PUBLISHED ON : ஆக 24, 2014

தாய்ப்பால் கொடுப்பது எப்படி? இந்தோனேசியாவில் பாடம் நடக்கிறது
இந்தோனேசியா போன்ற நாடுகளில், குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டுதல் பற்றியும், தாய்மார்களுக்கு பால் கட்டி கொண்டால், எப்படி பராமரிப்பது என்பது பற்றியும், சொல்லிக் கொடுப்பதற்கு, தனி அமைப்புகள் இருப்பது, எத்தனை பேருக்கு தெரியும்.அந்தளவுக்கு தாய்ப்பாலின் மகத்துவம் அறிந்து செயல்படுகின்றனர் அங்கே. அதற்கிணையாக இங்கே, அந்த பணியை, பெண்ணின் குடும்பத்தினர் சிறப்புற செய்து வருகின்றனர். அவர்கள் தான், பிரசவித்த பெண்ணுக்கு, தாய்ப்பால் எப்படி கொடுப்பது என்பதை சொல்லித் தருகின்றனர் என்கிறார், சென்னை, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையின் முன்னாள் இயக்குனர் டாக்டர் கிருஷ்ண
குமாரி.
தாய்ப்பாலின் மகத்துவத்தை விளக்குவதற்காக, இந்த மருத்துவமனை சார்பில், இயக்குனர் டாக்டர் சுந்தரி தலைமையில், ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதில், குழந்தைகள் நல டாக்டர்கள் பலர் பேசினர். அவர்கள் கூறிய முக்கிய தகவல்கள் இங்கே: டாக்டர் பரமகுரு:
அந்த காலத்தில், ஒவ்வொரு பெண்ணும், தன் குழந்தைக்கு மூன்று ஆண்டுகள் முதல், நான்கு ஆண்டுகள் வரை தாய்ப்பால் கொடுத்தனர். இன்று, மூன்று மாதம் கூட முழுமையாக தர முடியாத நிலையில், பெண்கள் உள்ளனர். இதற்கு மருத்துவ ரீதியாக காரணம் தேடக் கூடாது.
என்றைக்கு குடும்ப உறவுகளை உதறி விட்டு, தனிக் குடித்தனத்திற்கு சென்றனரோ, அதனால் வந்த பிரச்னை தான் இது. தனிக் குடித்தனத்திற்கும் தாய்ப்பாலுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்பது தான், மருத்துவ கண்டுபிடிப்பு.
டாக்டர் ஹேமமாலினி:
பாட்டில் மூடியை திறந்தோமா, ஆரோக்யா பாலோ, ஆவின் பாலோ ஏதாவது ஒன்றை ஊத்தினோமா என்கிறது இல்லை, தாய்ப்பால் புகட்டுவது. இதில், தாய்மார்களுக்கு ஆர்வமும் ஈடுபாடும் வர வேண்டும். இல்லையென்றால், தாய்ப்பால் கிடைக்காது. தாய்ப்பாலின் தாரக மந்திரமே, 'Willing Mother and A Sucking Child' என்பது தான். தாயிடமிருந்து பாலை உறிய, குழந்தை நிறைய சிரமப்படும். ஆனால், புட்டியில் பால் அருந்த குழந்தை அதிகம் சிரமப்படாது. அதனால், புட்டிப் பாலையே குழந்தை அதிகம் விரும்பும். எது நன்மை என்பது அதற்கு தெரியாது. அதை, 'Nipple Confusion' என்று, மருத்துவ ரீதியாக குறிப்பிடுகிறோம்.
டாக்டர் கோமதி ப்ரியா:
தாய்மார்களுக்கு, முதல் மூன்று நாட்கள், பால், நீர் போல் வரும். அதன் பெயர், சீம்பால். அதனால், குழந்தைக்கு பால் பற்றாது என்று, புட்டிப் பால் கொடுக்கின்றனர். இது தவறு. குழந்தைக்கு முதல் ஆறு மாதம், தாய்ப்பால் தான் சிறந்தது. தாய்ப்பால் கொடுக்காமல் இருந்தால், பால் கட்டி, அதில் கிருமி தொற்று ஏற்பட்டு விடும். மீண்டும் பால் சுரக்காமல் போய், நோய்
முற்றி விடும்.
டாக்டர் ராஜேந்திரன்:
ஒரு தாய், தன் சேய்க்கு பால் புகட்ட வேண்டுமானால், அந்த தாய்க்கு சத்தான உணவு அவசியம். பிரசவித்த பெண்களுக்கு முதலில் சத்து நிறைந்த உணவுகளை கொடுக்க வேண்டும். இன்றைய தாயால், ஆறு மாதத்திற்கு மேல் பால் கொடுக்க முடியாமல் போவதற்கு, அவருக்கு ஏற்படும் மன உளைச்சலும், வேலைப்பளுவும் தான் காரணம். அதற்கு காரணம், தனிக்குடித்தனம்.

