PUBLISHED ON : மார் 24, 2013
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தனி மனிதர்கள், பல்வேறு அமைப்பினர் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இப்போராட்டங்களுக்கு பலன் இருக்கிறதோ, இல்லையோ, தொடர் உண்ணாவிரதத்தால், போராட்டத்தில் ஈடுபடுவோரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மரணம் ஏற்படும் அபாயம் உள்ளது என, மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
தொடர் உண்ணாவிரதத்தால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து விளக்குகிறார், சென்னை, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, ஆர்.எம்.ஓ., ஆனந்த் பிரதாப்: இருபது வயது நிரம்பிய, 50 கி.கி., முதல், 60 கி.கி., வரை, எடையுள்ள ஒரு நபர், 5 முதல் 7 நாட்கள் வரையிலும், அவ்வப்போது நீர் மட்டும் அருந்தினால், 10 நாட்கள் வரையிலும், தொடர் உண்ணாவிரதம் இருக்க முடியும்.
ஏழு நாட்களுக்கு மேல், உண்ணாவிரதம் இருப்பவர்களின் இரைப்பையில், வழக்கத்தை விட அதிகளவில் அமிலம் சுரக்கும். இதனால், அவர்களுக்கு இரைப்பை, குடல் ஆகிய இடங்களில், புண் ஏற்படுகிறது. மேலும், உணவுக் குழாய் மற்றும் குடல் சவ்வுகள் சுருங்கி ஒட்டிக் கொள்வதால், அவர்கள், வாந்தி, விக்கல், ரத்தவாந்தி, மயக்கத்திற்கு ஆளாக நேரிடும். சிறுநீர் வெளியேறுவது குறைந்து, சிறுநீரக கோளாறும் ஏற்படும்.
மூளை, இதயம் போன்ற முக்கிய உறுப்புகளுக்கு, தேவையான அளவு, குளுக்கோஸ் சத்து கிடைக்காமல், உண்ணாவிரதம் இருப்பவர்கள், 'ஹைப்போ கிளைசிமிக் கோமா' எனும் நிலைக்கு தள்ளப்படுவர். கூடவே, வலிப்பு நோயும் ஏற்பட்டு, மரண அபாயத்திற்கு அவர்கள் ஆளாகின்றனர்.
உண்ணாவிரத போராட்டம், தற்கொலை முயற்சியாக கருதப்படும் இன்றைய சூழலில், தங்கள் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல முயல்வோர், உண்ணாவிரதத்தை தவிர்த்து, பிற அறவழிகளில் போராடுவதே, அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்திற்கும் நல்லது.
கண் மருத்துவ நிபுணர் ஆனந்த் பிரதாப், ஆர்.எம்.ஓ.,
சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை