தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கிட்டப் பார்வையால் வந்த பொருளாதார வளர்ச்சி!

கிட்டப் பார்வையால் வந்த பொருளாதார வளர்ச்சி!

கிட்டப் பார்வையால் வந்த பொருளாதார வளர்ச்சி!


PUBLISHED ON : பிப் 19, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 19, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நுாறு ஆண்டுகளுக்கு முன், கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர், மீன் பிடி கிராமமாக, காலனி ஆதிக்கத்தில் இருந்த போது, 'மயோபியா' எனப்படும் கிட்டப் பார்வை தொடர்பாக, பிரிட்டிஷ் மருத்துவக் குழு நடத்திய ஆய்வில், கிட்டப் பார்வையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 10 சதவீதமாக இருந்தது.

இன்று, வளர்ச்சி அதிகரித்த நிலையில், சிங்கப்பூரில், கிட்டப் பார்வை பாதிப்பு, தொற்று நோய் போல ஆகி, 80 சதவீதம் பேரை பாதித்து உள்ளது.

ஒரு வகுப்பில், 10 மாணவர்கள் இருந்தால், எட்டு பேருக்கு கண்ணாடி போட வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. ஒரு சமுதாயமே, கிட்டப் பார்வை சமுதாயமாக மாறி விட்டது.

பரிணாம வளர்ச்சி



உலக நாடுகளை ஒப்பிடும் போது, ஆப்ரிக்காவில், பார்வை குறைபாடுகள் மிகவும் குறைவு.

பரிணாம வளர்ச்சியில் மனித இனம் தோன்றிய போது, துாரப் பார்வைக்காகவே, இயற்கையில் கண்கள் உருவாகின. வேட்டையாடுவது, விவசாயம் ஆகிய இரண்டும், பிரதான தொழிலாக இருந்ததால், இயல்பாகவே, துாரத்தில் இருப்பதை மட்டுமே பார்ப்பதற்கு கண்கள் பயன்பட்டன; கண்களில் எந்த கோளாறும் ஏற்படவில்லை.

தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த சமுதாயத்தில், படிப்பது, கம்ப்யூட்டர், மொபைல் போன் பயன்படுத்துவது என்று, கண்களுக்கு அருகில் வைத்தே அனைத்தையும் பார்க்கிற போது, குறிப்பாக, மங்கலான வெளிச்சத்தில், கண்களில் நீட்சி ஏற்பட்டு, விரிந்து, கிட்டப் பார்வை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்பட்டு விடுகிறது.

ஒரு தலைமுறையே கிட்டப் பார்வையுடன் இருப்பதை உணர்ந்த சிங்கப்பூர் அரசு, வகுப்பறையைத் தவிர்த்து, வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபட, அனைத்துப் பள்ளிகளையும் கட்டாயப்படுத்தி உள்ளது.

பரிசோதனை



ஆரம்பப் பள்ளிகளில், கண் பரிசோதனையை கட்டாயப்படுத்த வேண்டும் என்று, இங்கு நாங்கள், தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

மேற்கு ஆசியாவில், அரபு நாடான ஓமனில், பார்வை குறைபாட்டை கண்டறிய, அரசு, அருமையான நடைமுறையை பள்ளிகளில் செயல்படுத்துகிறது. நான்கு, ஏழு, மற்றும் 10ம் வகுப்பு என்று மூன்று வகுப்புகளில், கண் பரிசோதனையை கட்டாயமாக்கி உள்ளது.

நான்காம் வகுப்பில், ஒரு குழந்தைக்கு கிட்டப்பார்வை இருப்பது தெரிந்தால், ஏழாம் வகுப்பு வரும் வரை, பார்வை குறைபாடு அதிகரிக்காமல் இருக்க, தேவையான பயிற்சிகளை தருகிறது.

ஏழாம் வகுப்பில், பார்வை குறைபாடு எந்த அளவு இருக்கிறது என்பதை மீண்டும் பரிசோதித்து, 10ம் வகுப்பு வரும் போது, குறைபாடு மேலும் தீவிரமடையாமல் இருக்க, தேவையானதை செய்கிறது. மிகவும் புத்திசாலித்தனமான செயல்!

ஐந்து வயதில், கண் பார்வையை பரிசோதிப்பது நல்லது. பிறவியில் இருந்தே கிட்டப் பார்வை இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள இது உதவும்.

உடல் வளர்ச்சி அடையும் போது, 15 வயது வரை தான், மூளையில் கண்களுக்கான கட்டுப்பாடு மையம் வளர்ச்சி அடையும். 11 - 18 வயது வரை பெண் குழந்தைகளுக்கும், 11 - 21 வயது வரை ஆண் குழந்தைகளுக்கும் கண் வளர்ச்சி இருக்கும்.

ஆனால், 15 வயதிலேயே பார்வைத் திறனைப் பரிசோதித்து, குறைபாடு இருந்து, கண்ணாடி அணியாவிட்டால், மூளையில் உள்ள பார்வை மையம் வளர்ச்சி அடையாமல், 'ஆம்பிலோப்பியா' என்ற சோம்பல் கண்கள் பிரச்னை வந்து விடும். ஆண்டிற்கு ஒரு முறை, கண் பரிசோதனை செய்ய வேண்டும்.

எளிதாக புரிய வேண்டும் என்றால், நமக்கு இரண்டு கைகள் உள்ளன. இரண்டிலும் எலும்பு, தோல், தசைகள், ரத்த நாளங்கள் எல்லாம் ஒன்றாகவே உள்ளன.

ஆனால், வலது கையால் எழுத முடியும் அளவிற்கு, இடது கையால் எழுத முடியாது. காரணம், துவக்கத்தில் இருந்தே, எழுதுவதற்கு வலது கையை பயன்படுத்துவதால், அந்தக் கையை இயக்கும் மூளையின் பகுதி, துாண்டப்பட்டபடியே இருக்கும்.

அதே போல, இரண்டு கண்களையும் இயக்கும் மூளையின் மையப் பகுதி, சம அளவில் துாண்டப்பட்டால் மட்டுமே, வளர்ச்சி நன்றாக இருக்கும்.

மனநலம்



பார்வை கோளாறை கண்டுபிடிக்காமல் விட்டால், தனக்கு இருக்கும் பார்வை திறன் தான் மற்றவருக்கும் இருக்கும் என, குழந்தை நினைக்கும்.

அதேபோல, 'யூனிலேட்டரல் மயோபியா' என்ற குறைபாடு ஒன்று உள்ளது. ஒரு கண்ணில் மட்டும் இருக்கும் பார்வை குறைபாடு இது. இப்படி ஒரு கண்ணில் மட்டும் குறைபாடு இருந்தாலும், குழந்தைக்குச் சொல்லத் தெரியாது.

பார்வை குறைபாடு உள்ள குழந்தைகள், எதிலும் வெளிப்படையாக இல்லாமல், தங்களுக்குள்ளேயே ஒடுங்கி விடுவர்; மற்றவர்களுடன் இயல்பாக பழக மாட்டார்கள்.

வகுப்பறையில், கரும்பலகையில் எழுதுவதை பார்க்க முடியாமல், பக்கத்தில் இருப்பவரைப் பார்த்து எழுதும் பழக்கம் வந்து விடும். இது, நாளடைவில் தன்னம்பிக்கையை போக்கி விடலாம். கோளாறை கண்டறிந்து கண்ணாடி அணிந்தால், மேலே கூறிய பிரச்னைகள் வராமல் தடுக்க முடியும்.

கேரட்



கேரட் நிறைய சாப்பிட்டால், கண்கள் திறன் நன்றாக இருக்கும் என்பது பொதுவான நம்பிக்கை. பார்வைத் திறன் சீராக இருக்க, 'விட்டமின் ஏ' அவசியம். அது, கேரட்டில் இருக்கிறது. விட்டமின் ஏ குறைபாடு இருந்தால் மட்டுமே, கேரட் பலன் தரும்.

இருபது ஆண்டுகளுக்கு முன், விட்டமின் ஏ குறைபாடு பொதுவான விஷயமாக இருந்தது. தற்போது, தமிழகம் போல வளர்ந்த மாநிலங்களில், பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களிடம் கூட இந்த குறைபாடு இல்லை; காரணம், ஊட்டச்சத்து குறைபாடு பிரச்னையிலிருந்து நாம் வெளிவந்து விட்டோம்.

ஒரே தேசம்



கண்ணாடி அணிவதை, வட மாநிலத்தவர்கள் விரும்புவதில்லை; அது, தங்கள் முக அழகை கெடுப்பதாக நினைக்கின்றனர். அதனால், பார்வை கோளாறுக்கு, பெரும்பாலும், 'லேசிக், லேசர்' அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர்.

தென் மாநிலங்களில், பார்வை கோளாறுகளுக்கான அறுவை சிகிச்சைக்கு முக்கியத்துவம் தருவதில்லை. மேற்கு வங்கம், ஒடிசா போன்ற மாநிலங்களில் கண்ணாடி அணிவது, அறிவு ஜீவித் தோற்றமாக கருதப்படுகிறது. அங்கு, அறுவை சிகிச்சையே செய்து கொள்வதில்லை.

எனவே, சிங்கப்பூர் போல, நம் அரசும், பள்ளிக் குழந்தைகளின் பார்வைத் திறனில் கவனம் செலுத்தி, அவர்களைப் பேண வேண்டும்.

டாக்டர் என்.வெங்கடேஷ் பிரஜ்னா,

கண் மருத்துவர்,

அரவிந்த் கண் மருத்துவமனை,

மதுரை.

0452 - 4356500

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us