ஆரோக்கியம் நிறைந்த முதுமை இந்திய பொருளாதாரத்தை காக்கும்
ஆரோக்கியம் நிறைந்த முதுமை இந்திய பொருளாதாரத்தை காக்கும்
PUBLISHED ON : செப் 07, 2025
உலக பிசியோதெரபி தினம் நாளை(செப்.,8) கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டின் கருப்பொருள் ஆரோக்கியம் நிறைந்த முதுமை. சாதாரண குடும்பத்தில் 60 வயது முதியவருக்கு மடக்க முடியாத அளவுக்கு முழங்கால் வலி. நடந்தாலே மூச்சுத் திணறல். அவரை கவனிக்க மகன், வேலை நாட்களை இழக்கிறார். பேரன் படிப்பு, விளையாட்டு கவனிக்கப்படாமல் போகிறது.
இதுதான் இன்றைய இந்திய குடும்பங்களின் நிலை. ஒருவரின் உடல்நலச் சவால், ஒரு குடும்பத்தின் வாழ்வையே சவாலுக்கு உள்ளாக்குகிறது. இன்று இந்தியாவில் முதியோரின் சுகாதாரச் செலவுகள் குடும்ப வருமானத்தில் 20-25 சதவீதம் வரை செல்கின்றன என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. நோயால் வேலை செய்ய முடியாத முதியோருடன் அவர்களை கவனிக்கும் குடும்பத்தினரும் வேலை நாட்களை இழக்கின்றனர். இதனால் நாட்டின் உற்பத்தித் திறன் ஆண்டுதோறும் பில்லியன் டாலர்களால் பாதிக்கப்படுகிறது.
பொருளாதார வளர்ச்சி
ஒரு ஆரோக்கியமான முதியவர் தனது குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் சொத்து. தற்சார்புடன் வாழும் மூத்தவர்கள் தன்னார்வ சேவை, கல்வி, குடும்ப ஆலோசனை போன்ற துறைகளில் முன்னோடி பங்களிப்பு செய்ய முடியும். உலக சுகாதார அமைப்பின் மதிப்பீட்டின்படி 10 சதவீதம் கூடுதல் ஆரோக்கிய முதுமை ஏற்பட்டால், ஒரு நாட்டின் ஜி.டி.பி.,யில் 0.5-1 சதவீதம் உயர்வு ஏற்படும்.
முதியோரின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் பிசியோதெரபியின் பங்கும் உண்டு. பிசியோதெரபி, ஆரோக்கிய முதுமைக்கு மிக முக்கிய ஆதாரம். வலி குறைப்பு மற்றும் மூட்டு இயக்கம், கீழே விழுவதை தடுத்தல், சமநிலையில் இருத்தல், சுவாசப் பயிற்சி, சுயசார்பு வாழ்வாதாரம் மூலம் முதியோர் சுயமாக வாழும் திறனை பெறுகின்றனர். இதன் மூலம் குடும்பச் சுமை குறையும், நாட்டின் வளர்ச்சி விகிதம் மேம்படும். வயது முதிர்வு தவிர்க்க முடியாத ஒன்று. ஆரோக்கியம் நிறைந்த முதுமை என்பது நம் கைகளில் உள்ள வாய்ப்பு அல்லது தேர்வு. பிசியோதெரபிஸ்ட்கள், அந்த தேர்வை எளிதாக்கும் வழிகாட்டிகள்.
பள்ளி, கல்லுாரிகளில் உடற்பயிற்சி கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும். தினமும் அரைமணி நேரம் உடற்தகுதிக்கான பயிற்சி திட்டங்களை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இன்று உடற்பயிற்சி பழக்கத்தை உருவாக்கும் மாணவர், நாளை நோயற்ற குடும்பத்தை உருவாக்குவார்.
- வெ. கிருஷ்ணகுமார்
தலைவர், இந்தியன் அசோசியேஷன் ஆப் பிசியோதெரபிஸ்ட்கள் - தமிழ்நாடு கிளை