PUBLISHED ON : ஏப் 17, 2020

கொரோனாவை தடுக்க உலக நாடுகள் பல ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. நமது நாட்டிலும் மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இக்காலத்தில் குழந்தைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து கவனிக்க வேண்டும் என்கிறார் மதுரை குழந்தைகள் நல சிறப்பு நிபுணர் டாக்டர் முருகன்ஜெயராமன்.அவர் கூறியதாவது:
* ஊரடங்கால் அனைத்து தரப்பினருக்குமே மனஅழுத்தம் அதிகரிக்கலாம். ஆக்கப்பூர்வமான செயல்கள் மூலம் அதில் இருந்து விடுபட முடியும். குறிப்பாக இக்காலத்தில் குழந்தைகளுக்கு கூடுதல் அரவணைப்பும், பாதுகாப்பும் பெற்றோரிடம் இருந்து கிடைக்க வேண்டியது அவசியம்.
* பெற்றோர் தங்களின் அன்றாட வேலைகளை அட்டவணைப்படுத்தி மேற்கொள்ள வேண்டும். இதை அனைத்து நாளிலும் வழக்கப்படுத்த வேண்டும். தாங்கள் மேற்கொள்ளும் எளிதான சில வேலைகளில் குழந்தைகளையும் ஈடுபடுத்தலாம். அவர்களுடன் திறந்த மனதுடன் பேச, விளையாட பெருமளவு நேரத்தை ஒதுக்க வேண்டும்.
* வீட்டிலிருந்து விளையாடும் கேரம், செஸ், தாயம் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாட பிள்ளைகளை அனுமதிக்க வேண்டும். புத்தகம் படிக்கும் பழக்கத்தை உருவாக்கலாம். குழந்தைகளுக்கு போதிய ஓய்வு அவசியம். இசை, ஓவியம் வரைய பயிற்சி அளிக்கலாம்.
* வீட்டிலேயே அடைந்து கிடப்பது அவர்களுக்கு மனச்சோர்வை தரும். இதைபோக்க உறவுகளின் உன்னதத்தை புரிய வைக்க வேண்டும். வெளியில் போக முடியாது என்பதால், வாட்ஸ்அப் வீடியோ கால் மூலம் உறவினர்களிடம் குழந்தைகளை உரையாட அனுமதிக்கலாம்.
* ஊரடங்கு காலத்தில் பல வீடுகளில் குழந்தைகள் கணினி, அலைபேசியில் மூழ்கி கிடக்கின்றனர். இது இன்னும் அவர்களை பலவீனப்படுத்தும். இதை பெற்றோர் ஊக்குவிக்கக்கூடாது.
* பெற்றோரின் மனநிலை குழந்தைகளையும் பாதிக்கும். எனவே பெற்றோருக்கு மனச்சமநிலை அவசியம். பீதியை ஏற்படுத்தும் கொரோனா வதந்திகளை நம்பி வீண் பதட்டம் அடையக்கூடாது. அரசு சொல்லும் தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும். கொரோனா, ஊரடங்கு பற்றி குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் எடுத்துரைக்கலாம். பொய்யான தகவல்களை சொல்லக்கூடாது. சுய சுத்தம் பேணுவதன் அவசியத்தை எடுத்துரைக்க வேண்டும்.
* உலகில் பல தொற்றுகள் வந்து செல்கின்றன. கொரோனாவிற்கும் மருந்து கண்டுபிடிக்கப்படும். எனவே இந்த கொடுமையான காலமும் நிச்சயம் கடந்து போகும் என்ற நம்பிக்கை வேண்டும், என்றார்.
