மூலிகை மருத்துவம் : "சீரியல்' சிக்கல்கள் - கந்திவேர் என்ற ”கந்தமந்திரி
மூலிகை மருத்துவம் : "சீரியல்' சிக்கல்கள் - கந்திவேர் என்ற ”கந்தமந்திரி
PUBLISHED ON : அக் 02, 2011
நமது அன்றாட பழக்க வழக்கங்களே பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக அமைந்துவிடுகின்றன. அன்றாட வாழ்வில் ஏற்படும் சோர்வை நீக்க பொழுதுபோக்குக்காக தோன்றிய பல நிகழ்வுகளே நமது அன்றாட வாழ்க்கையாகவும் வாடிக்கையாகவும் மாறும்பொழுது உடலிலும் மனதிலும் பலவித சிக்கல்கள் தோன்றுகின்றன.
ஒளி ஊடகங்களின் ஆதிக்கத்திற்கு முந்தைய நிலையில் ஏற்படுத்தப்பட்ட மேடைநாடகம், ஆட்டம் போன்ற நிகழ்ச்சிகள் மனதிற்கு சுறுசுறுப்பையும் மூளைக்கு சிந்தனையையும், உடலுக்கு பயிற்சியும் தருவதாக இருந்தன. ஆனால் தற்சமயம் ஒளி ஒலி பெட்டிகளின் முன் அமர்ந்துகொண்டு பார்க்கும் காட்சிக்கள் நமது உடலில் பலவித பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
கண்களை உறுத்தும் பிரகாசமான ஒளி அமைப்பினால் கண்களைச்சுற்றி கருவளையம், அருகில் அமர்ந்து பார்ப்பவர்களுக்கு, காது மற்றும் மூளையின் பல நரம்புகளில் பாதிப்பு ஏற்படுவதால் விரைவில் கண்ணாடி, காது கேட்கும் கருவி அணிய வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதுடன், காது நரம்புகளின் கூர்மையும் குறைகிறது. நிகழ்ச்சியின் பொழுது ஏற்படும் ஒலி அதிர்வுகளின் தாக்கத்தினால் இதயத்துடிப்பு திடீரென ஏறி இறங்குவதுடன் வேகஸ் நரம்பு தூண்டப்பட்டு, வயிற்றுக்குள் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் சுரப்பு அதிகமாகி, கடுமையான வயிற்றுப்புண்கள் உண்டாகின்றன.
ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமருவதால் கழுத்து, முதுகு, இடுப்பு முள்ளெலும்புகளில் திரவம் வற்றி, எலும்பு தட்டுகள் தடம்மாறி, தண்டுவட கோளாறுகள், கை கால்களில் மதமதப்பு, எலும்பு மற்றும் நரம்பு சார்ந்த நோய்களை ஏற்படுத்துகின்றன. ஒளி ஒலி காட்சியில் ஏற்படும் திகிலான நிகழ்வுகள் மறுநாளும் தொடர்வதால், குடும்பத்தில் உள்ள நபர்களின்மேல் கவனம் குறைந்து குழப்பம் ஏற்படுவதுடன் மனதும் பாதிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தைரியம், எதையும் சாதிக்கும் திராணியற்ற மனப்பாங்கு, சந்தேக குணம், எதிர்மறையான எண்ணங்கள் அதிகரித்து மனநோய் உண்டாகிறது. இதுபோன்ற சிக்கல்களை உண்டாக்கும் சசீரியல்களை தவிர்த்து, மன அமைதியை ஏற்படுத்தும் தியானம், மூச்சுப்பயிற்சி ஆகியவற்றை செய்துவரலாம்.
சீரியல் பார்ப்பதால் தோன்றும் பலவித சிக்கல்களை நீக்கி, உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரும் நறுமண மூலிகைதான் கந்திவேர் என்ற சுகந்தமந்திரி. ஏரேசியே குடும்பத்தைச் சார்ந்த கிழங்குடைய கந்திச் செடிகள் நறுமண மருத்துவத்தில் பெரிதும் பயன்படுகின்றன. இவற்றிலுள்ள லினலுல், டெர்பின், சபினின் போன்றவை முதுகு தண்டுவட வலியை கட்டுப்படுத்துகின்றன. இதிலுள்ள மஞ்சள் நிற நறுமண எண்ணெய் மனநோய்களுக்கு பயன்படுகின்றன. கிழங்குகளிலுள்ள டிரைஹைடிராக்சி யுடெஸ்மோன் என்னும் பொருள் உடல்வலியை குறைத்து, ஆழ்ந்த தூக்கத்தை உண்டாக்குகிறது. சுகந்தமந்திரி வேர்கிழங்கை அரைத்து, அரை முதல் ஒரு கிராம் தினமும் இரண்டு வேளை 15 நாட்கள் சாப்பிட்டுவர மனம் புத்துணர்ச்சி அடையும். தண்டுவட வலி நீங்கும். சுகந்தமந்திரி நறுமண எண்ணெயை மருந்துக்கடைகளில் வாங்கி, 2 அல்லது 3 சொட்டுகள் பாலுடன் கலந்து இரவில் சாப்பிட்டுவர மனக்குழப்பம் நீங்கும். குளிக்கும் நீரில் 5 சொட்டுகள் சுகந்தமந்திரி எண்ணெயை கலந்து குளித்துவர, நாள் முழுவதும் புத்துணர்ச்சி ஏற்படும். அசாம், கர்நாடகா போன்ற மாநிலத்தில் இந்த எண்ணெய் தயார் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
குழந்தை மருத்துவத்தில் ஏராளமான சித்த மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. பாரம்பரியமாகவே உரை மாத்திரை, பாலசஞ்சீவி மாத்திரை, ஓமவள்ளி மாத்திரை, ஓமாதி உருண்டை, கணை எண்ணெய், நாக்கணை எண்ணெய், சர்வாங்க தைலம், சங்காதி மாத்திரை, துளசி மாத்திரை, மகாதுளசி மாத்திரை, துளசி தைலம், கற்பூராதி தைலம், காயத்திருமேனி தைலம், இரைக்குழம்பு போன்ற குழந்தை மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் சுகாதாரமற்ற சூழ்நிலையில் வளர்ந்தாலும்கூட, குழந்தைகளிடம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக திகழ்ந்தன. நோய்களின் தாக்கமும் குழந்தைகளுக்கு குறைவாகவே இருந்தது. இவற்றின் பயன்பாடு குறைந்த காரணத்தால், தற்சமயம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, அடிக்கடி கிருமித்தொற்றினால் அவதிப்படுகின்றனர். ஆகவேதான் தற்சமயம் குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்திக்காக வழங்கப்படும் பல்வேறு ஆங்கில மருந்துகளிலும் மூலிகைகள் பெருமளவு சேர்க்கப்படுகின்றன. அத்தி, பிரம்மி, சீந்தில், வல்லாரை, பப்பாளி, ஆலிவிதை, சோம்பு, சீரகம, ஓமம், குரோசணி ஓமம், வசம்பு போன்றவற்றிலிருந்து பப்பாயின், லின்சீட், அனீஸ், கேரவே, டினோஸ்போரின், குமின் போன்ற பல வேதிச்சத்துக்கள் பிரித்தெடுக்கப்பட்டு, ஆங்கில மருந்துகளுடன் கலந்து விற்பனை செய்யப்படுகின்றன.
நான் மூக்கடைப்பிற்காக நீண்டநாள் பொடி போடுகிறேன். இதனை எப்படி நிறுத்தலாம்?
சிற்றரத்தை, சுண்டை வேர், வெங்காரப்பொடி ஆகியவற்றை சுத்தம் செய்து, இடித்து, பொடித்து, துணியில் முடிந்து, லேசாக நாசியால் முகர்ந்துகொண்டேவர, கொஞ்சம் கொஞ்சமாக மூக்கடைப்பு குறைந்து, பொடி உபயோகப்படுத்தும் எண்ணம் மறையும்.
-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மதுரை. 98421 67567.
