PUBLISHED ON : மே 24, 2015
இடுப்பு வலியால் அவதிப்படாதவர்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு, இன்று, அனைத்து வயதினருக்கும் இப்பிரச்னை உள்ளது. இதற்கு காரணம், இன்றைக்கு உள்ள பணித்தன்மையும், பணிச்சுமையும் முக்கிய காரணமாக உள்ளது.
அலுவலகத்தில், அதிகபட்ச நேரம் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இடுப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்யும் செய்வோருக்கு, முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்டு, இடுப்புலி ஏற்படுகிறது. இதற்கு தீர்வு, அடிக்கடி அமர்ந்திருக்கும் இருக்கை விட்டு எழுந்து செல்ல வேண்டும். சரியான உயரத்தில் அமைக்கப்பட்ட மேஜைகளை பயன்படுத்த வேண்டும். அமர்ந்திருக்கும் இருக்கை நன்கு சுழலுமாறும், மேஜையின் உயரத்துக்கு தகுந்தவாறும் இருக்கையின் உயரத்தை வைக்க வேண்டும்.
பணி முடிந்ததும், நாள்தோறும் தவறாமல் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நெடுநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பணி செய்கின்ற போது, முதுகெலும்பு அதிக அழுத்தத்துக்கு ஆளாகிறது. குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையாவது, இருக்கையை விட்டு
ஒரு நிமிட நேரம் நின்று சிறிது தூரம் நடந்த பின் வந்து அமர்வது நல்லது.
ஒரு காலை நேராகவும், மற்றொரு காலைச் சற்று மடக்கிய நிலையிலும் வைத்து நிற்கலாம். சிறிய பலகை அல்லது சின்ன இருக்கையின் மேல் ஒரு காலை வைத்துக் கொள்ளலாம். இயன்ற வரை மிகத் தட்டையான தலையணை ஒன்றைப் பயன்படுத்தி மல்லாந்த நிலையில் படுத்துத் தூங்குவது நல்லது.
ஸ்பாஞ்ச், இலவம் பஞ்சு நிறைந்த மென்மையான மெத்தைகளைத் தவிர்த்து தேங்காய் நார் மெத்தைகளில் படுப்பது நல்லது. ஸ்பிரிங் இல்லாத தட்டையான மரக்கட்டில் அல்லது இதமான கட்டிலில் தூங்கலாம். படுக்கையிலிருந்து சடாரென எழுந்திராமல், மெல்ல உருண்டு படுக்கையின் ஓரத்துக்கு வந்து கால்களைத் தரையில் ஊன்றி எழுந்து உட்காருங்கள்.
நீண்ட நடைப்பயிற்சியில் ஈடுபடுங்கள். பளு தூக்குவது போன்ற பயிற்சிகளைத் தவிருங்கள். தரையிலுள்ள பொருள்கள் எதையேனும் தூக்க வேண்டியிருந்தால், மண்டியிட்டு உட்கார்ந்து அதன் பின் தூக்குங்கள். கழுத்துவலி, தோள்வலி இருந்தால் அதற்கு மருத்துவம் செய்து கொள்ளுங்கள். இல்லாவிடில், அது முதுகு வலியில் போய் முடியலாம்.
உடல் எடையை இயன்ற அளவு கட்டுக்குள் வையுங்கள். உணவு முறைகளில் குளிர்ந்த உணவு, பானங்களை தவிர்க்கவும். கத்தரிக்காய், முளைகட்டிய பீன்ஸ், கொய்யாப்பழம், வாழைப்பழம், சீதாப்பழம், அன்னாசி, வறுத்த உணவு, கடல் உணவு, இனிப்புகள், தயிர், ஊறுகாய் இவற்றை தவிர்க்கவும். எள்ளை சிறிதளவு எடுத்து, தண்ணீர் விட்டு அரைத்து வலிக்கும் இடத்தில் பல தடவை தடவவும்.
