PUBLISHED ON : ஜூன் 15, 2025

கால்சியம் குறித்து, எலும்பியல் டாக்டர்களிடமே தவறான கருத்துகள் நிலவுகின்றன.
உணவில் இருந்து போதுமான அளவு கால்சியம் கிடைக்காமல் குறைபாடு ஏற்பட்டால், டாக்டரின் ஆலோசனைப்படி 'சப்ளிமென்ட்' மாத்திரைகள் சாப்பிடலாம். இதற்கு ரத்த பரிசோதனை செய்து, எந்த அளவு குறைபாடு உள்ளதோ அதற்கேற்ப மாத்திரைகளை பரிந்துரைப்போம்.
இந்த சப்ளிமென்ட் மாத்திரைகள் அனைத்தும் நன்மை தரக்கூடியது என்ற பொதுவான எண்ணம் டாக்டர்களிடமும் உள்ளது.
தேவைக்கு அதிகமாக சத்து மாத்திரைகளை சாப்பிடும் போது, இதயம், சிறுநீரக, செரிமானக் கோளாறுகள் போன்ற தீவிர பாதிப்புகள் ஏற்படும். இது போன்றது தான் 'வைட்டமின் டி' சப்ளிமென்டும்.
ரத்த பரிசோதனை செய்யும் போது, இயல்பாக வைட்டமின் டி எந்த அளவு இருக்க வேண்டும் என்பதை எந்த பரிசோதனை ரிப்போர்ட்டிலும் குறிப்பிட மாட்டர்கள். இயல்பான அளவு என்ன என்பதற்கு அளவுகோல் நிர்ணயிக்கப்படவில்லை.
தற்போதைய சூழலில் இது சர்ச்சைக்குரிய விஷயமாக உள்ளது.
வைட்டமின் டி-யின் அளவு 30 என்.ஜி.,/எம்.எல்., என்ற அளவிற்கு குறைவாக இருந்தால், எலும்பு, பற்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். இந்த அளவிற்கு குறைவாக இருந்தால், மாத்திரைகளை பரிந்துரைக்கலாம்.
அதே சமயத்தில், 'மெட்பாலிக் ஹெல்த்' எனப்படும் உடல் உள்செயல்பாடுகளுக்கும் வைட்டமின் டி அவசியம். இதன் இயல்பான அளவை நிர்ணயிக்க முடியாததற்கு காரணம், வெறும் எலும்பு, பல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல; மெட்டபாலிசத்திற்கும் அவசியம் என்பதால், தனி நபரின் தேவையை பொருத்து இந்த அளவு நபருக்கு நபர் மாறுபடலாம்.
ஹார்மோன்கள் சீராக சுரந்தால் தான் உடலின் உள்செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கும். அதனால் தான் வைட்டமின் டியையும் ஹார்மோன் என்கிறோம்.
டாக்டர் சி.விஜய் போஸ்,
மூட்டு மாற்று அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர்,
சிம்ஸ் மருத்துவமனை, சென்னை
96777 15223, 044 - 2000 2001
enquiry@simshospitals.com