PUBLISHED ON : மார் 09, 2014

சைவமாக இருந்தால், ரத்தஅழுத்தம், உடல் எடை, கொலஸ்ட்ரால் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவும் குறைக்கப்படுகிறது. இதுபோன்ற பலன்களால், ரத்தநாளங்களின் ஆரோக்கியமும் மேம்படும். இதுதவிர, உணவுப் பாதையிலும், ஜீரண சக்தி அதிகரிக்கிறது
* என் வயது, 42. இதுவரை. அசைவமாக இருந்த நான், கடந்த சில மாதங்களாக, முற்றிலும் சைவமாக மாறிவிட்டேன். இதனால், உடல் ஆரோக்கியத்துக்கு பலன் உண்டா?
சமீபத்தில் நடத்திய மருத்துவ ஆய்வில், அசைவம் சாப்பிடுவோரை விட, சைவம் சாப்பிடுவோரின் ஆயுட்காலம், நீண்டதாக உள்ளது என, கண்டறியப்பட்டுள்ளது. இதுமட்டும்இன்றி, சைவமாக இருந்தால், ரத்தஅழுத்தம் குறைக்கப்படுகிறது. இத்துடன் உடல் எடை, கொலஸ்ட்ரால் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவும் குறைக்கப்படுகிறது. இதுபோன்ற பலன்களால், ரத்தநாளங்களின் ஆரோக்கியமும் மேம்படும். இதுதவிர, உணவுப் பாதையிலும், சைவமாக இருப்போருக்கு ஜீரண சக்தி அதிகரிக்கிறது. சைவமாக உள்ள பெரும்பாலோருக்கு, மனக்கட்டுப்பாடும் உள்ளதால், அவர்கள் வாழ்க்கை முறையையும் சரியாக்கி கொள்கின்றனர். குறிப்பாக, உடற்பயிற்சி செய்து, உடலுக்கு ஆரோக்கியம் ஏற்படுத்தும் மனநிலைக்கு மாறி விடுகின்றனர். எனவே, நீங்கள் தொடர்ந்து சைவமாக இருப்பது சிறந்த பழக்கம்.
* என்னால் பல்வேறு காரணங்களால், தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ள இயலவில்லை. எனவே, நான் பணிசெய்யும் இடத்திற்கு சைக்கிளில் செல்லலாமா?
உடல் ஆரோக்கியத்திற்கு, சைக்கிள் ஓட்டுவது மிகச்சிறந்த உடற்பயிற்சி. குறிப்பாக, கால் மூட்டு வலி உள்ளவர்கள், சைக்கிள் ஓட்டினால், வலி ஏற்படாது. வீட்டில் இருக்கும் பெண்கள்கூட, 'ஸ்டாண்டிங் சைக்கிள்' என்னும் நிலையான சைக்கிள்களை வைத்து, 'டிவி' பார்த்துக் கொண்டே ஓட்டி, ஆரோக்கியம் பேணலாம்.
* எனக்கு இரு ஆண்டுகளாக, ரத்தத்தில் டி.ஜி.எல்., 300 மி.கி., என்ற அளவில் உள்ளது. நான் என்ன செய்வது?
Tgl என்பது TriGlyceribe என்ற கெட்ட கொழுப்பை குறிக்கிறது. இது, இந்தியர்களுக்கு, குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகமாகவே உள்ளது. இதற்கு, எண்ணெய் மற்றும் கொழுப்புச் சத்து வகை உணவுகளை, அறவே தவிர்க்க வேண்டும். பால் சார்ந்த உணவை, நன்கு குறைக்க வேண்டும். தினசரி நடைப்பயிற்சி அத்தியாவசியமானது.
மருந்து வகைகளில், Fibrate மற்றும் Rosuva Statin வகை மருந்துகள், டி.ஜி.எல்., அளவை, நன்கு குறைக்கிறது. ரத்தத்தில் டி.ஜி.எல்., அளவை, 150 மி.கி.,க்கு, கீழ் வைத்துக் கொள்ள வேண்டும்.
டாக்டர் சி.விவேக்போஸ், மதுரை.

