PUBLISHED ON : செப் 06, 2015
கர்ப்பிணிகள் குங்குமப் பூ சாப்பிட்டு வந்தால், அவர்களது குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பது நம்பிக்கை. அதே குங்குமப்பூ சுகப்பிரசவத்திற்கும் உதவுகிறது.
ஒரு கர்ப்பிணி, பிரசவம் எளிதில் ஆகாமல் அவதி பட நேரிடும்போது, அவருக்கு சிறிதளவு குங்குமப் பூவை, சோம்பு நீரில் கரைத்து உட்கொள்ளக் கொடுத்தால் உடனே பிரசவம் ஏற்படும்.
இதேபோல், கர்ப்பம் தரித்துள்ள பெண்கள் வெற்றிலையுடன் சிறிது குங்குமப்பூவை கலந்து சாப்பிட்டு வந்தாலோ அல்லது காய்ச்சிய பாலில் அதை இட்டு அருந்தி வந்தாலோ, பிறக்கும் குழந்தையானது அழகாகவும், பிரசவ வலி இன்றியும் பிறக்கும்.
அதோடு, பெண்களின் மாதவிலக்கு வலியைப் போக்கும் குணமும் குங்குமப்பூவிற்கு உண்டு. குங்குமப்பூவில் அழகின் ரகசியமும்
ஒளிந்துள்ளது.
குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொண்டு, அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வந்தால், முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம்.
குங்குமப்பூவை உரசி, ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்குமப்பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும், சிறிது வெண்ணெய் கலந்து நன்றாக குழைக்கவும்.
இந்த கலவையை தினமும் பூசி வந்தால், உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.
நக சுத்தி வந்து, அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்களை, குங்குமப்பூ வெண்ணெய் கலவை சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும்.

