PUBLISHED ON : ஏப் 10, 2022

பூஜைக்கு பயன்படுத்தும் கற்பூரம், 'டர்பன்டைன்' எண்ணெயை காய்ச்சி அதிலிருந்து எடுக்கப்படுவதால், உணவாக பயன்படுத்தக்கூடாது. இன்னொன்று, கற்பூரம் என்ற செடியின் தண்டிலிருந்து நேரடியாக கிடைக்கும் பச்சைக் கற்பூரம்; இது மருத்துவ குணம் கொண்டது.
பெருமாள் கோவில் தீர்த்தம், இனிப்பு வகைகளில் பயன்படுத்தப்படும். சுவாசக் கோளாறு இருந்தால், நெஞ்சுப் பகுதியில் இதை தடவும் வழக்கமும் உண்டு. இந்த பச்சைக் கற்பூரத்திற்கு தாகம், வறட்சியை போக்கக் கூடிய தன்மை உள்ளது. வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்கும். இதையெல்லாம் விட, புத்திசாலித்தனத்தை துாண்டக் கூடியது. வாத, பித்தத்தை சமன் செய்யக் கூடியது.
வெயில் காலத்தில் இதன் பயன்பாடு அதிகம். விஷத்தை போக்கக் கூடிய தன்மையும் இதில் உண்டு; கண்களுக்கும் நல்லது.
உடல் பருமன் அதிகம் இருந்தால், கொழுப்பைக் குறைப்பதற்கு, 10 - 20 கிராம் பச்சைக் கற்பூரத்துடன், 100 மில்லி கடுகு எண்ணெய் சேர்த்து, லேசாக காய்ச்சி, வெதுவெதுப்பான சூட்டில் கொழுப்பு உடலில் சேரும் இடங்களில் தடவினால் கொழுப்பைக் கரைக்கலாம்.
சுவாசக் கோளாறுகளுக்கு தரப்படும் ஆயுர்வேத மருந்துகள் பலவற்றில் பச்சைக் கற்பூரம் சேர்க்கப்படுகிறது. ஆனால், ரத்த அழுத்தக் கோளாறு, வலிப்பு, 'பார்க்கின்சன்' பிரச்னை இருப்பவர்கள் இதை பயன்படுத்தக் கூடாது. வீட்டு வைத்தியம், பச்சை கற்பூரம் சேர்த்த மருந்துகளை தவிர்க்க வேண்டும்.
இது, பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். தினசரி உணவில் சிறிதளவே பயன்படுத்த வேண்டும். அளவு அதிகமானால் வாந்தி, எரிச்சல், மயக்கம் வரும்.
டாக்டர் எம்.ஹரி கிருஷ்ணன்,
ஆயுர்வேத மருத்துவர், சென்னை.
80159 58409
