கட்டிகள் வந்தால் அலட்சியம் வேண்டாம் பரிசோதனை செய்ய வேண்டும்
கட்டிகள் வந்தால் அலட்சியம் வேண்டாம் பரிசோதனை செய்ய வேண்டும்
PUBLISHED ON : ஏப் 19, 2026

உடலில் புதிதாக தோன்றும் கட்டிகள் இருந்தால், அலட்சியம் வேண்டாம்; மருத்துவ பரிசோதனை செய்து கொண்டால், ஆரம்ப நிலையில் புற்றுநோயை கண்டறிந்து, சிகிச்சை பெற முடியும் என்கிறார் ராயல் கேர் மருத்துவ மனையின் புற்றுநோய் மருந்தியல் துறை டாக்டர் நர்மதா ரத்னசாமி.
அவர் கூறியதாவது:
எந்த நிலையிலும் புற்றுநோயை கட்டுப்படுத்த முடியும்; குணப்படுத்த முடியும் என்பது மருத்துவ உலகில் சாத்தியமாகி உள்ளது. எந்த நிலையில் புற்றுநோய் உள்ளது என்பதை அறிந்து, அதற்கு ஏற்ற துல்லியமான சிகிச்சையை தர வசதிகள் உள்ளன. ஆரம்ப கட்ட அறிகுறிகள் இருக்கும்பேதே மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு உரிய சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
புற்றுநோய்களில் வெவ்வேறு வகைகள் உள்ளன. உடலின் எந்த பகுதியில் புற்றுநோய் வந்தாலும் அதற்கான அறிகுறிகள் இருக்கும். ஒரு இடத்தில் கட்டி தோன்றுதல், நீண்ட நாள் ஆறாத புண், பசியின்மை, எடை குறைதல், தொடர் இருமல், சளி, மலம், சிறுநீரில் ரத்தம் வெளியாகுதல், மலச்சிக்கல், நீண்ட நாள் காய்ச்சல் போன்றவை பொதுவான அறிகுறிகள். இந்த அறிகுறிகள் இருந்தால், ரத்தம், கட்டியின் திசுக்கள் உள்ளிட்டவைகளை பரிசோதனை செய்து புற்று நோய் உள்ளதா என்பதை உறுதி செய்யலாம். ஸ்கேன் செய்தும் இவற்றை உறுதி செய்யலாம்.
பரம்பரையாக மரபு வழியாக வரும் புற்றுநோய், புகையிலை பழக்கத்தால் ஏற்படும் புற்றுநோய் போன்ற காரணிகளை கண்டறிந்தால், அதற்கு ஏற்ற மருத்துவ சிகிச்சை பெறலாம். ஆரம்ப நிலை முதல் நான்கு நிலை வரை உள்ள புற்றுநோயை, மருந்து, அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை முறையை பயன்படுத்தி பயன்பெறலாம்.
முன்பு பயன்படுத்தி வந்த கீமோதெரபியால் முடி கொட்டுதல், வலி ஏற்படுதல் போன்ற சிரமங்கள் இருந்தன. இதற்கு மாற்றாக கீமோதெரபி அல்லாத சிகிச்சைகளும் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளன. கட்டி உள்ள இடத்தில் துல்லியமாக டார்கெட்டேட் சிகிச்சை அளித்தல், இம்யூனோ தெரபி சிகிச்சைகள் உள்ளன. ரத்த புற்றுநோய்க்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சையில் குணப்படுத்தும் முறைகளும் உள்ளன.
ராயல்கேர் மருத்துவமனையில் இதற்கென தனிப்பிரிவு செயல்பட்டு வருகிறது. துல்லியமாக புற்றுநோயின் வகையை கண்டறிய ஆய்வகங்கள், இயந்திரங்கள் போன்றவை உள்ளன. குடும்ப உறுப்பினர்களுக்கான ஆலோசனைகளும் வழங்கப் படுகின்றன.
இவ்வாறு, அவர் கூறினார்.
