தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/நலம் நம் பலம்: தோல் நோய்க்கு அழைப்பு விடும் காம்பினேஷன் கிரீம்கள் உஷார்

நலம் நம் பலம்: தோல் நோய்க்கு அழைப்பு விடும் காம்பினேஷன் கிரீம்கள் உஷார்

நலம் நம் பலம்: தோல் நோய்க்கு அழைப்பு விடும் காம்பினேஷன் கிரீம்கள் உஷார்


PUBLISHED ON : ஏப் 12, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 12, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: ''உடல் உள் உறுப்புகளை பாதுகாக்கும் மிக பெரிய உறுப்பு தோல். அதில் 3,000 மேற்பட்ட நோய்கள் வருகின்றன. பல நோய்களை முற்றிலும் குணப்படுத்தலாம்; சிலவற்றை கட்டுப்படுத்த மட்டுமே முடியும்,'' என்கிறார், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, தோல் மருத்துவ பிரிவு இணைபேராசிரியர், டாக்டர் ஆர்.மாதவன்.



* தோல் நோய்கள் ஏற்பட காரணம் என்ன?


நம் உடலில் மிக நீளமான உறுப்பு தோல் தான். இவற்றில் பாதிப்பு ஏற்பட நிறைய காரணங்கள் உள்ளன. குறிப்பாக, சத்தான உணவு உட்கொள்ளாமை, ஹார்மோன் மாற்றங்கள், வேர்வை வறட்சி, துாக்கமின்மை, மன உளைச்சல், சுற்றுச்சூழல் மாறுபாட்டால் ஏற்படும் அலர்ஜி நோய்கள், அதிக கெமிக்கல் பயன்படுத்துவது, மற்றும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை தொற்று போன்றவற்றால் தோலில் பாதிப்பு ஏற்படும். தோலில் அலர்ஜி ஏற்பட பல உள்ளன. அலர்ஜி ஏற்பட்டால், அது எதனால் வருகிறது என, முதலில் அறிநந்து, அதற்கான மருந்துகளை உட்கொள்ள வேண்டும். வெளியே தோலில் தெரியும் கரும்புள்ளிகள் எல்லாம் மரு அல்ல. மரு என்பது வைரஸ் கிருமியால் உருவாகிறது. அதற்கு கடைகளில் கிடைக்கும் ஆசிட் வாங்கி பயன்படுத்தக்கூடாது.

தோலில் ஏற்படும் கொப்புளங்கள், அலர்ஜி, சொறி, சிரங்கு, பூஞ்சை காளான் நோய்கள்(படர் தாமரை நோய்) தோலின் நிறம் மாறுதல், வெண்புள்ளி நோய், என்று ஒவ்வொரு பாதிப்பின் பின்னணியிலும் இருக்கும் காரணங்கள், ஒவ்வொருவருக்கும் மாறும். ஒருவருக்கு தோல் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை மற்றவர்கள் சுயமாக வாங்கி பயன்படுத்தினால், குணப்படுத்த முடியாத அளவுக்கு தீவிரமாகலாம்.

சமூக வலைதளங்களில், தோல் நோய்களுக்கு, நிபுணர்கள் அல்லாத பலர் மருந்துகளை பரிந்துரைக்கின்றனர். இவர்களை நம்பி அதை பயன்படுத்தினால், ஆபத்தான பின்விளைவுகளை சந்திக்க கூடும். மருந்து கடைகளில் தடை செய்யப்பட்ட 'காம்பினேஷன்' மருந்துகளை சுயமாக வாங்கி பயன்படுத்தி, நோய் தீவிரமடைந்த பிறகு, அரசு மருத்துவமனைக்கு வருவோர் அதிகம்.

* காம்பினேஷன் மருந்துகள் பயன்படுத்த கூடாதா?

மருத்துவர் பரிந்துரை இல்லாமல், தோல் வியாதிக்கு எந்த காம்பினேஷன் மருந்துகளும் பயன்படுத்த கூடாது. இதை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவும் போது, அப்பகுதி வெளியில் சரியாகி விட்டதாக தோன்றும். அந்த இடத்தில் அரிப்பு குறையலாம். ஆனால், அக்கிருமிகள் முழுமையாக அழிக்கப்படாமல் பெருகி அப்படியே இருக்கும். இது மீண்டும் வேறு வடிவில் விஸ்வரூபம் எடுக்கும்.

தோல் பரிசோதனை, ரத்த பரிசோதனை செய்த பிறகே, மருந்துகளை பரிந்துரைக்கிறோம். எந்த பரிசோதனையும் செய்யாமல், மருத்துவர் பரிந்துரை இல்லாமல், எந்த மருந்துகளும் பயன்படுத்த கூடாது.

* தோல் வியாதி இருப்பவர்கள் பின்பற்ற வேண்டியவை என்ன?

முதலில் மருத்துவ சிகிச்சை பெற முன்வர வேண்டும். மூன்று வாரத்தில் சரியாக வேண்டிய ஒரு பாதிப்புக்கு, தாமத சிகிச்சையால் ஆண்டுக்கணக்கில் மருந்து எடுத்து கொள்ளும் நிலையை தவிர்க்க வேண்டும். தோலில் ஏற்படும் சில தொற்று நோய்கள், காற்று மூலம் பரவக்கூடியவை. வீட்டில் யாரேனும் இப்பாதிப்பில் இருந்தால், அவர்களின் பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்த கூடாது. மருந்து சாப்பிடும் போது ஏதேனும் பின்விளைவுகள் இருந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.



*தோல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது எப்படி


இந்தியர்களின் தோலில் மெலனின் நிறமிகள் சரியாகவே இருக்கின்றது. நம் நிறத்திற்கு இதுதான் காரணம். இதை மிகவும் வெள்ளையாக்க வேண்டுமென, அதீத கெமிக்கல் நிறைந்த பல கிரீம்களை போடுவதால், தோல் தடிமன் குறைந்து ரத்த குழாய் தெரியும் அளவுக்கு வெளுத்துவிடும். இதனால் எளிதில் தோலில் தொற்று பாதிப்பு ஏற்படும். எந்த கிரீம் பயன்படுத்துவதாக இருந்தாலும் எவ்வளவு காலம், எந்த நோக்கத்திற்காக பயன்படுத்த வேண்டுமென, மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

காய்கறி, கீரைகள், பழங்கள், அதிக தண்ணீர் குடிப்பது, உடற்பயிற்சி நல்ல உறக்கம் என்று வாழ்வியல் முறைகளை மாற்ற வேண்டும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல, நமது உள் உறுப்புகளின் ஆரோக்கியம் நமது தோலில் தெரியும்.

தொடர்புக்கு: madhavan.ramamoorthy@gmail.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us