PUBLISHED ON : ஜூலை 07, 2013

எஸ்.ராமகிருஷ்ணன், பெரியகுளம்: நாற்பத்து நான்கு வயதான எனக்கு, இரு ஆண்டுகளாக ரத்தக்கொதிப்பு உள்ளது. தற்போது கால்கள் இரண்டும் வீக்கமாக உள்ளன. இது எதனால்? நான் என்ன செய்வது?
கால்களில் வீக்கம் ஏற்படுவதை ஒரு போதும் அலட்சியப்படுத்த கூடாது. கால்களில் வீக்கம் ஏற்பட பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக ரத்தசோகை, இருதயம், சிறுநீரகம், கல்லீரல், தைராய்டு, வயிற்றில் சில பகுதிகளில் ஏற்படும் கோளாறுகள், ரத்தத்தில் புரோட்டீன் சத்து குறைவு மற்றும் கால்களில் ஏற்படும் சில பிரச்னைகள் மூலம் வீக்கம் ஏற்படலாம்.
இது எதனால் ஏற்படுகிறது என கண்டறிய, ரத்தம், சிறுநீர், எக்கோ, வயிற்று ஸ்கேன் பரிசோதனைகள் தேவைப்படும். இதுதவிர சில மருந்துகளாலும் கால்வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. ரத்தக் கொதிப்புக்கு எடுக்கப்படும் 'கால்சியம் பிளாக்கர்', 'அம்லோடிபின்' மருந்துகளாலும் ஏற்படலாம். கால்வீக்கம் எதனால் ஏற்படுகிறது என கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சை பெற வேண்டும்.
பி. பாலகிருஷ்ணன், பரமக்குடி: எனக்கு பைபாஸ் சர்ஜரி செய்து ஓராண்டாகிறது. எந்தப் பிரச்னையும் இல்லை. நான் ஏதேனும் பரிசோதனை செய்வது அவசியமா?
பைபாஸ் சர்ஜரி செய்த அனைவருக்கும், ஆப்பரேஷன் செய்த 3 மாதங்கள் முடிந்த பிறகு, முழுபரிசோதனை தேவைப்படும். அதன்பின், ஓராண்டுக்கு ஒருமுறை அவசியம் சில பரிசோதனைகள், அதாவது ரத்தம், சிறுநீர், மார்பக எக்ஸ்ரே, எக்கோ மற்றும் டிரெட் மில் பரிசோதனைகள் செய்யப்படும். இதில் இருதயத்தின் ஆரோக்கியம் எப்படி உள்ளது? என கண்டறிய முடியும். சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றின் செயல்பாடுகளையும் கண்டறியலாம். இவற்றின் முடிவுக்கு ஏற்ப, உங்களுக்கான மருந்துகள் மாற்றி அமைக்கப்படும்.
கே.ராஜாமணி, திருப்புத்தூர்: எனக்கு 9 ஆண்டுகளாக ரத்தத்தில் கொழுப்புச்சத்து உள்ளது. நான், 'சிம்வா ஸ்டேட்டின்-20 மி.கி.,' மாத்திரையை தொடர்ந்து எடுக்கிறேன். ரத்தத்தில் கெட்ட (எல்.டி.எல்.,) கொழுப்பு 79 மி.கி.,யும், நல்ல கொழுப்பு (எச்.டி.எல்.,) 43 மி.கி., என வந்துள்ளது. எனது டாக்டர் 'சிம்வா ஸ்டேட்டின்' மாத்திரையை நிறுத்திவிட்டு, 'அட்டோர்வா ஸ்டேட்டின்' மாத்திரையை தந்துள்ளார். இதை நான் தொடர்ந்து எடுக்கலாமா?
ஸ்டேட்டின் மாத்திரைகள், பல ஆண்டுகளாக உபயோகத்தில் உள்ள மிக அற்புதமான மருந்துகள். இம்மருந்தை எடுப்பவர்களுக்கு கெட்ட கொழுப்பு குறைக்கப்படுகிறது மற்றும் நல்ல கொழுப்பு அதிகரிக்கப்படுகிறது. இதுதவிர ரத்தநாளங்களில் அடைப்பு கூடாமலும், ரத்தநாள அடைப்பால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படாமலும் பாதுகாக்கப்படுகிறது. ஸ்டேட்டின் மாத்திரைகளில் பல வகைகள் உள்ளன. இதில், 'சிம்வா ஸ்டேட்டின், அட்டோர்வா ஸ்டேட்டின், ரொசுவா ஸ்டேட்டின்' முக்கியமானவை. இம்மூன்றுக்கும் சிறிய வேறுபாடுகள் இருந்தாலும், ஒவ்வொன்றுக்கும் சில தனித்தன்மைகள் உள்ளன. சிம்வா ஸ்டேட்டினை பொறுத்தவரை, அற்புத மருந்து. இம்மருந்து, 20 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து, அதன் செயல்பாடும், பக்கவிளைவு இல்லாததன்மையும் நிரூபிக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு எல்.டி.எல்., எச்.டி.எல்., அளவு சரியான வீதத்தில் உள்ளதால், சிம்வா ஸ்டேட்டின் மாத்திரையை தொடர்ந்து எடுப்பது நல்லது.
டாக்டர் சி.விவேக்போஸ்,
மதுரை. 0452- 233 7344