குறைந்து, மியூகோர் தொற்று வந்திருக்கும் என்று தான் முதலில் நினைத்தோம்.

மூன்று மாத சராசரி ரத்த சர்க்கரை அளவை அறிய, 'ஹெச்பிஏ 1c' பரிசோதனை செய்த போது தான் தெரிந்தது, அவருக்கு அறிகுறிகள் இல்லாத சர்க்கரை கோளாறு பல ஆண்டுகளாக இருந்து உள்ளது.

நடுத்தர வயது தம்பதியில், கணவருக்கு பல ஆண்டுகளாக சர்க்கரை கோளாறு உள்ளது; கட்டுக்குள் வைத்துள்ளார். இருவரையும் கொரோனா தொற்று பாதித்தது.

தனக்கு சர்க்கரை கோளாறு இல்லை என்று சொன்ன அவர் மனைவிக்கு, சர்க்கரை கோளாறு இருந்தது, சிகிச்சையின் போது தான் தெரிந்தது.

ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருந்தால், பூஞ்சை தொற்று பற்றி பயப்பட அவசியம் இல்லை. மியூகோர் வளர்வதற்கு ஊட்டச்சத்து கொடுப்பதே ரத்த சர்க்கரை தான்.

கொரோனா வைரஸ் நுண்கிருமி என்பதால், ஒரே நேரத்தில் பல லட்சம் பேரை பாதிக்கிறது.

ஆனால், அதோடு ஒப்பிடும் போது, பூஞ்சையின் அளவு மலை போன்றது. அவ்வளவு எளிதில் பரவாது. நாம் பயப்படும் அளவிற்கு மியூகோர் வீரியம் மிகுந்த பூஞ்சை இல்லை.

எப்படி பரவும்?

மூக்கு வழியாக உடலுக்குள் நுழையும். அதிலிருந்து இரண்டு விதங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். மூக்கின் இரு புறத்திலும் உள்ள சைனஸ் பகுதியை பாதித்து, அங்கிருந்து கண்களுக்கு சென்று, இறுதியில் மூளையை பாதிக்கலாம் அல்லது சைனஸ் வழியே கீழே சென்று நுரையீரலை பாதிக்கும்.

முதலில் சிறு துகளாக உள்ளே செல்லும் பூஞ்சை, பிறகு காலனி போன்று கூட்டம் சேர்த்துக் கொண்டே போகும்.

கூட்டம் சேர சேர கண்ணுக்கும், சைனசிற்கும் இடையில் உள்ள எலும்பை சிறிது சிறிதாக அரித்து, கண்களுக்குள் செல்லும். இது, ஒன்றிரண்டு நாளில் நடந்து விடுவதில்லை; சில நாட்கள் ஆகலாம்.

கண்களை சுற்றி உள்ள எலும்பில் சென்று தங்கி, பின்பக்கம் இருந்து தள்ளிக் கொண்டே வரும். இதனால் கண்கள் வீங்கி, முன்பக்கமாக தள்ளி இருப்பது போன்று தோன்றும்.

எல்லா பக்கமும் சுழலும் தன்மை உடையது கண்கள். பூஞ்சை பாதித்த கண்ணில் சுழலும் தன்மை குறைந்து, பாதிக்காத கண் சுலபமாக சுழலும். இதனால் பார்க்கும் பிம்பம் இரண்டிரண்டாக தெரியும்.

வீக்கம் அதிகரிக்க அதிகரிக்க கீழ்ப்பக்கம் இருக்கும் மியூக்கோர், மேல் பக்கம் பரவ துவங்கும்.

கண்களுக்கு மேலே மூளையை சுற்றியிருக்கும் எலும்பை ஊடுருவி மூளையை பாதிக்கும். மூளையை பாதித்தால், முதலில் குழப்பம் வரும்; சிலருக்கு வலிப்பு வரலாம். இந்த நிலைக்கு சென்றால் தான் உயிரிழக்க நேரிடும்.

டாக்டர் என்.வெங்கடேஷ் பிரஜ்னா,

தலைவர், மருத்துவ கல்வி துறை,

அரவிந்த் கண் மருத்துவமனை,

மதுரை. 0452 - 4356 500


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us