PUBLISHED ON : மார் 13, 2011
என் வயது 32; சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு இல்லை. மூன்று மாதங்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டது. தினமும் 2 அல்லது 3 சிகரெட்டுகள் பிடிக்கிறேன். வேறு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. எனக்கு மாரடைப்பு எதனால் ஏற்பட்டது?
என்.சிரஞ்சீவி, மதுரை:
மாரடைப்பு வர முதன்மையான காரணம் புகைப்பிடிக்கும் பழக்கமே. சமீபத்தில் நடந்த ஒரு மருத்துவ ஆராய்ச்சியில் சிகரெட்டால் இருதயத்திற்கு வரும் பாதிப்பு, சர்க்கரை, ரத்தக்கொதிப்பு போன்றவற்றால் வரும் தன்மையை விட அதிகம் என கூறப்பட்டுள்ளது.குறிப்பாக சிறு வயதில் ஏற்படும் மாரடைப்புக்கு புகைப்பழக்கமே முதன்மை காரணம். புகை பழக்கத்தால் ரத்தக்குழாயில் உள்ள சிறிய அடைப்புகளில் கீறல் ஏற்பட்டு ரத்தக்கட்டி உண்டாகி, மாரடைப்பு ஏற்படுகிறது.புகைப்பழக்கம் உடலின் பல பாகத்தையும் பாதித்தாலும், இருதயத்தையே அதிகம் பாதிக்கிறது. புகைப் பழக்கத்தை நிறுத்தினால், இருதயத்திற்கு கிடைக்கும் நன்மை, ஆஞ்சியோ பிளாஸ்டி, பைபாஸ் சர்ஜரியை விட அதிக பலன் தரும். எனவே, உங்கள் மாரடைப்புக்கு புகைப் பழக்கமே காரணம். அதை நிறுத்துவதே, உங்கள் இருதயத்திற்கு நீங்கள் செய்யும் முதல்படியான சிகிச்சை.
எனக்கு இருதயத்தில் உள்ள இரண்டு ரத்த நாளங்களில் 40 சதவீதம் அடைப்பு உள்ளது. நான்கு ஆண்டுகளாக இதற்கு மருந்து எடுத்து வருகிறேன். இம்முறை டாக்டரிடம் சென்ற போது, என் பழைய மாத்திரைகளுடன், TRIMETAZADINE என்ற மாத்திரையை தந்துள்ளார். இது என்ன மாத்திரை?
எஸ்.விஜயன், வத்தலகுண்டு
TRIMETAZADINE என்பது பல ஆண்டுகளாக இருதய ஆரோக்கியத்துக்கு உபயோகிக்கும் ஒரு மருந்து. இது பலவழிகளில் இருதயத்திற்கு நன்மை தருகிறது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு இதன் பலன் கூடுதலாக உள்ளது. இதன் செயல்பாடு இருதயத்தின் செல்களுக்கு பல வகைகளில் பலனளிக்கிறது. இது தவிர ரத்த நாளத்தில் அடைப்பு உள்ளவர்கள், இருதய பம்பிங் திறன் குறைந்தவர்கள், இருதய மின்னோட்டத்தில் வேறுபாடு உள்ளவர்களுக்கும் பலன் தருகிறது. எனவே, இதை தொடர்ந்து எடுப்பது நல்லது தான்.
நான் எப்போதும் பதட்டமான சூழலில் பணியாற்றி வருகிறேன். அலுவலகத்தில் பணிப்பளுவும்அதிகம். இது இருதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமா?
கே.ராஜ்குமார், விருதுநகர்
பதட்டமான சூழ்நிலையில் பணியாற்றுவோருக்கு உடல் ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக இருதயத்திற்கு பாதிப்பு ஏற்படும் தன்மை அதிகம். எந்நேரமும் பதட்டம், டென்ஷன் உள்ளவர்களுக்கு இருதய துடிப்பும், ரத்தக்கொதிப்பும் அதிகரிக்கிறது.ரத்தநாளங்களில் அடைப்பு ஏற்படுவதுடன், அதன் சுருங்கும் தன்மையும் அதிகரிக்கிறது. எனவே தான் பதட்டமான சூழ்நிலையை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. இது தவிர யோகா, தியானம் போன்றவையும் பெரிதும் உதவுகின்றன.
நான் பைபாஸ் சர்ஜரி செய்து இரண்டு மாதங்களாகிறது. இருசக்கர வாகனங்களை ஓட்டலாமா?
சி.சுவாமிநாதன், காரைக்குடி
பைபாஸ் சர்ஜரி என்பது, இருதய ரத்தநாளங்களின் அடைப்பை, நெஞ்சில் இருந்தோ, கை, கால்களில் இருந்தோ ரத்தநாளத்தை எடுத்து, இருதயத்தில் பொருத்தப்படும் அறுவை சிகிச்சை.பைபாஸ் சர்ஜரி செய்து மூன்று மாதங்கள் கழித்து, ரத்தம், சிறுநீர் பரிசோதனைகள், மார்பு எக்ஸ்-ரே, எக்கோ கார்டியோ கிராம், டிரெட்மில் பரிசோதனைகள் செய்யப்படும். இந்த பரிசோதனைகளின் அனைத்து முடிவுகளும் 'நார்மல்' என வந்தால் நீங்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டலாம்.
- டாக்டர் சி.விவேக்போஸ்,மதுரை
