PUBLISHED ON : பிப் 28, 2016
மிதமிஞ்சிய சளியாலும், சளி கெட்டிப்படுவதாலும் ஏற்படும் நோய் இது. கோழை கட்டுதல் என்றும் அழைக்கப்படுகிறது. வெள்ளைப் பூண்டை அரைத்து, ஒரு துணியில் கட்டி, அதனை விளக்கில் காட்டிச் சுடவைத்து, அத்துணியைப் பிழிந்து இஞ்சிச் சாற்றோடு கலந்து குடித்தால், கபம் நீங்கும்.
வெள்ளைப் பூண்டைச் சுட்டு அல்லது வேக வைத்து கடைந்து, தினமும் இரண்டு அல்லது மூன்று வேளை குடித்தாலும், குப்பைமேனிக் கீரையை அரைத்துச் சாறு குடித்து வந்தாலும், இந்நோய் குணமாகிவிடும்.
இருமல்: சுக்கு, உப்பு இரண்டையும் அரைத்து, தொண்டையில் பூசினாலோ, பனைக் கற்கண்டோடு மிளகு சேர்த்து உண்டாலோ, இருமல் நின்றுவிடும்.
வயிற்றுப்போக்கு: வயிற்றுப் போக்கு உள்ளவர்கள், வெந்நீரில் உப்பு போட்டுக் குடிக்கலாம். மாதுளம் பழத்தின் தோலை அரைத்துத் தண்ணீரில் ஊற்றிக் கஷாயம் செய்து குடிக்கலாம். தேயிலை நீரில், எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து குடிக்கலாம்.
கால் வீக்கம்: கால் வீக்கம் இருந்தால், நல்லெண்ணெய், சாம்பிராணி, எலுமிச்சம்பழச்சாறு இவற்றைச் சேர்த்து சூடாக்கி, இளஞ்சூட்டில் ஒத்தடம் கொடுத்து வந்தால், கால் வீக்கம் குறையும். பச்சரிசி மாவை வேக வைத்து, வீக்கத்தில் கட்டினாலும் வீக்கம் குறைந்துவிடும்.
மஞ்சள் காமாலை: மஞ்சள் காமாலை நோய்க்கு, இன்று வரை நாட்டுப்புற மருத்துவமே சிறப்பாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நோய் உள்ளவர்கள், கீழாநெல்லி (வேர் தவிர்த்து) இலையை அரைத்து, பசும்பாலுடன் சேர்த்து தொடர்ந்து மூன்று வேளை (வாரம் ஒருமுறை) குடித்து வந்தால், பூரண குணமாகும்.
மலச்சிக்கல்: ஆமணக்கு வேரை நீரில் போட்டுக் காய்ச்சி, கஷாயம் செய்து கஷாயத்துடன் பசும்பாலும், சர்க்கரையும் கலந்து தினமும், காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம்.