PUBLISHED ON : ஏப் 19, 2015

உலர் திராட்சை, உடலுக்கு வலிமை தரும் பழங்களில் ஒன்றாகும். உடற்பயிற்சி செய்வோர் மற்றும் விளையாட்டு வீரர்கள் இப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால், உடலுக்கு நல்ல சக்தி கிடைக்கும். குறிப்பாக, மராத்தான் ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்போர் சாப்பிட்டால்
நல்லது. உலர் திராட்சைப்பழங்களை மென்று சாப்பிடுவதால், உடலுக்கு தேவையான சக்தி கிடைக்கிறது என்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக நடத்திய ஆய்வுக்காக, 5 கி.மீ., தூர ஓட்டப்பந்தயத்தை நடத்தினார்கள். இதில், கலந்து கொண்டவர்களில் சிலர், வெறும் தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு ஓடினார்கள்.
வேறு சிலர் கார்போஹைட்ரேட் அதிகமிருக்கும் இனிப்புகளை, சாப்பிட்டு ஓடினார்கள். மற்றவர்கள் உலர் திராட்சைப்பழங்களை சாப்பிட்டு விட்டு ஓடினார்கள். போட்டியின் இறுதியில் வெறும் தண்ணீர் குடித்துவிட்டு ஓடியவர்களை விட, இனிப்புகளையும் உலர் திராட்சைகளையும் சாப்பிட்டுவிட்டு ஓடியவர்கள், 5 கி.மீ., தூரத்தை ஒரு நிமிடம் முன்னதாக ஓடி முடித்தார்கள்.
இதிலிருந்து, கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கும், இனிப்புக்களுக்கு சமமாக, உலர் திராட்சைகளும் நீடித்த உடல் வலிமையை தருகிறது என்பது ஆய்வில் தெரிய வந்தது. உலர் திராட்சைகளில் உள்ள, அதிகமான பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து, விளையாட்டு போட்டிகளுக்கு தேவைப்படும் நுண்ணிய சக்தியாகவும், இயற்கையான ஊக்கமருந்தாகவும் பயன்படுகிறது.
இதில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளன. விட்டமின்களும், அமினோ அமிலங்களும் உடலுக்கு நல்ல சக்தியை அளிக்கின்றன. பொட்டாசியமும், மெக்னீசியமும் காணப்படுவதால், அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு, குறைவாக இருப்பவர்கள் தொடர்ந்து உலர் திராட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள், ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். மஞ்சள் காமாலை உள்ளவர்கள், தினமும் இருவேளை உலர் திராட்சையைச் சாப்பிட்டால் காமாலை நோய் குணமடையும்.
உலர் திராட்சை பழத்தில், 50 பழங்களை எடுத்து பசும்பாலில் போட்டு காய்ச்சி ஆற வைத்து, பழத்தை சாப்பிட்டு விட்டு பாலைக் குடித்தால் காலையில் மலச்சிக்கல் பிரச்னை சரியாகும். உலர் திராட்சையில் உள்ள கால்சியம் சத்து, எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
குழந்தைக்கு பால் காய்ச்சும் போது, அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு, காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால் குழந்தைகள் நல்ல ஆரோக்கியமாக வளருவார்கள். மூல நோய் உள்ளவர்கள் தினசரி உணவுக்குப் பின்னர் காலையிலும், மாலையிலும்,
25 உலர் திராட்சைப் பழங்களைத் தொடர்ந்து, 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.