குடற்புழுக்களை இயற்கையான முறையில் நீக்குவது எப்படி?
குடற்புழுக்களை இயற்கையான முறையில் நீக்குவது எப்படி?
PUBLISHED ON : செப் 06, 2020

குழந்தைகளுக்கு வயிற்றில் குடல் புழுக்கள் உருவாக, நிறைய காரணங்கள் இருக்கின்றன. இதில் முக்கியமானது, கண்ணுக்கு தெரியாத நுண்ணிய கிருமிகள் வயிற்றுக்குள் செல்வதால், அவை குடல் புழுக்களை உருவாக்கும். அடிக்கடி நகம் கடிப்பது, சுகாதாரம் இல்லாத உணவை சாப்பிடுவது, கைகளை கழுவாமல் உணவு சாப்பிடுவது, இனிப்பு பண்டங்களை அடிக்கடி சாப்பிடுவது போன்றவை, குடற்புழுக்கள் உருவாக முக்கிய காரணங்கள்.
குழந்தைகளுக்கு வயிற்றில் குடற்புழுக்கள் இருந்தால், சாப்பிடும் உணவில் உள்ள நுண்ணுாட்டச் சத்துக்களை, இப்புழுக்கள் சாப்பிட்டு விடுவதால், ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்; இதனால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, அடிக்கடி நோய் தொற்று ஏற்படலாம். குடற்புழுக்களை இயற்கையான முறையில் வெளியேற்றம் செய்வது நல்லது.
கொட்டைப் பாக்கில் உள்ள துவர்ப்பு தன்மை, குடற்புழுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. கொட்டைப் பாக்கை இடித்து துாளாக்கி, உலர்ந்த பாட்டிலில் ஈரம் படாமல் வைத்து, இதிலிருந்து கால் டீ ஸ்பூன் எடுத்து, வெதுவெதுப்பான நீரில் குழைத்து, காலையில் வெறும் வயிற்றில் குழந்தையின் நாக்கில் தடவி விட வேண்டும்.
வெதுவெதுப்பான நீருக்கு பதில், ஏடு நீக்கிய கால் டம்ளர் பாலில், கால் டீ ஸ்பூன் கொட்டைப் பாக்கு துாளை கலந்தும், குடிக்க கொடுக்கலாம்.தொடர்ந்து, மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு இப்படி செய்யும் போது, இயற்கையான முறையில், வயிற்றில் உள்ள குடற்புழு வெளியேறி விடும்.
பொடித்த கருஞ்சீரகத் துாள் ஒரு ஸ்பூன் எடுத்து, வெதுவெதுப்பான நீரில் கரைத்து குடிக்க கொடுப்பதாலும், குடற்புழுக்கள் நீங்கும். குடற்புழுக்கள் சேருவதை தவிர்க்க, வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை, மதிய உணவில் கேரட் பொரியல் செய்து, குழந்தைக்கு சாப்பிட தர வேண்டும்.
இது தவிர, பூசணி விதைகளை உலர்த்தி வைத்து, மாலை நேரத்தில் சிற்றுண்டியாக தரலாம். இவற்றில், இயற்கையாக உள்ள, 'அடிமனோ' அமிலம், குடற்புழுக்கள் வயிற்றில் சென்று தங்குவதை தடுக்கிறது. தினமும் தேங்காயை சாப்பிடத் தருவது, மஞ்சள், பூண்டு சேர்ந்த உணவை குழந்தைகளுக்கு தருவதால், குடற்புழுக்கள் வயிற்றில் சேருவதைத் தடுக்க முடியும்; இயற்கையான முறையில் குடற்புழுக்களை நீக்கவும் முடியும்.
அளவுக்கு அதிகமாக துாங்கினால் உடல் பிரச்னைகள் ஏற்படுமா?
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவு எந்த அளவு முக்கியமோ, அதேபோல, நிம்மதியான துாக்கமும் அவசியம். மனிதனாக பிறந்த அனைவருக்கும், ஏழு முதல் எட்டு மணி நேரம் வரை துாக்கம் அவசியம். இந்த அளவு துாக்கம் இல்லாவிட்டால், நிறைய உடல் பிரச்னைகள் ஏற்படும்.
சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். உடல் பருமன் ஏற்படும். 'தினமும் எட்டு மணி நேரம் துாங்குபவர்களை விடவும், அதற்கு மேல் துாங்குபவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு, நான்கு மடங்கு அதிகம் உள்ளது' என்று, ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அதிக நேரம் துாங்கினால், மூளையில் உள்ள நரம்புகளில் பாதிப்பு ஏற்படும்; தலைவலி ஏற்படும்; இடுப்பு வலி, கை, கால் வலி ஏற்படும். அதிக நேரம் துாங்குபவர்களுக்கு உடல் சோர்வு ஏற்படும்; நாள் முழுக்க மந்தமாக உணர்வர்.
தினமும், எட்டு மணி நேரத்திற்கும் அதிகமாக துாங்குபவர்களுக்கு, இதயம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம். தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு துாங்கச் சென்று, துாங்கும் நேரத்தில் இருந்து ஏழு - எட்டு மணி நேரம் ஆழ்ந்த நிம்மதியான துாக்கம் இருந்தால் உடம்பும், மனதும் ஆரோக்கியமாக இருக்கும்.
மாதவிடாய் சுழற்சியை மாத்திரைகள் சாப்பிட்டு, தள்ளிப் போடுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன?
கோவில் விழாக்கள், திருமண நிகழ்ச்சி, வெளியூர் செல்ல வேண்டிய நாட்கள் என, பல காரணங்களுக்காக, அந்த நாளில் மாதவிடாய் வந்து விடக் கூடாது என்று, மாத்திரை சாப்பிட்டு தள்ளி போடுவது, பொதுவான விஷயமாக உள்ளது. தற்காலிகமாக மாதவிடாயை தள்ளிப் போடுவதால், பிற்காலத்தில் கரு தரிப்பதிலேயே பிரச்னைகள் ஏற்படலாம்.
அடுத்தடுத்த மாதம் ஏற்படும் மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்படும். மாத்திரை சாப்பிடும் போது, மாதவிடாய் தள்ளிப் போகும். மாத்திரையை நிறுத்தியதும் மாதவிடாய் ஏற்படும். இப்படி, தாமதமாக ஏற்படும் போது, அளவுக்கு அதிகமான இடுப்பு வலி, வயிற்று வலி, பிறப்புறுப்பில் வலி, உடல் சோர்வு, மயக்கம் ஏற்படலாம்.
உடலின் உறுப்புகள் இயக்கத்திற்கும், ஹார்மோன் சுரப்பிற்கும் நேரடியாக தொடர்பு உள்ளது. மாத்திரை சாப்பிட்டு மாதவிடாய் தள்ளிப் போடுவதால், ஹார்மோன் சுரப்பிலும் மாற்றம் ஏற்படலாம். சில பெண்கள், தாங்களாகவே அடிக்கடி மாத்திரைகளை சாப்பிட்டு, மாதவிடாயை தள்ளிப் போடுகின்றனர்.
இப்படி செய்வதால், கல்லீரல், நரம்பு கோளாறு, கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள், மிகவும் அதிகம். எவ்வித பிரச்னையும் இல்லாமல் இருக்கும் போது, நாமாகவே அடிக்கடி சில மாத்திரைகளை சாப்பிடுவதால், அது பல பிரச்னைகளை ஏற்படுத்தும்.
மாதவிடாய் சுழற்சி என்பது, இயற்கையில் ஏற்படக் கூடியது; அதை, நாமாகவே மாத்திரை சாப்பிட்டு தள்ளிப் போடுவது என்பது, மோசமான விளைவுகளையே உண்டாக்கும்.
ஊரடங்கில் உணவுகள்
வைரஸ் தொற்று காரணமாக, குழந்தைகள் வீட்டிலேயே இருப்பதால், விதவிதமான உணவுகளை அவர்களுக்கு தயாரித்து தர வேண்டும் என, பல பெற்றோர் விரும்புகின்றனர்; இது பெரிய தவறு. அதிலும், 'யு டியூப்' சேனல்களை பார்த்து, தினமும் விதவிதமாக சமைத்து தரும் பெற்றோரும் இருக்கின்றனர்.
இந்த சேனல்களில் செய்து காட்டப்படும் உணவுகளை பார்த்தால், பெரும்பாலும் பிரதானமாக மைதா, வெள்ளை சர்க்கரை என்று பயன்படுத்துகின்றனர். பார்த்தவுடன் சாப்பிடத் துாண்டும் வகையில் உணவின் தயாரிப்பு, நிறம் இருக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் நோக்கம்.
மைதா, வெள்ளை சர்க்கரை இரண்டும் நோய் எதிர்ப்பு சக்தியை, பல மடங்கு குறைக்கும் தன்மை கொண்டதோடு, அதில் எவ்வித சத்துக்களும் இல்லை; வெறும் கலோரி மட்டுமே உள்ளது. ஊரடங்கு என்பது, குழந்தைகளை பாதுகாப்பாக, ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டிய நேரம்.
நுாடுல்ஸ், பாஸ்தா இவற்றில் எல்லாம், 'மோனோசோடியம் குளுட்டோமேட்' என்ற பதப்படுத்தும் வேதிப் பொருள் கலந்து உள்ளது; இதனால், குழந்தைகளின் ஆரோக்கியம், கண்கள் பாதிக்கும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள், பிஸ்கட் தவிர்க்க வேண்டும். எந்த உணவையும் மைதாவில் செய்யாமல், அதற்கு பதில் கோதுமை மாவில் செய்து தர வேண்டும்.
'ஆன் லைன்' வகுப்புகள் நடக்கும் இந்த நேரத்தில், கண்களின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். விட்டமின் ஏ சத்து அதிகம் உள்ள, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கேரட், தேனில் ஊறிய நெல்லிக்காய், புதினா, கீரை வகைகள் என்று, தினமும் குழந்தைகளின் உணவில் இடம் பெறும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
இத்துடன், ஆரஞ்,சு எலுமிச்சை, வெள்ளரி விதை, பூசணி விதை, பாதாம், வால்நட் சாப்பிட கொடுக்க வேண்டும். திரவ உணவுகள் போதுமான அளவு குடிக்க வேண்டும். தினமும் அரை மணி நேரமாவது, குழந்தைகளின் உடலில் சூரியஒளி படும்படி பார்த்துக் கொள்வது, விட்டமின் டி குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கும்.
டாக்டர் ஆர்.மைதிலி,
ஆயுர்வேத மருத்துவர், சென்னை.
99622 62988

