PUBLISHED ON : டிச 01, 2013

எஸ்.சமுத்திரராஜன், மதுரை: வெளிநாட்டில் பணியாற்றுவதற்காக, மெடிக்கல் செக்கப் செய்தபோது, எக்கோ பரிசோதனையில் ஏ.எஸ்.டி., என வந்துள்ளது. இது என்ன வியாதி, இதனால் வெளிநாடு செல்ல முடியுமா?
ATRIAL SEPTAL DEFECT என்பதன் சுருக்கமே ஏ.எஸ்.டி. இது, இருதயத்தின் மேல் இருபாகங்களுக்கு இடையே பிறவியில் இருந்தே இருக்கும் ஒரு ஓட்டையைக் குறிக்கும். பெரும்பாலானோருக்கு இவ்வியாதியால் பாதிப்பு ஏற்படாது. இந்த ஓட்டையை கண்டுபிடித்துவிட்டால் அவசியம் மூடிவிட வேண்டும். இதற்கு இருவழிகளில் சிகிச்சை அளிக்கப்படுகின்றன. ஒன்று, 'டிவைஸ் குளோசர்' எனும் ஆப்பரேஷன் இல்லாத சிகிச்சை. மற்றொன்று 'சர்ஜிக்கல் குளோசர்' எனப்படும் ஆப்பரேஷன் முறையில்
ஓட்டையை மூடும் சிகிச்சை. இவ்விரண்டு சிகிச்சை முறையில் உங்களுக்கு எந்த முறைமூலம் சிகிச்சை அளிப்பது என்பதை உங்கள் இருதய டாக்டரே அறிவார். எனவே, இவ்வியாதியை கண்டு அஞ்சாமல் உடனடியாக சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள். சிகிச்சை முடிந்து 3 மாதம் கழித்து நீங்கள் வெளிநாட்டு பணிக்குச் செல்ல இயலும்.
எஸ்.சதாசிவம், திண்டுக்கல்: எனக்கு பைபாஸ் சர்ஜரி செய்து 9 மாதங்களாகிறது. சென்னையில் (லிப்ட் வசதி இல்லாத) அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் வசிக்கும் எனது மகள் வீட்டில் ஒருமாதம் தங்க உள்ளேன். நான் மாடிப்படி ஏறி இறங்கலாமா?
பைபாஸ் சர்ஜரி என்பது இருதய ரத்தநாளங்களில் இருக்கும் அடைப்பை ஆப்பரேஷன் முறையில் நெஞ்சில் இருந்தோ, கால், கைகளில் இருந்தோ ரத்தநாளங்களை எடுத்து இருதயத்தில் பொருத்தும் சிகிச்சையாகும். பொதுவாக, சிகிச்சை முடிந்து 3 மாதங்கள் கழித்து, ரத்தம், சிறுநீர், மார்பக எக்ஸ்ரே, எக்கோ, டிரெட் மில் பரிசோதனைகள் செய்யப்படும். இவற்றின் முடிவுகள் அனைத்தும் நார்மலாக இருந்தால், நீங்கள் தாராளமாக அனைத்து வேலைகளையும் எளிதாக செய்ய இயலும். இருப்பினும், இருதய
நோயாளிகள் அனைத்து வேலைகளையும், உடல், மனரீதியாக பதட்டமோ, டென்ஷனோ இன்றி, நிதானமாக செய்ய கற்றுக்கொள்ள வேண்டும். மாடிப்படியில் ஏறும்போது மெதுவாக சில படிகள் ஏறி, சிலநொடிகள் நின்று, மறுபடியும் ஏறுவது சிறந்த பழக்கமாகும். தொடர்ச்சியாகவும், வேகமாகவும் பல படிகளை ஏறுவதை தவிர்ப்பது
நல்லது.
பி. ஜோசப்ராஜன், விருதுநகர்: எனது வயது 67. ஏழு ஆண்டுகளாக உயர் ரத்தஅழுத்தம் உள்ளது. இதற்காக ATENOLOL 50mg என்ற மருந்தை தொடர்ந்து எடுத்து வருகிறேன். இம்முறை டாக்டரை சந்தித்தபோது அவர், 'NEBIVOLOL 5mg என்ற மருந்தை தந்துள்ளார். இம்மருந்தை தொடர்ந்து எடுக்கலமா?
நெபிவோலால் என்பது இருதய மருத்துவத்தில் மிகச்சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது. இது ரத்தஅழுத்தத்தை நன்கு குறைப்பதுடன், பக்கவிளைவும் மிகக் குறைவு. இது இருதயத்தில் உள்ள ரத்தநாளங்களை விரிவடையச் செய்யும் தன்மை படைத்தது. அதுமட்டுமின்றி, இருதய கோளாறுக்கு மிகவும் பலன் அளிப்பதாக தெரியவந்துள்ளது.
பல காரணங்களால் குறிப்பாக பக்கவிளைவு போன்றவற்றால், அடினோலால் என்ற மருந்தை தற்போது பயன்படுத்துவதில்லை. எனவே நீங்கள் நெபிவோலால் மருந்தை தவிர்த்துவிட்டு, அடினலால் மருந்தை எடுப்பது நல்லதுதான்.
- டாக்டர் சி.விவேக்போஸ்,
மதுரை. 0452- 233 7344

