இளம்வயதினரை பாடாய்படுத்தும் முகப்பரு பிரச்னைக்கு இதோ தீர்வு!
இளம்வயதினரை பாடாய்படுத்தும் முகப்பரு பிரச்னைக்கு இதோ தீர்வு!
PUBLISHED ON : ஜூலை 23, 2020

''கடைகளில் விற்கப்படும் சிவப்பழகு கிரீம்களால், தோலின் நிறம் மாறாது; மாறாக பாதிப்பைதான் ஏற்படுத்தும்,'' என்று எச்சரிக்கிறார், அரசு மருத்துவனையின் சரும நோய் சிறப்பு மருத்துவர் மாதவன்.
கொரோனா தொற்று ஏற்பட்டால், அதன் அறிகுறிகள் சருமத்தில் வெளிப்படுமா?
கொரோனா நுரையீரலை பாதிக்கும் போது, சருமத்தில் அலர்ஜி மாதிரி, சிவந்த புண் போன்ற அறிகுறிகள் இருப்பது, 10 சதவீதம் பேருக்கு தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ், ரத்த குழாயையும் பாதிப்பதாக கூறப்படுகிறது. அதன் பாதிப்பு, தோலில் உள்ள ரத்த நாளங்களிலும் வெளிப்படும்.
ஊரடங்கால், தோலுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?
நான்கு மாதங்களாக வெளியில் செல்லாமல் இருப்பதால், வெயிலில் இருந்து கிடைக்கும் விட்டமின் 'டி' சத்து பலருக்கு கிடைப்பதில்லை. இதன் பற்றாக்குறையால் எலும்பு பலவீனம் அடையும். முடி உதிரும். ரத்த அழுத்தத்தில் ஏற்ற தாழ்வுகள் வரும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இயற்கையாக விட்டமின் டி, வெயிலில் இருந்து மட்டும்தான், அதிகம் கிடைக்கிறது. விட்டமின் டி குறைபாட்டை தவிர்க்க, மருத்துவரை பார்த்து விட்டமின் 'டி' மாத்திரைகளை வாங்கி சாப்பிடலாம். வீட்டு மொட்டை மாடிகளில், காலை வெயிலில் சிறிது நேரம் கழிக்கலாம்.
சோரியாசிஸ் பிரச்னை எதனால் வருகிறது ?
நம் மக்கள் தொகையில், ஐந்து சதவீதம் பேருக்கு சோரியாசிஸ் பிரச்னை உள்ளது. சிலருக்கு பரம்பரையாகவும், சுற்றுச்சூழல் மாசு காரணமாகவும் வருகிறது. கை, கால், தலை, கழுத்து பகுதி மட்டுமல்லாமல், சிலருக்கு உடல் முழுவதும் பாதிப்பு இருக்கும். இதை கட்டுப்படுத்தலாம்; முழுமையாக குணப்படுத்த முடியாது.
இளவயதினரை முகப்பரு பாடாய்படுத்துகிறதே...?
இன்று பலர், சிவப்பாக வேண்டுமென்பதற்காக, அழகு சாதன கிரீம்கள் மற்றும் ஸ்டீராய்டு கிரீம்களை பயன்படுத்துகின்றனர். சிலருக்கு இளவயது ஹார்மோன் மாற்றங்களால் முகப்பரு ஏற்பட்டாலும், முகப்பருவுக்கும் படர்தாமரைக்கும், இந்த கிரீம்களே முக்கிய காரணம். இந்த கிரீம்களால் கண்டிப்பாக, முகம் சிவப்பாக மாறாது. தோல் பாதிப்பு அதிகமாகும். நாளடைவில் முக சருமத்தில் தேய்மானம் ஏற்பட்டு, ரத்த நாளங்கள் வெளியில் தெரிய துவங்கி விடும். பால் பொருட்கள் மற்றும் பேக்கரி உணவு தவிர்க்கவும். கீரை, காய்கறி அதிகம் சாப்பிடலாம்.
தோல் வறட்சிக்கு காரணம் என்ன ?
தோல் வறட்சி, குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்குதான் அதிகமாக இருக்கும். கொழுப்பு சத்து குறையும் போது, இப்பிரச்னை வருகிறது. இதற்கு, வழவழப்பான எண்ணெய் தன்மை உள்ள (மாய்ச்சரைசிங்) சோப்பு பயன்படுத்த வேண்டும். சோப்பு அதிகமாக பயன்படுத்தக் கூடாது. முட்டை, மீன் அவசியம் சாப்பிட வேண்டும். கால்சியம், விட்டமின் சத்துள்ள உணவும் நல்லது.
